கருவூலம்: நோபல் பரிசு
மனித இனத்திற்கு சேவை புரியும் மனம் கொண்டோருக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கெüரவப்படுத்துகிறார்கள்.
சிறுவர்மணிகருவூலம்: நோபல் பரிசு
மனித இனத்திற்கு சேவை புரியும் மனம் கொண்டோருக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கெüரவப்படுத்துகிறார்கள்.
மனித இனத்திற்கு சேவை புரியும் மனம் கொண்டோருக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கெüரவப்படுத்துகிறார்கள். அத்தகைய விருதுகளில் தலையாயது "நோபல் பரிசு' ஆகும். பெருஞ்செல்வந்தராய் இருந்த "ஆல்ஃபிரெட் நோபல்' அவர்களின் இறுதி உயிலில் ஒதுக்கிய பெரும் தொகையே நோபல் பரிசாக வழங்கப்படுகிறது.
ஆல்ஃபிரெட் பெர்ன்ஹார்டு நோபல் (ALFRED BERHARD NOBEL) 1833ஆம் ஆண்டு ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்தார். அவருக்கு நான்கு வயதான பொழுது அவரது குடும்பம் ரஷ்யாவிற்குக் குடிபெயர்ந்தது. அவரது தந்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தினார். அது வெற்றிகரமாக இயங்கவே பெரும் செல்வந்தரானார். ஆகவே நோபலுக்கு பாரீஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் திறமையாகக் கல்வி பயின்று தாம் ஒரு தேர்ந்த வேதியியல் வல்லுனர் என்பதை நிரூபித்தார்.
திடீரென்று ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தால் அவர் தந்தை நடத்திவந்த தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் நோபலின் குடும்பம் மீண்டும் ஸ்வீடனுக்கே திரும்பியது. வேதியியல் வல்லுனரான நோபல் வெடி மருந்து ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை நிறுவினார். அந்நாளில் தொழில் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டதால் சாலைகள் மலைப்பகுதிகளிலும், மலையைக் குடைந்தும் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாறைகளை உடைத்து சாலைகளை அமைப்பது பெரும் சவாலாக இருந்தது. எனவே "நைட்ரோ கிளிசரின்' என்ற வெடிபொருளைப் பயன்படுத்தி பாறைகளை உடைத்தனர். ஆனால் அந்த வெடிபொருள் காற்று பட்டவுடன் வெடித்தது. இதனால் அதனைக் கையாளும் தொழிலாளர்கள் பலர் அந்த இடத்திலேயே மாண்டு போயினர்.
பேராபத்து நிறைந்த இந்தப் பணிக்குப் பெரும்பாலும் சிறைக்கைதிகளையே பயன்படுத்தினர். இதைக் கண்டு நோபல் பெரும் மனவேதனை அடைந்தார். "சிறைக் கைதிகளும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே?...,அவர்களது உயிர் அத்தனை மலிவானதா?' என்று பலவாறு சிந்தித்தார். இதன் காரணமாக பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகு 1863ஆம் ஆண்டு "நைட்ரோ கிளிசரின் திரவம்' கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பாதுகாப்பாகக் கையாள முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
இதன் மூலம் சுரங்கம் தோண்டுதல், மலைகளைக் குடைந்து சாலைகள் அமைத்தல் போன்ற கடினமான பணிகள் மிக எளிமையாகவும், விரைவாகவும் நடந்தன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1864ஆம் ஆண்டு நோபலின் ஆராய்ச்சிக் கூடம் வெடித்துச் சிதறியது! இதில் அவரது இளைய சகோதரரும், மற்றும் பல தொழிலாளர்களும் இறந்து போயினர். அவரது குடும்பத்தினரும், அரசாங்கமும் வெடிபொருள் ஆராய்ச்சியைக் கைவிடுமாறு அவரைக் கேட்டுக் கொண்டன. ஆனாலும் அவர் தன் முயற்சியைக் கைவிடவில்லை. மிகச் சிறிய அளவில் தன் வீட்டின் பின்புறம் இருந்த வெட்டவெளியில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்த வண்ணமே இருந்தார்.
இதன் காரணமாக 1867ஆம் ஆண்டு நைட்ரோ கிளிசரினுடன் மற்றொரு வேதிப் பொருளைக் கலந்த பொழுது அது பாதுகாப்பானதாகவும், அதே சமயத்தில் அதிக சக்தியுடனும் வெடித்தது. சக்தியை "டைனமிஸ்'(ஈமசஅஙஐந) என்று கிரேக்க மொழியில் குறிப்பிடுவர். எனவே தாம் கண்டுபிடித்த பொருளுக்கு "டைனமைட்' என்று பெயரிட்டார். அதற்குக் காப்புரிமையும் பெற்றார். இதனால் பெருஞ்செல்வந்தர் ஆனார்.
1875 ஆம் ஆண்டு டைனமைட்டின் மற்றொரு சக்தி வாய்ந்த வடிவமாகிய "பிளாஸ்டிக் ஜெலட்டின்' (BLASTING GELATIN) என்ற வெடிபொருளைக் கண்டறிந்தார். 1887ஆம் ஆண்டு பாலிஸ்டைட் (BALLISTITE) என்ற புகையில்லாமல் வெடிக்கும் நைட்ரோ கிளிசரின் துகளைக் கண்டறிந்தார். ஆக்க வேலைகளுக்கு மட்டுமே தமது கண்டுபிடிப்பு பயன்படவேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவற்றால் பலர் இறந்து போயினர்.
