முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: ஜனநாயகத்தின் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை!

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது நாட்டிற்கு சுவாசம் போன்றது.

Updated On : 20 மே, 2016 at 9:40 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:49 PM

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது நாட்டிற்கு சுவாசம் போன்றது. நம் இந்திய குடியரசு நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் - அதன் தலைவர்கள் - உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் குறித்து தெரிந்து கொள்வோமா..?

குடியரசு தலைவர்:

இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் ஆவார். ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியும் இவர்தான்.

Advertisement

தகுதி: 35 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அரசு சார்ந்த நிறுவனங்களில் லாப நோக்கில் சம்பந்தப்பட கூடாது.

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் (லோக் சபா, ராஜ்ய சபா) உறுப்பினர்களும், மாநில சட்டசபையில் நேரடித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ் சபை உறுப்பினர்களும் வாக்களிப்பதன் மூலம் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இத்தகைய வாக்குப்பதிவு "மறைமுக தேர்தல்' எனப்படுகிறது. இதில் பொதுமக்கள் நேரடியாக பங்கு பெறுவதில்லை. குடியரசு தலைவரின் பதவிகாலம் 5 ஆண்டுகள்.

கடமைகள்:

பிரதமருக்கும், அவரது அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது. பிரதமரின் ஆலோசனைப்படி மாநில ஆளுநர், உச்ச மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகள், இந்திய அரசு தலைமை வழக்கறிஞர், வெளி நாட்டு தூதுவர் முதலிய பதவிகளுக்குத் தகுந்தவர்களை நியமனம் செய்வது. ஏதேனும் சூழ்நிலையில் மாநில அரசுகள் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அதன் நிர்வாகப் பொறுப்பு குடியரசு தலைவருக்கு உரியது. மேலும், தேர்தல் நடத்துவதற்கான ஆணை, அவசர ஆணைகள் பிறப்பித்தல், உச்சநீதிமன்ற தண்டனையை குறைக்கும் அதிகாரம் கொண்டவர். நாட்டின் மிக உயர்ந்த, மரியாதைக்குரிய, கெüரவமான பதவி குடியரசு தலைவருடையது.

குடியரசு துணைத் தலைவர்:

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் வாக்களித்து குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தலைவராவார்.

பாராளுமன்றம் (நாடாளுமன்றம்):

பாராளுமன்றத்திற்கு மக்களவை (லோக் சபா), மாநிலங்களவை (ராஜ்ய சபா) என்று இரண்டு அவைகள் உள்ளன.

மக்களவை (லோக் சபா):

இந்த அவையில் 544 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 542 பேர் பொதுத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களுடன் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்களவை உறுப்பினர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் அல்லது கூட்டணியின் தலைவர் பிரதமராகிறார். பிற அமைச்சர்கள் பிரதமரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். செயல் அதிகாரம் பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் உள்ளது.

மாநிலங்களவை (ராஜ்ய சபா)

ராஜ்ய சபா உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த தேர்தலில் எல்லா மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்(எம்.எல்.ஏ) மட்டுமே வாக்களிக்க முடியும். அதாவது சட்டமன்றத்திற்கு பொது தேர்தலில், பொதுமக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கலாம்.

இச்சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 12 பேரை குடியரசு தலைவர் நியமனம் செய்வார். இந்த 12 பேரும் கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தகுதி:

30 வயதுக்கு மேற்பட்ட நல்ல மனநிலை கொண்ட இந்திய குடிமகன் தகுதியானவர். குற்றச் செயல்களில் ஈடுபடாதவராக இருத்தல் அவசியம். மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், பெரிய மாநிலங்களுக்கு அதிக உறுப்பினர்களும், சிறிய மாநிலங்களுக்கு குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றம்:

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலில் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஒரு அவை மட்டுமே உள்ளது. மேலவை இல்லை. தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 235 இருக்கைகள் உள்ளன. இதில் 234 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் ஆளுநராலும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள். அவசர காலத்தில் பதவி கால நீடிப்பு செய்யலாம். அதேபோல் 5 ஆண்டுகளுக்கு முன்னரே பெரும்பான்மை உறுப்பினர்கள் அரசுக்கெதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்றம் கலைக்கப்படுவதும் உண்டு.

பொது தகவல் (சட்டமன்றம்):

சட்டமன்றத்தில் அதிகபட்சம் 500 பேரும், குறைந்த பட்சம் 60 பேரும் உறுப்பினராக இருக்கலாம். கோவா, சிக்கிம், மிசோரம் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு விதியின் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி:

ஆளும்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்கள் இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 24 பேராவது வெற்றி பெற்று இருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் கேபினட் அமைச்சருக்குரிய தகுதியைப் பெறுவார். ஆளுநரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்திய உறுப்பினருக்கு விவாதங்களிலோ, தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பிலோ பங்கெடுக்கும் உரிமை கிடையாது.

முதல்வர்:

பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வேட்பாளர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு மனதாக தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர் முதல்வராக பதவியேற்கிறார். முதல்வரின் விருப்பப்படி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை பதவியேற்கிறது. இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.

