முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்: பூச்செடித் தேனடை

தந்தை: தேனரசு, நீதான் நம்ம பேட்டை நலச்சங்கம் நடத்துற பூச்செடி வளர்ப்புப் போட்டியிலே கலந்துக்கிட்டிருக்கே...,நாலு மாசமா இந்தச் செடியைக் கண்ணும் கருத்துமா வளர்க்கிறே... நிறைய மொட்டுகளும் வந்திருக்கு...,பூக்கற சமயம்! ஆடு, மாடு உள்ளே நுழைஞ்சுடாம பாத்துக்கணும்!

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

கட்சி-1

இடம்- தேனரசு வீடு / தோட்டம்

மாந்தர்- தேனரசு, தந்தை, பூவிழி.

தந்தை: தேனரசு, நீதான் நம்ம பேட்டை நலச்சங்கம் நடத்துற பூச்செடி வளர்ப்புப் போட்டியிலே கலந்துக்கிட்டிருக்கே...,நாலு மாசமா இந்தச் செடியைக் கண்ணும் கருத்துமா வளர்க்கிறே... நிறைய மொட்டுகளும் வந்திருக்கு...,பூக்கற சமயம்! ஆடு, மாடு உள்ளே நுழைஞ்சுடாம பாத்துக்கணும்!

தேனரசு: சரிப்பா!

தந்தை: நலச்சங்கத்துக்காரங்க உன்னோட இந்தச் செடிக்கு என்ன பேர்னு சொன்னாங்க?

தேனரசு: "பெண்டாஸ் லான்ஷியோலடா'ன்னு சொன்னாங்க. இதை குண்டு செண்டுப் பூச்செடின்னும் சொல்லலாமாம்! இளஞ்சிவப்பு நிறத்துலே குண்டுகுண்டா சுமார் நூற்றி ஐம்பது பூ வரைக்கும் பூக்குமாம்!

பூவிழி: ஓ! அப்படியா?

தேனரசு: நம்ம பேட்டையிலே நாற்பது பேர் இந்தச் செடியை வளர்த்துக்கிட்டு வராங்க...,நிறைய பூ பூக்கற செடிக்கு முதல் பரிசா இரண்டாயிரம் ரூபாயாம்!

தந்தை: சரி, உள்ளே போகலாம். நல்ல வெயில்!

காட்சி-2

இடம்-வீடு / தோட்டம்

மாந்தர்- தேனரசு, பூவிழி, தந்தை.

தேனரசு: அப்பா! இங்கே வந்து பாருங்க...,செடிக்குள்ளே வட்டமா, தடிப்பா ஏதோ தெரியுது...

தந்தை: தள்ளு...,இது தேனடை தேனரசு! உள்ளே நிறைய தேனீக்கள் இருக்கும். வெளியே வந்தா கொட்டிடும்!

தேனரசு: அப்ப நான் செடிகிட்டே போகவே முடியாதா? எப்படி செடிக்கு தண்ணி விடறது....,எரு போடறது...? எப்படி செடி நல்லா வளர்ந்து பூத்து நான் பரிசு வாங்கறது?

பூவிழி: தேனடையை எப்படியாவது எடுத்துடுங்கப்பா! போட்டி கடைசி நாளுக்கு இன்னும் மூணு வாரந்தான் இருக்கு.

தந்தை: செடிக்கு அடியிலே நெருப்பை மூட்டி எரியச் செய்தா புகை வரும். அந்தப் புகை தாளாம தேனீக்கள் பறந்து போயிடும்.

பூவிழி: நல்ல ஐடியாப்பா! அப்படியே செய்துடுங்க!

தேனரசு: ஐயோ! வேண்டாம்...! நெருப்பு சூடு பட்டா இலைகள் தீஞ்சுடும். கிளைகள் பூ மொட்டுகள் கருகிடும்!

தந்தை: சரி, அந்த நீண்ட மூங்கிலைக் கொண்டு வா! குத்திக் குத்தி தேனடையைக் கலைச்சுடலாம்.

தேனரசு: அப்படிச் செய்தா கிளை, இலைகள் அடிபடும். துளிர்கள் நசுங்கிடும். பூமொட்டுகள் உதிர்ந்திடும்.

தந்தை: அப்போ பொறுமையா இரு. தேனடை எடுக்கற ஆளை வரவழைக்கிறேன்.

தேனரசு: நாளைக்கே வரச்சொல்லுங்கப்பா!