ஒரு சமயம் ஃபிரான்சில் நோபலின் சகோதரர் ஒருவர் இறந்து போனார். ஃபிரெஞ்சுப் பத்திரிகை ஒன்று தவறுதலாக ஆல்ஃபிரெட் நோபல்தான் இறந்து விட்டார் என்று நினைத்து அவரது புகைப்படத்துடன் "மரண வியாபாரி இறந்து விட்டார்'(THE MERCHANT OF DEATH IS DEAD) என்று வெளியிடப்பட்டது.
இதனால் மனமுடைந்த நோபல் அன்று இரவே ஒரு உயிலைத் தயாரித்தார். அதில் தமது செல்வம் முழுவதும் மனித குலத்தின் நன்மைக்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்பவர்களுக்குப் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் இந்த உயிலின்படி செயல்பட நோபலின் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் ஸ்வீடன் அரசின் தலையீட்டால் உயில் சம்பந்தமான பிரச்னைகள் முடிவு பெற்றன. ஆல்ஃபிரெட் நோபல் 1896ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் மரணமடைந்தார். அவர் இறந்த ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தன்று அதாவது 1901ஆண்டு முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பரிசு பெறும் தனிநபர் மட்டுமல்லாது அவரது தேசமும் இதனால் பெருமை பெறுகிறது அல்லவா?
"நோபல் பரிசுகள்' பற்றி மேலும் சில சுவாரசியத் தகவல்கள்.
1901 முதல் 2015 வரை 573 நோபல் பரிசுகள் 900 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனர் "ஹென்றி டுனான்ட்' என்பவர்தான் முல் நோபல் பரிசு பெற்றவர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி ஆஸ்திரியாவைச் சேர்ந்த "பெர்த்தா வான் சட்னர்' ஆவார். இவர், "ஆயுதங்களைக் கீழே போடுங்கள்' என்ற புகழ் பெற்ற நாவலை எழுதினார். ஆஸ்திரியாவில் அமைதிச் சங்கத்தைத் தோற்றுவித்தார். இவருக்கு 1905ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதுவரை 49 பெண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்தியாவின் சார்பாக நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி அன்னை தெரஸô ஆவார். மேரி க்யூரி இரண்டு முறை நோபல் பரிசு பெற்றுள்ளார்.
மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் பாகிஸ்தானின் "மலாலா யூசூப் சாய்'. பரிசு பெறும்பொழுது அவருக்கு பதினேழு வயது ஆகும். 2014ஆம் ஆண்டில் அமைதிக்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
மிக அதிக வயதில் நோபல் பரிசு பெற்றவர் "லெனாய்டு ஹர்விக்ஸ்' ஆவார். 2007ஆம் ஆண்டு இவரது 90ஆவது வயதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேரி க்யூரியின் குடும்பமே நோபல் பரிசு பெற்ற குடும்பமாகும். மேரி க்யூரி இருமுறையும், அவரது கணவர் "பியர்ரி க்யூரி' ஒருமுறையும், அவரது மகன் "ஐரீன் ஜூலியட் க்யூரி' ஒரு முறையும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
ஆல்ஃபிரட் நோபல் டைனமைட்டை மட்டும் கண்டுபிடித்ததாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அன்றாடம் பயன்படும் சுமார் 350 அரிய பொருள்களையும் அவர் கண்டுபிடித்து அவற்றிற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். செயற்கை ரப்பர், செயற்கை பட்டு, செயற்கை தோல் போன்றவை அவற்றுல் சிலவாகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக "டைனமைட்' அவருக்குப் பெரும் புகழையும், செல்வத்தையும் தேடித் தந்தது.
நோபல் நிறைய நாவல்கள் மற்றும் கவிதைகளையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அனால் அவை ஒருவராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
இதுவரை நான்கு பேர் மட்டுமே இருமுறை நோபல் பரிசு பெற்றுள்ளனர். மேரி க்யூரி, (இயற்பியல் 1903, வேதியியல் 1911)..., லைனஸ் பாலிங் (வேதியியல் 1954, அமைதி 1963)....,ஜான் பர்தீன் (இயற்பியல் 1956, மற்றும் 1972)...,பிரெட்ரிக் சாங்கர் (வேதியியல் 1958, மற்றும் 1980).
சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கம் 1917, 1944 மற்றும் 1963 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை நோபல் பரிசு பெற்றுள்ளது.
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் "ரவீந்திரநாத் தாகூர்' ஆவார். 1913ஆண் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
இதுவரை இந்தியக் குடியுரிமை பெற்ற அயல் நாட்டவர்கள் 3 பேர், அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் 3 பேர், மற்றும் இந்தியாவிலேயே வசிக்கும் 5பேர் என மொத்தம் 11 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
இறப்புக்குப்பின் பரிசு வழங்குவதை நோபல் பரிசுக் கழகம் அனுமதிப்பதில்லை. 1948ஆம் ஆண்டு ஏறக்குறைய 23நாடுகள் மகாத்மா காந்தியை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்தன. ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் இப்பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை.
நோபல் பரிசு நிச்சயம் இவருக்குக் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்! ஆனால் அவருக்குக் கிடைக்கவே இல்லை! அவர், "லியோ டால்ஸ்டாய்'!