சிறுவர்மணி

இளமையில் வெல்! 'ஆம்ஸ்ட்ராங் பாமே' (ARMSTRONG PAME)

DIN

நாகாலாந்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடித்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று படிப்பு; மற்றொன்று பெற்றோருக்கு உதவி செய்தல். கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வருவான். மணிப்பூரில் அவன் வசித்த "டேமன் கிளாங்' (Tamenglong) மாவட்டத்தில் சரியான சாலைகளே இல்லை. இதனால் மக்கள் மருத்துவமனைக்குச் செல்லவும், பள்ளிகளுக்குச் செல்லவும், கடைகளுக்குச் செல்லவும் மிகவும் அவதியுற்றனர். மழைக் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.

"நீ படித்து முடித்ததும் என்ன செய்வாய்?' என்று கேட்பவர்களிடம் எல்லாம் "இந்தப் பகுதிக்கு முதலில் சாலை போடுவேன்! அதுவும் என் சொந்தச் செலவில்!' என்றான் அச்சிறுவன். தான் சொன்னபடியே செய்தும் காட்டினான் அவன் பின்னாளில்.

அவர்தான் "ஆம்ஸ்ட்ராங் பாமே' நாகாலாந்தின் "சீமே' பழங்குடி இனத்தின் (Zeme tribe) முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவரே ஆவார்.

சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் தனது பட்டப்படிப்பை தில்லியில் உள்ள "ஸ்டீபன்ஸ்' கல்லூரிக்குச் சென்று படித்தார். 2008-ஆம் ஆண்டு "இந்திய ஆட்சிப் பணி'க்கு (I.A.S.)தேர்வு செய்யப்பட்டார்.

பதவி ஏற்றவுடன் தனது லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். முகநூலில் (FACE BOOK) தான் அமைக்க இருக்கும் சாலை பற்றிய விவரங்களை அறிவித்து நிதி திரட்டினார். முதல் கட்டமாக தனது சொந்தப் பணத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயும், தனது சகோதரரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயையும் நிதியளித்தார்.

முகநூல் நிறுவனர் இவரது சேவையைப் பாராட்ட கலிஃபோர்னியாவிற்கு வரவேற்றார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நிதி திரண்டது. 40 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. 100 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்க இத்தொகை போதுமானதாக இல்லை. எனவே அப்பகுதியில் வசித்த செல்வந்தர்களிடம் "ரோட் ரோலர்' போன்ற சாலை அமைக்கும் இயந்திரங்களுக்குப் பண உதவி செய்யுமாறு வேண்டினார். அவரது வேண்டுகோள் நிறைவேறியது.

அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் சாலை அமைக்கும் பணியில் வேலை செய்யத் தாமாகவே முன்வந்தனர். "எங்களிடம் பண வசதி இல்லை. ஆகவே உடல் உழைப்பைத் தருகிறோம்!' என்று கூறி ஈடுபட்டனர்.

2012-ஆம் ஆண்டு தொடங்கிய சாலை அமைக்கும் பணி 2013-ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்தது. "டேமன் கிளாங்' மற்றும் "ஹாஃப்கிளாங்' ஆகிய பகுதிகளை இணைத்து 100 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. இதனால் மணிப்பூர், நாகாலாந்து, அசாம் ஆகிய மூன்று மாநிலங்கள் சாலையால் இணைக்கப்பட்டன.

பொதுமக்களின் நிதி உதவியாலும், உடல் உழைப்பாலும் இச்சாலை உருவானதால் இது "மக்களின் சாலை' என்று அழைக்கப்பட்டது. (PEOPLE'S ROAD - BY THE PEOPLE, FOR THE PEOPLE).

இவரது சேவைக்காக 2012-ஆம் ஆண்டு CNN - IBN - INDIAN OF THE YEAR என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஸ்டார் - பிளஸ் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் நிகழ்த்திய "AAJ KI RAAT HAI ZINDAGI' என்ற நிகழ்ச்சியில் 2015-ஆம் ஆண்டு சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்பட்டார்.

"சர்வதேச மனித உரிமை விருது' (INTERNATIONAL HUMAN RIGHTS AWARD) 10.12.2015 அன்று இவருக்கு புதுதில்லியில் வழங்கப்பட்டது.

"இச்சாதனை முழுவதையும் இச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், நிதி உதவி அளித்தவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்! அவர்களது ஒத்துழைப்பின்றி இது சாத்தியமாகி இருக்காது!' என்று கூறுகிறார் இவர் தன்னடக்கத்துடன்!

"வடகிழக்கு பிராந்தியத்தின் கதாநாயகன்' (HERO OF THE NORTH EASTERN PROVINCE) என்று மக்கள் இவரை அன்போடு அழைக்கிறார்கள்!

-என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT