எல்லோருக்கும் மரியாதை!
மேல் நாட்டில் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் தன் பேரனுக்கு நற்பண்புகளை சொல்லித் தருவார். பேரனும் அவர் சொல்லைத் தட்டாமல் நடந்து கொள்வான்.
மேல் நாட்டில் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் தன் பேரனுக்கு நற்பண்புகளை சொல்லித் தருவார். பேரனும் அவர் சொல்லைத் தட்டாமல் நடந்து கொள்வான்.
ஒரு நாள் அவர் தன் பேரனிடம், ""யாராக இருந்தாலும் மரியாதையாக நடந்து கொள்....அது உனக்கு ஆத்ம சக்தியைத் தரும்'' என்று கூறினார்.
""அப்படியே நடப்பேன் தாத்தா'' என்று கூறினான் பேரன்.
ஒரு மாலை நேரத்தில் அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். எதிரில் ஒரு பிச்சைக் காரன் தட்டுத் தடுமாறி வந்து கொண்டிருந்தான். அவன் மார்பில் ஒரு அட்டையைத் தொங்க விட்டிருந்தான். அதில் "எனக்குக் கண் பார்வை தெரியாது....., எனக்கு உதவி செய்யுங்கள்' என்று எழுதியிருந்தது.
Advertisement
வெள்ளி நாணயம் ஒன்றை எடுத்துத் தன் பேரனிடம் தந்து, ""பிச்சைக்காரனின் தட்டில் போட்டுவிட்டு வா!'' என்றார்.
பேரனும் அப்படியே அந்தக் காசைத் தட்டில் போட்டான்.
""உனக்குக் கொஞ்சம் கூட மரியாதை தெரியவில்லையே? பிச்சைக்காரனுக்கு உன் தொப்பியைத் தூக்கி முதலில் வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும், அதன் பிறகு காசைத் தட்டில் போட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தாயா?''
""தாத்தா, அந்தப் பிச்சைக்காரனுக்குக் கண் தெரியாது. நான் வணக்கம் செலுத்தி இருந்தால் அவன் பார்த்திருக்க முடியாது'' என்று பதில் சொன்னான் பேரன்.
""அந்தப் பிச்சைக்காரன் கண் பார்வை தெரியாதவனைப் போல் நடிப்பவனாக இருந்து, நீ வணக்கம் செலுத்துவதைப் பார்த்து மனம் மகிழ்ந்திருக்கலாம் பிறகு அந்த மாதிரி தவற்றைச் செய்யக் கூசியிருக்கலாம் திருந்தியோ உழைத்தோ வாழ முயற்சி செய்யலாம் அல்லவா? அப்படியின்றி உண்மையான கண் தெரியாதவனாக இருந்தால் நீ மரியாதை செய்ததில் உனக்கு மன திருப்தி ஏற்பட்டிருக்கும். எப்படியும் மரியாதை செய்வதில் தவறில்லையே'' என்றார் தாத்தா.
உடனே ஒடிச் சென்று அந்தப் பிச்சைக்காரனை தன் தொப்பியைக் கழற்றி வணங்கினான் பேரன்!
உண்மையில் கண் தெரியாதவனாக நடிக்கத்தான் செய்தான் பிச்சைக்காரன். ஆனால் சிறுவன் தன்னை வணங்குவதைக் கண்டான். தன் வேடத்தைக் கலைத்து விடவும் பிச்சைக்காரனுக்கு மனமில்லை. ஆனால் மனதிற்குள் சிறுவனை வாழ்த்தினான் அவன்! அது மட்டுமல்ல, இனி இந்த மாதிரி பொய் வேடமிட்டுப் பிச்சை எடுப்பதை மறுநாளிலிருந்து விட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தான் அவன்!
பல நாட்களுக்குப் பிறகு அவன் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தான்.