அரங்கம்: முதலாளி!
காட்சி - 1
இடம் - பேருந்து நிலையம், காலம் - காலை மணி 6.39
மாந்தர் - பஸ் கம்பெனி முதலாளி ஜெயராமன், ஓட்டுநர் கதிர்வேல், நடத்துனர் சூரியநாராயணன் மற்றும் பல பயணிகள்.
நடத்துனர் சூரியநாராயணன்: (தோல் பையை தோளில் மாட்டியபடி) ஹே.. ராமபாளையம், சின்னவில்லிபுத்தூர், கூத்தப்பாளையம் ஏறுங்க..
பயணி ஒருவர்: தம்பி குச்சிப்பாளையம் போவுமா?
சூரி: போவும். ஆனா போயி உட்கார்ந்திடாதீங்க.....கிளம்பும் போது ஏறலாம்.... அஞ்சு நிமிஷத்தில் குச்சிப்பாளையம் வந்திடும்!.... அதைவிட தூரமா போறவங்க
டிக்கட்டை நிக்கவிட்டுட்டு நீங்க சீட்டுலே உட்கார்ந்திடாதீங்க!...
ஓட்டுநர் கதிர்வேல்: என்னா சூரி.. போகலாமா?
சூரி: இருப்பா கதிரு.....இன்னும் ஆறு நாற்பது ஆக முப்பது வினாடி இருக்கு!
பயணி 1: ஹும். ராக்கெட் விடறானுங்க..... பெரிசா வினாடி கணக்கு தவறாம.... வண்டியை எடுங்கப்பா.. வியர்க்குது!
பயணி 2: என்ன அப்படி சொல்லிட்டீங்க!.... அருப்புக்கோட்டை ஜெயம் விலாஸ் பஸ்ன்னா கன் டைத்துக்குக் கிளம்பும்!.... கரெக்டா போயி சேரும்!... ஒரு பஸ்ஸில்
ஆரம்பிச்ச கம்பெனி இப்போ முன்னூறு பஸ்களாக ஓடுது. முதலாளி ஜெயராமன் எங்க ஊர்க்காரர் தான்!... காலம் தவறாமை மிக முக்கியம் அவருக்கு!
பயணி 1: அப்படியா?..... எனக்குத் தெரியாதே!
(அப்போது சூரி விசில் தர,... சரியாக ஆறு நாற்பதுக்கு பஸ் கிளம்புகிறது)
பயணி 1: கரெக்டா கடிகாரத்தில்ஆறு நாற்பது ஆவுது!
பயணி 2: அது மட்டுமா,.....இந்த பஸ் சீரான வேகத்தில் போகும்!.... எங்க ஊர் குருவிப்பட்டி வளைவில் குளக்கரையில் திரும்பும்!.... அப்போ சரியா மணி ஏழு
பத்து!.... கடிகார முள்ளைத் திருப்பி டயம் வச்சுக்கலாம். அத்தனை துல்லியமா பஸ் வரும். ஒரு நாள் கூட தாமதமாவும் வராது. முன்னாலும் போகாது.
பயணி 1: பலே பிரமாதம்!
பயணி 2: ஒரு நாள் கூட டயர் பங்க்சர், ரிப்பேர்ன்னு வழியில் நின்னது கிடையாது!
பயணி 1: எப்படி பராமரிக்கிறார் முதலாளி ?
பயணிம் 2: பஸ் ஷெட்டுக்குள் இரவு நுழைஞ்சதும் ஒரு குழு சக்கரங்களைப் பராமரிக்கும்!... டயரின் பள்ள அச்சுக்களில் பொடி ஜல்லிகள் ஒட்டி இருப்பதை
தோண்டி எடுக்கும்!... காற்று பிடிக்கும்! என்ஜினை சோதிப்பாங்க.... முன்பக்க விளக்குகள்,....பின்பக்க டேஞ்சர் விளக்குகள், பஸ் உள்ளே இருக்கிற விளக்குகள்
எல்லாத்தையும் செக் பண்ணுவாங்க.. பிரேக் கியர், ஆயில், பாட்டரி சரி பார்ப்பாங்க... டயர்கள் கொஞ்சம் தேய்மானம் ஆனாலும் புது டயர் ட்யூப் மாத்திடுவார்
முதலாளி! உட்காரும் இருக்கைகளில் பஞ்சு அமுங்கி போனால் உடனே புதுசா மாத்திடுவார்!