உள்ளாட்சி தேர்தல்கள்:

மாநிலத்தின் சிறப்பான நிர்வாகத்திற்காக பல உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன. இவை மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்ற தன்னாட்சி அமைப்பாக இயங்குகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் சில பணிகள்:

அப்பகுதியில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், துப்புரவு செய்தல், கழிவுநீர் அகற்றுதல், கழிப்பறை வசதி, திடகழிவு மேலாண்மை, மக்கள் உடல் நலம் மற்றும் நோய் தடுப்பு,குடிநீர் வழங்குதல், பொது இடங்களில் விளக்கு வசதி, கட்டடங்கள் கட்டுவதை ஒழுங்குப் படுத்துதல், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் தொடங்க உரிமம் வழங்கி முறைப்படுத்துதல், பிறப்பு இறப்பு பதிவு, மயானங்கள் ஏற்படுத்தி பராமரித்தல் போன்ற அன்றாட அத்தியாவசிய வேலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் மூலமே செயல்படுத்தப் படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:-

நகர்ப்புறங்களில் மாநகராட்சி: நகராட்சி, பேரூராட்சி என மூன்று வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஒரு பகுதியின் மக்கள் தொகை மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இவை வகைப்படுத்தப்படுகிறது.

மாநகராட்சி:-

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. பொதுமக்கள் வாக்களிக்கும் நேரடித் தேர்தல் மூலமே மாநகராட்சி மாமன்ற தலைவரும் (மேயர்) மன்ற உறுப்பினர்களும் (கவுன்சிலர்கள்) தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். அரசியல் கட்சிகள் இத்தேர்தலில் பங்கு பெறலாம். அப்பகுதி பொதுமக்கள் தேர்தலின் போது இரண்டு வாக்குகள் (மேயர், கவுன்சிலர்) அளிக்கின்றனர்.

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வார்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வார்டிலும் பலர் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். வெற்றி பெற்றவர் வார்டு கவுன்சிலர் ஆகிறார்.

மாநகராட்சி ஆணையர்:

இந்திய அரசுப் பணி அதிகாரிகள் (ஐ.ஏ.எஸ்) அல்லது இதற்குத் தகுதியுடைய அதிகாரிகள் மாநகராட்சி ஆணையர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். மேயர் மற்றும் கவுன்சிலர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்ற கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் படி ஆணையர் தன் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுகிறார்.

நகராட்சி:

மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாக பிரித்துள்ளனர். இவற்றிற்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக அரசினால் நியமிக்கப்படுகின்றனர். எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மக்கள் தொகையை ஆதாரமாக கொண்டு வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி மக்கள் நேரடியாக தேர்தல் மூலம் வாக்கு அளித்து நகராட்சி மன்ற தலைவரையும், நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் (கவுன்சிலர்கள்) தேர்வு செய்கிறார்கள். துணை நகரமன்றத் தலைவர் கவுன்சிலர்களுக்குள் தேர்வு செய்யப்படுகின்றார். நகராட்சி மன்ற கூட்ட தீர்மானங்களை ஆணையர் தன் அலுவலக ஊழியர்களைக் கொண்டு செயல்வடிவம் கொடுக்கிறார். தமிழகத்தில் உள்ள நகராட்சிகள் அனைத்தும் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகிறது.

பேரூராட்சிகள்:

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நகராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள ஊர்களை பேரூராட்சி என்ற அமைப்பில் வகைப்படுத்தியுள்ளனர். நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாய் உடைய ஊர்கள் பேரூராட்சிகள். இவற்றிற்கு, அரசு அதிகாரிகள் "பேரூராட்சி செயல் அலுவலர்'களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இங்கும் வார்டுகள் பிரிக்கப்பட்டு தேர்தல் மூலம் நகராட்சி மன்ற தலைவரும், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். மன்ற துணைத் தலைவர் வார்டு கவுன்சிலர்களுக்கிடையே தேர்வு செய்யப்படுகின்றார். மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல் அலுவலர் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பேரூராட்சிகளும் தமிழக அரசின் பேரூராட்சிகளுக்கான ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் கட்டுப்படுத்துகிறார். வரலாற்று சிறப்பு மிக்க நகரம், வழிபாட்டு தலங்கள், தொழிலகங்கள் உள்ள ஊர்கள் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு முன்னேற்றமடைந்துள்ளது. 5000க்கும் மேல் 30 ஆயிரத்துக்குள் மக்கள் தொகை கொண்ட ஊர்கள் பேரூராட்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள்:-

கிராமப்புற பகுதிகளின் மேம்பாட்டிற்கான உள்ளாட்சி அமைப்புகள் 3 நிலைகளாக உள்ளது. இவை நகர்ப்புற அமைப்புகள் போல் இல்லாமல், ஒன்றிற்குள் ஒன்றாக அடங்கியுள்ளது. அதனால் கிராமப்புற பகுதி மக்கள் உள்ளாட்சி தேர்தலில் நான்கு வாக்குகளை பதிவு செய்கிறார்கள்.

