முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: இயற்கையின் விந்தை

காட்டுப் பாதையில் ஓரன்பர்கால்கள் கடுக்க நடந்திட்டார்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

காட்டுப் பாதையில் ஓரன்பர்

கால்கள் கடுக்க நடந்திட்டார்

மேட்டுப் பகுதியில் ஓரிடத்தில்

மிகவள மாகவே பூசணியின்

கொடியில் பெரும்பெரும் காய்கள் பல

குண்டாய் அழகாய் இருந்தனவாம்

விடிந்தது முதலே நடந்ததனால்

வியர்த்தே அலுத்துப் போனாராம்!

ஆல மரத்தின் நிழலினிலே

அயர்ந்தே படுத்துக் கொண்டாராம்

மேலே பார்த்தார் மரத்தினிலே

மெல்லிய சிறுசிறு பழங்களினை

எம்மாம் பெரிய ஆலமரம்

இதிலே சின்னஞ் சிறுபழங்கள்

அம்மாடி பூசணிக் கொடியினிலே

அடடா அளவில் பெரும் பழங்கள்

என்னே இயற்கையின் வஞ்சனைதான்

ஏனோ இந்த மாற்றங்கள்

எண்ணிய படியே தூங்கிவிட்டார்

இயல்பாய் குறட்டையும் விட்டாராம்!

பட்டென எதுவோ மூக்கின் மேல்

பட்டதும் திடுகிட் டெழுந்தாராம்!

பட்டது ஆலம் பழமென்று

பார்த்துப் புரிந்தே கொண்டாராம்!

அடடா! இயற்கையின் அற்புதத்தை

அறியா மல்தான் நினைத்திட் டேன்

உச்சியி லிருந்தே பூசணிதான்

மூக்கில் விழுந்தால் என்னாகும்?

எது? எது? எப்படி எங்கேதான்

இருந்திட இயற்கை வகுத்த நெறி

அதுவே சரியென உணர்ந்தாராம்

எழுந்தே இயற்கையைத் தொழுதாராம்!

முழு கட்டுரையைப் படிக்க →