பயணி 1: நல்ல பராமரிப்பு முறை,!
பயணி 2: அது மட்டுமா?.... இரவு நேர பஸ் ஒட்டும் ஓட்டுனர்கள் பணி முடிஞ்சதும் உறங்க கம்பெனியில் நல்ல வசதி உண்டு!...., ஒரு சமயம் ஒரு டிரைவருக்கு
உடம்பு சரியில்லை..... அந்த டிரிப்புக்கு முதலாளி ஜெயராமனே பஸ்ûஸ ஓட்டினார்...காலம் தவறாமல் இருக்க!.... அடடே!.... மணி எட்டாவுது நான் இறங்க
வேண்டிய ஊர் வந்திடுச்சி! வர்றேன்!
சூரி: விசில் அடிக்கிறார் . கோவிந்தபுரம் எல்லாம் இறங்குங்க.. ரைட் போகலாம்.
காட்சி 2
இடம்: ராமபாளையம் அருகில்....
காலம் - காலை 8 மணி
மாந்தர்: ஜெயம்விலாஸ் பஸ் கம்பெனி முதலாளி ஜெயராமன், டிரைவர் கதிர், நடத்துனர் சூரி, மாணவ மாணவிகள்.
டிரைவர் கதிர்: டேய் சூரி, எதிரில் நம்ம கம்பெனி பஸ் மாதிரி தெரியுதுடா!..... இப்போ இந்த நேரத்துக்கு நம்ம பஸ் இந்த தடத்தில் வர வாய்ப்பில்லையே
என்னன்னு பாரு!.....
சூரி: ஆமாம் கதிரு!.... அடடே!... முதலாளியே பஸ்ûஸ ஓட்டி வர்றாரே!.....ஓரங்கட்டுடா!..... உள்ளே முழுவதும் பள்ளிக்கூட மாணவ மாணவிகள்!..... என்னன்னு
புரியலையே?...
.
(கதிர் பஸ்ûஸ ஓரமாக நிறுத்த எதிரில் வந்த ஜெயம் விலாஸ் பஸ்ஸில் இருந்து முதலாளி ஜெயராமன் இறங்கி)
ஜெயராமன்: கதிர்,.... நான் ஓட்டி வந்த இந்த பஸ்ஸூக்குள் பள்ளி மாணவர்கள் இருக்காங்க. அவங்க வந்த பள்ளி பஸ் ரிப்பேராகி வழியில் நிக்குது!...... நான்
காரில் அந்த வழியே வந்தேன்..... இன்னிக்கு அரசு இறுதித் தேர்வு!.... பரிட்சைக்கு இவங்க ஒன்பது மணிக்குள் பள்ளிக்குள் இருக்கணும். நான் காரில் ஷெட்டுக்குப்
போய் ஸ்பேர் பஸ் எடுத்து வந்து இவங்களை ஏத்திக்கிட்டேன்!..... நீ இப்போ இதை ஓட்டிக்கிட்டு போய் கஸ்தூர்பா காந்தி மேல் நிலைப் பள்ளிக்குள் இறக்கி
விட்டுட்டு நீ பள்ளியில் இருந்து பரிட்சை முடிஞ்சதும் அவங்களை திரும்ப ஏத்தி அவர்கள் போக வேண்டிய இடத்தில் இறக்கிவிடு. அப்புறம் நீ ஷெட்டுக்கு
பஸ்ûஸ ஓட்டி வந்துடு. நீ ஓட்டி வர்ற இந்த ராமபாளையம் பஸ்ûஸ நான் எடுத்துப் போறேன். என் கார் நம்ம கம்பெனி ஷெட்டில் இருக்கு. நான் இந்த பஸ்ûஸ
ராமபாளையம் டிரிப் முடிச்சிட்டு திரும்ப வந்திடறேன். சரியா..?
கதிர்: சரிங்க முதலாளி! (பள்ளி மாணவர்கள் இருக்கும் பஸ்ûஸ ஓட்ட கதிர் டிரைவர் இருக்கையில் அமர்கிறான்)
மாணவ மாணவிகள்: (ஜன்னல் வழியே கை அசைத்து) ரொம்ப நன்றி அங்கிள்.. நாங்க பரிட்சை எழுதறது உங்க புண்ணியத்தில் தான்..ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்!
ஜெயராமன்: வாழ்த்துக்கள்.. நல்லா எழுதுங்க.
(ராம பாளையம் செல்லும் ஜெயம்விலாஸ் பஸ்ஸில் ஏறி பஸ்ûஸ நகர்த்த கியர் போடுகிறார்..ஜெயராமன்.)
சூரி: ரைட் சார் போகலாம்! (விசில் ஊதுகிறான்.)
பஸ் பயணிகள்: அடடா முதலாளி மாணவர்கள் படிப்புக்கு எத்தனை முக்கியம் தர்றார் பார்த்தீங்களா.
காட்சி 3
இடம் - கஸ்தூர்பாகாந்தி பள்ளி விழா வளாகம்
மாந்தர் - தலைமை ஆசிரியர், ஜெயராமன், மாணவ, மாணவிகள்.
(மாணவர்கள் பெற்றோர் மத்தியில் தலைமை ஆசிரியர் உரை ஆற்றுகிறார்)
தலைமை ஆசிரியர்: நமது பள்ளி மாணவன் செந்தில் கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளான். மொத்த மதிப்பெண் கூட்டலிலும் மாவட்டத்தில் முதல்
மாணவன் என்ற பெருமை நமக்கு வாங்கித்தந்துள்ளான். அன்று கணிதத் தேர்வுக்குச் செல்லும் போது பள்ளி வாகனம் பழுது ஆகி நின்ற போது நமது
மதிப்புக்குரிய ஜெயம் விலாஸ் பஸ் கம்பெனி முதலாளி ஐயா அவர்கள் தன் கம்பெனி பஸ்ûஸ தானே ஓட்டி வந்து மாணவர்களை பள்ளியில் சேர்த்தார்
நேரத்துக்கு. அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்!....
(பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார்)
ஜெயராமன்: (தன் நன்றி உரையில்) அனைவருக்கும் வணக்கம். நான் படிக்கும்போது இறுதிப் பரிட்சை நாள்!... அன்று கிராமத்தில் இருந்து கிளம்பிய போது பஸ்
வரவில்லை!.... நடந்து தான் வேகமாக பள்ளிக்கு வந்து சேர்ந்தேன்!..... மிகத் தாமதமாக வந்ததால் என்னை எழுத அனுமதிக்கவில்லை!.... வசதி இல்லாத
குடும்பத்தைச் சேர்ந்த என் படிப்பு அத்துடன் முடிந்துவிட்டது. ஒரு லாரியில் கிளீனர் ஆகச் சேர்ந்து வேலை செய்தேன். பஸ் ஓட்டக் கற்றுக் கொண்டேன்!....பிறகு
லைசென்ஸ் பெற்று ஒரு பழைய பஸ் வாங்கி ஓட்டினேன்..... கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று என் கம்பெனியில் முன்னூறு பஸ்கள் மாவட்டம்
முழுவதும் இயங்குகின்றன!.... அன்று மட்டும் எனக்கு பஸ் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை ஒரு வேளை மாறி இருந்திருக்கலாம்! ஆனால் கல்வியில் தேர்ச்சி
பெற்ற ஒரு சிறந்த கல்விமானாக நான் ஆகவில்லை என்ற ஏக்கம் இன்றும் எனக்கு இருக்கிறது!... எனவே கல்வி பெறும் மாணவர்களுக்காக நான் என்னால்
இயன்ற உதவியை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன்! நன்றி! எல்லோருக்கும் வணக்கம்!.....
(பலத்த கைதட்டல் விண்ணை முட்டுகிறது)
தலைமை ஆசிரியர்: அந்த வராத பஸ்ஸூக்கு நன்றி!.... இல்லாவிட்டால் இத்தனை தங்கமான மனம் கொண்ட முதலாளி எங்களுக்குக் கிடைத்திருப்பாரா..?...
(பலத்த கைதட்டல் மறுபடி)
(ஜெயராமன் புன்னகையுடன் அதை ஏற்கிறார் தலையாட்டியபடி.)