1. கிராம ஊராட்சி - தமிழகத்தில் 12,524 உள்ளது. இதற்கு தலைவர், உறுப்பினர் என இரண்டு வாக்குகள்.

2. ஊராட்சி ஒன்றியம் (சில கிராம ஊராட்சிகளை சேர்த்து உருவானது) - தமிழகத்தில் 385 உள்ளது. இதற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஒரு வாக்கு மட்டும்.

3. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை - மாவட்ட அளவில் ஊராட்சிகளை சேர்த்து உருவானது.- தமிழகத்தில் 32 உள்ளது. இதற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஒரு வாக்கு. ஆக மொத்தம் 4 வாக்குகள்.

கிராம ஊராட்சிகள்:-

தமிழ்நாட்டில் 500க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊர்கள் ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பாக வேட்பாளர்களை நிறுத்த அனுமதியில்லை.

ஊராட்சி தலைவரும், உறுப்பினர்களும் பொதுமக்கள் வாக்களிப்பதன் மூலமும், துணைத் தலைவர் உறுப்பினர்களுக்கிடையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 5 ஆண்டுகாலம் பதவி வகிப்பார்கள்.

ஊராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மன்ற தலைவரே செயல்படுத்த வேண்டும். நான்கு வாக்குகளில் இரண்டு, இந்தத் தலைவர் மற்றும் உறுப்பினருக்கானது.

ஊராட்சி ஒன்றியம்:

கிராம ஊராட்சி அமைப்புகள் சில சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்படுகிறது. வார்டுகள் பிரிக்கப்பட்டு தேர்தல் மூலம் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின்னர், உறுப்பினர்களிடையே தலைவரும், துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடலாம். நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஒன்றிய ஆணையாளர் தன் ஊழியர்களின் துணைக் கொண்டு செயல்படுத்துவார். நான்கில் ஒரு வாக்கு இதன் உறுப்பினருக்கானது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை:

மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பு, மற்றபடி ஊராட்சி ஒன்றியம் போன்றதே.

இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாவட்ட ஆட்சி தலைவரும் (கலெக்டர்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துவார்கள்.

தமிழகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்:

நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

மக்களவை (லோக் சபா) -39

மாநிலங்களவை (ராஜ்ய சபா) -18

சட்டமன்ற உறுப்பினர்கள் -234

நகர்ப்புற உள்ளாட்சிகள்:

மாநகராட்சி மேயர் - 12

கவுன்சிலர்கள் -919

நகராட்சி தலைவர்கள் -148

கவுன்சிலர்கள் -சுமார் 3613

பேரூராட்சி தலைவர்கள் -561

கவுன்சிலர்கள் -சுமார் 8288

கிராமப்புற உள்ளாட்சிகள்:

மாவட்ட ஊரக வளர்ச்சி

முகமை தலைவர்கள் -32

உறுப்பினர்கள் -655

ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் -385

உறுப்பினர்கள் -6471

கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்- 12,524

உறுப்பினர்கள் -99333

நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்காகத்தான் இப்படி அமைப்புகள் உருவாக்கப்பட்டு, தேர்தல்களும் நடத்தப்படுகிறது. நாம் அனைவரும் தவறாமல் நமக்குரிய (ஓட்டுகளை) வாக்குகளை அளித்து நம் கடமையைச் செய்வோம். வெற்றி பெற்றவர்கள் தங்கள் கடமையை சிறப்பாகச் செய்ய வாழ்த்துவோம்.

மேலும் சில தகவல்கள்: இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

இந்திய பாராளுமன்றத்தில் இரு அவைகள், அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்கள், அவற்றிற்கான இடைத் தேர்தல்கள், குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முதலியவை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆணையத்தால் அனைத்து மாநிலங்களிலும் "மாநில தலைமை தேர்தல் அலுவலர்' நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவரே மாநிலத்தில் இத் தேர்தல்களை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், வழிநடத்தவும், கட்டுபடுத்தவும் செய்கிறார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்:

தமிழக மாநில அரசினால் இந்த ஆணையம் ஜூலை 15, 1994-இல் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அதிகாரி "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்' ஆவார். இவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இந்த ஆணையமே மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்துகிறது. இது தன்னாட்சி பெற்ற அமைப்பு.

சிறந்த நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குப் பரிசு:

2012-ஆம் ஆண்டு முதல் இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

சிறந்த 3 நகராட்சிகளுக்குப் பரிசுகள்:

முதல் பரிசு : ரூ 15 லட்சம் ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ், இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம் ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சிறப்பான 3 பேரூராட்சிகளுக்கு பரிசுகள்:

முதல் பரிசு ரூ.10 லட்சம் ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ், இரண்டாம் பரிசு ரூ. 5 லட்சம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும். மூன்றாம் பரிசு ரூ.3 லட்சம் ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு இடஒதுக்கீடு:

தமிழக மாநில அரசு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்து ஒரு மனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.