முகப்பு
சிறுவர்மணி

காணிக்கை!

வியாபாரி ஒருவர் வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் துறவி ஒருவர் தியானத்தில் இருந்தார். வியாபாரிக்கு அந்தத் துறவியை பார்த்த மாத்திரத்தில் பிடித்து விட்டது!

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வியாபாரி ஒருவர் வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் துறவி ஒருவர் தியானத்தில் இருந்தார். வியாபாரிக்கு அந்தத் துறவியை பார்த்த மாத்திரத்தில் பிடித்து விட்டது!  என்ன தோன்றியதோ தெரியவில்லை....தங்க நாணயம் ஒன்றை எடுத்து அந்த துறவியின் முன் வைத்தார். அவரைப் பணிவாக வணங்கினார்.  பின் வீட்டிற்குச் சென்றார்.  வீட்டிலிருந்து கடைக்குச் சென்றார்.

ஆச்சரியம்! வெகு நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை அன்று அவருக்கு வந்தது!  அன்று வியாபாரமும் சிறப்பாக நடந்தது! 

அன்றிலிருந்து அவர் தினந்தோறும் அந்தத் துறவியை வணங்கிக் காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டார். நாளுக்கு நாள் அவருக்கு செல்வம் பெருகியது! 

ஒருநாள்.....

துறவியை நாடி காணிக்கையுடன்  சென்றபோது, அங்கு அவரைக் காணவில்லை! அவர் எங்கே சென்றிருக்கிறார் என்று அக்கம் பக்கம் விசாரித்தார்.  

துறவியின் குரு திடீரென்று வந்திருப்பதாகச் சொன்னார்கள்!  தன் குருவிற்குப் பணிவிடை செய்ய துறவி சென்றிருக்கிறார் என்றும் கூறினார்கள்.  விசாரித்துப் பார்த்ததில் துறவியின் குரு இருக்கும் இடம் அருகில்தான் இருந்தது.  அங்கு சென்றார் வியாபாரி. அங்கு, துறவி..., தன் குருவின் காலில் விழுந்து விட்டு அவருக்குப் பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தார்! இதைப் பார்த்த வியாபாரிக்கு ஆச்சரியமாய் இருந்தது! தன் மனதிற்குள், "துறவியே இந்த குருவை வணங்குகிறார் என்றால்!.... இவர் பேராற்றல் கொண்டவராகத்தான் இருக்க வேண்டும்!.....இவரை வழிபட்டால் நமக்கு மேலும் பல நன்மைகள் ஏற்படும்...இவருக்குக் காணிக்கை தந்தால் நல்ல பயன் உண்டாகும்...' என்று  நினைத்து...,அந்த துறவியின் குருவுக்கும் பொற்காசுகளைக் காணிக்கையாகத் தந்து வணங்கினார்.

ஆனால்....

அன்று வியாபாரிக்குக்கு வணிகத்தில் இழப்பு ஏற்பட்டது!.....அவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று இறந்து விட்டது! இதனால் அதிர்ச்சி அடைந்தார் வியாபாரி. குருவிடம் வந்து நடந்ததைச் சொன்னார் வியாபாரி. அதற்கு குரு, ""தகுதியோ....,இன்னது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோ அந்தத் துறவிக்கு நீ காணிக்கை தரவில்லை!.....அதனால் கடவுளும் உனக்குத் தகுதி பாராமல் வழங்கினார்.....நீ எனக்குக் காணிக்கை தரும்போது தகுதி பார்த்தாய்! காணிக்கையால் பயன்கிடைக்கும் என்று நினைத்தாய்!,,,,பலன்களை எதிர்பார்த்தாய்!.....கடவுளும் உன் தகுதியைப் பார்த்து உனக்கு உரியதைக் கொடுத்தார்!''

நீதி: எதிர்பார்ப்பு இல்லாமல் தருமம் செய்வதே சிறந்த அறம்!

முழு கட்டுரையைப் படிக்க →