முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: பணிப்பெண் ஏன் சிரித்தாள்?

அரண்மனை தன்னில் நாள்தோறும் அயரா திருந்து பணிசெய்யும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

அரண்மனை தன்னில் நாள்தோறும்

அயரா திருந்து பணிசெய்யும்

பணிப்பெண் ஒருநாள் அரசனது

படுக்கையில் படுத்தாள் சோர்வாலே!

கண்கள் இருண்டு வந்ததனால்

கட்டிலில் அவளும் சாய்ந்து விட்டாள்!

எண்ணவும் அவளுக்கு நேரமில்லை

ஏழைப்பெண் அவள் தெம்பில்லை!

பூங்கா உலவல் முடிந்தவுடன்

புவியை ஆள்பவன் அங்கு வந்தான்!

கண்டான் அந்தக் காட்சியினை

"காட்டுக்கோபம்' அவன் கொண்டான்!

"இவளுக்கு எத்தனை திமிர் இருந்தால்

இந்தப் படுக்கையில் படுத்திருப்பாள்?

எதிரே இருக்கும் தூணினிலே

இவளைக் கயிற்றால் கட்டுங்கள்!'

கயிற்றால் கட்டினர் சேவகர்கள் - அரசன்

கையில் எடுத்தான் சாட்டையினை!

உயிரே போகும் அளவுக்குத் - தோலை

உரிக்க நினைத்தான்; பரிதாபம்!

அவளோ எதற்கும் கலங்கவில்லை!

அவனைப் பார்த்தாள், புன்சிரிப்பு!

"எவ்வளவு ஆணவம் உனக்கிருந்தால்

என்னைப் பார்த்து நகை செய்வாய்?'

"அரசே உந்தன் படுக்கையிலே

அறியாப் பெண் நான் படுத்துவிட்டேன்!

அதுவும் எனது பிழையில்லை

அப்படிச் செய்தது தலைச்சுற்றல்!

சற்றே இதிலே படுத்ததற்கே

சாட்டை அடிகள் எனக்கென்றால் - நீ

என்றும் இதிலே படுக்கின்றாய் - பின்னர்

எத்தனை அடிகள் உன்மீது

விழுமோ என்று சிந்தித்தேன் - அதன்

விளைவே இந்தப் புன்சிரிப்பு!'

அவளது சொல்லை அவன் கேட்டான் - அதில்

அடங்கி இருந்தது பேருண்மை!

அதனை உணர்ந்தான், "ஆணவத்தால்

அறிவை இழந்தேன் மன்னிப்பாய்!'

என்றே அவளை விடுவித்தான்!

ஏழையின் அறிவுத் திறம் வியந்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.