காட்சி - 3

இடம் - தேனரசு வீடு / தோட்டம்

மாந்தர் - தேனரசு, பூவிழி, தந்தை, அம்மா, செயலாளர், போட்டோகிராபர்.

தேனரசு: என்னப்பா...,தேனடை எடுக்கற ஆள் இன்னிக்கும் வரலே.

தந்தை: போன் தொடர்பு கிடைக்கலே....,நண்பர் கிட்டேயும் சொல்லி வெச்சிருக்கேன்.

தேனரசு: இன்னும் நாலு நாள் கழிச்சு வந்தா என்ன செய்யறது?

தந்தை: செடி பாழாகாம தேனடையை எடுக்கணும்னா பொறுத்துத்தான் ஆகணும்.

தேனரசு: ஆனா, என் செடிகளுக்கு அடிமண்ணைக் கிளறி அடிக்கடி எரு போடணும். அப்பதான் பூக்கள் நல்லா பெரிசா மலரும்..., நிறைய மொட்டுகள் வரும்னு சொல்லியிருக்காங்க.

தந்தை: வேணாம். தேனீக்கள் கொட்டிடும். வலி தாங்க முடியாது. ஹோஸ் பைப் மூலமா செடிக்கு அடியிலே மட்டும் தண்ணி விடு.

தேனரசு: பைப்லே ஓட்டைகள் நிறைய இருக்கு. எல்லாஇடத்திலேயும் தண்ணி பீச்சியடிக்கும்.

தந்தை: சரி, தூரத்திலேர்ந்து தண்ணியைக் கீழ்ப்பக்கமா வீசி அடி! செடிமேலே விட்டுடாதே!

தேனரசு: பாருங்க என் அழகான செடியை! மேலே எவ்வளவு தூசு படிஞ்சு இருக்கு! தண்ணி பட்டாத்தான் போகும். செடியும் பச்சைப் பசேல்னு பார்க்க அழகா இருக்கும்!

(தந்தை வெளியே செல்கிறார். அவர் சென்றதும் மண் கிளறிக் கருவியுடன் செடி அருகே செல்கிறான் தேனரசு.)

பூவிழி: ஏய்! தேனரசு! என்ன செய்யப்போறே நீ? செடி கிட்டே போகாதே! தேனீக்கள் கிளம்பிடும்!

தேனரசு: பரவாயில்லை....,நான் அடி மண்ணைக் கிளறி எரு போட்டுத்தான் ஆகணும். தேனடை ஆள் வர்றவரைக்கும் பொறுக்க முடியாது.

பூவிழி: டேய்! சொன்னா கேளு! அம்மா! அம்மா! இங்கே வாயேன்! இவனைப் பாரேன்!

(நலச்சங்க செயலாளர் போட்டோகிராபருடன் வருகிறார்.)

செயலாளர்: என்னப்பா வருங்கால "தோட்டக்கலை நிபுணரே' எப்படி இருக்கே? என்ன செய்துகிட்டு இருக்கே?

அம்மா: வாங்க சார்! அந்தச் செடிக்குள்ளே தேனடை இருக்கு....கிட்டே போகவேணாம்னா கேக்க மாட்டேங்கிறான். சாப்பாட்டைக் கூட மறந்துடறான்.

செயலாளர்: வரும்போதே இவங்க பேசினதைக் கேட்டுக்கிட்டுதான் வந்தேன். சரி, உன்னோட "பென்டாஸ் லான்ஷியோலடா'....,அதான் குண்டு செண்டு பூச்செடி எப்படி இருக்கு? பார்க்கலாமா?

தேனரசு: பாருங்க சார்! நல்லாத்தான் வளர்த்துக்கிட்டு வரேன். ஆனால் செடிக்குள்ளே ஒரு தேன்கூடு! அதனால தண்ணீர் விட, எருப்போட பயமா இருக்கு! எறும்புக் கூட்டம் வேறே வந்திருக்கு. இருந்தும் தவறாம தண்ணி விட்டு, எருபோட்டு கவனிச்சுக்கறேன்.

செயலாளர்: தம்பி! நம்ப நகர்லே வீட்டுக்கொரு செடின்னு நாற்பது பேருக்கும் கொடுத்திருக்கோம். எல்லோருமே உன்னைப்போல நல்லாத்தான் வளர்த்துக்கிட்டு வராங்க!

தேனரசு: இந்தச் செடியிலே சுமார் நூற்றி ஐம்பது பூக்கள் வரும்னு சொல்லியிருக்கீங்க. ஆனா இதுவரைக்கும் நூறுதான் வந்திருக்கு!

செயலாளர்: இருக்கட்டும்! மூணு நாளைக்கு ஒருமுறை எருவைப் போட்டுக்கிட்டு வா! இப்போ நீ செடி பக்கத்துல போய் நில்லு! போட்டோகிராபர் சார்! ஒரு ஸ்டில் எடுத்திடுங்க! செடியை "குளோஸ் அப்' லே எடுங்க! பூக்களையும் எண்ணி எழுதிக்குங்க! சரி, வரோம் தம்பி!

தேனரசு: சரி சார்!

காட்சி-4

இடம்-தேனரசு வீடு.

மாந்தர்- தேனரசு, பூவிழி, தந்தை, அம்மா, தேனடை ஆள்.

தேனடை ஆள்: ஐயா! தேனடை ஆள் வந்திருக்கேன்! உடல் நிலை சரியில்லை. அப்புறம் அவசரமா ஊருக்குப் போயிட்டேன். அதான் வர முடியல்லே...எங்கே சார் தேனடை?

அம்மா: இúதோ இந்தச் செடியிலேதான்! என் மகன் போட்டிக்காக இந்தச் செடியை வளர்த்துக்கிட்டு வரான்! நீங்க பதினஞ்சு நாள் முன்னாடி வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்! இன்னும் நிறையப் பூக்கள் பூத்திருக்கும்! நேத்துதான் போட்டிக்கான கடைசி நாள்! போட்டோவும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க!

அப்பா: சரி, செடி பாழாகாம தேனடையை எடுத்து செடியைக் காப்பாத்திக் கொடுங்க!

தேனடை ஆள்: செடி பூவும் இலையுமா அடர்த்தியா இருக்கு! கையை விட்டுத்தான் எடுக்கணும்.

தேனரசு: தேனீ கையைக் கொட்டிடும்!

தேனடை ஆள்: இதோ இந்த தைலத்தை உடம்புலே கையிலே தடவிட்டா போதும்! எந்த விஷ ஜந்துவும் என்னை ஒண்ணும் செய்யாது. பத்து நிமிஷம் ஆகும்! நீங்க உள்ளேபோய் வேலையைப் பாருங்க!

(தேனரசு உள்ளே செல்கிறான். உள்ளே பூவிழி ஸ்வீட்டுடன்)

பூவிழி: இந்தா ஸ்வீட்! அப்பா! அம்மா! நீங்களும் எடுத்துக்குங்க!

தேனரசு: என்ன திடீர்னு ஸ்வீட்!

பூவிழி: எல்லாம் உன் வெற்றிக்காகத்தான். குண்டு செண்டு செடியை வளர்க்க நீ எடுத்த முயற்சிகளுக்கும் வெற்றி கிடைச்சிருக்கு! செயலாளர் எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சிருக்கார்! நீயே படிச்சுப் பாரு!

தேனரசு: (படிக்கிறான்) "தேனரசு, அதிகமாக நூற்று நாற்பது பூக்கள் பூத்திருந்த செடிகள் இரண்டு! அதில் ஒன்று உன்னுடையது! இருந்தாலும் போட்டி விதிப்படி இருவரில் செடி வளர்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்தியவர்க்கு சிறப்பு மதிப்பெண் உண்டு. நீ தேனடை அச்சம் இருந்தும், போராடி செடியை வளர்த்துள்ளாய்! சற்றே கூடுதல் முயற்சி செய்யவேண்டிய கட்டாயம் உனக்குத்தான் இருந்தது! அதில் நீ வெற்றி பெற்று விட்டாய்! எனவே சிறப்பு மதிப்பெண் பெற்று நீ முதற்பரிசு பெறுகிறாய். வாழ்த்துகள்!' - செயலாளர்.....

அம்மா, அப்பா: வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

பூவிழி: ஆமாம்...,தேனடை என்னாச்சு?

தேனடை ஆள்: இதுதான்மா அந்தத் தேனடை! எறும்புக் கூட்டத்தையும் மருந்து போட்டு விரட்டிட்டேன்! (தேனடையைப் பக்கத்துத் தோப்பில் வீசுகிறார்)

தேனரசு: தேனீக்களே! உங்களுக்கு நன்றி!

பூவிழி: அழகாக மலர்ந்த இந்தப் பூக்களே உனக்கு நல்ல பரிசுதாண்டா!

அம்மா, அப்பா, தேனரசு: ஆமாம்! ஆமாம்!

திரை

முழு கட்டுரையைப் படிக்க →