முகப்பு
சிறுவர்மணி

யார் தலைவன்..? 

கல்வியாண்டின் முதல் நாள் வகுப்பில் நுழைந்தார் ஆசிரியர் ராமலிங்கம். மாணவர்கள் ஒவ்வொருவராக ஏற்கனவே படித்த பள்ளி மற்றும் எதிர்காலக் குறிக்கோள் இவற்றையல்லாம்  சொல்லிக்கொண்டே வந்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

கல்வியாண்டின் முதல் நாள் வகுப்பில் நுழைந்தார் ஆசிரியர் ராமலிங்கம். மாணவர்கள் ஒவ்வொருவராக ஏற்கனவே படித்த பள்ளி மற்றும் எதிர்காலக் குறிக்கோள் இவற்றையல்லாம்  சொல்லிக்கொண்டே வந்தனர். 
பெரும்பாலான மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவராகவோ எஞ்சினியராகவோ வரவேண்டும் என்று அவர்களின்  ஆசையைப் பகிர்ந்துகொண்டனர். 
""ஏன்,  உங்களில் ஒருவருக்குக்கூட ஆசிரியராகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது சமூகத்திற்கு சேவை செய்யும் இந்திய ஆட்சிப்பணிக்கோ செல்ல விருப்பம் இல்லையா?''  என வியப்புடன் வினவினார் ஆசிரியர்.
""ஐயா! யாரைக்கேட்டாலும் டாக்டராகனும்,  எஞ்சினியராகனும் சொல்றாங்க. எங்க பெற்றோர்களும் அதயேதான் அடிக்கடி சொல்றாங்க. அதான் நாங்களும் சொன்னோம்!'' என்றனர் மாணவர்கள்.
""சரி! சரி!...  எந்த வேலைக்குப் போனாலும் அடுத்தவருக்கு சேவை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்!'' என்றார் ஆசிரியர்.
""சரி ஐயா!. இந்த கல்வியாண்டுக்கு வகுப்புத் தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா..?'' என்று மாணவர்கள் சொன்னது போதுதான்  ஆசிரியருக்கு நினைவுக்கு வந்தது,
""ஆமாம்!வந்ததுமே நினைத்தேன். நல்ல வகுப்புத் தலைவன் வேணும்.  யாரைத் தேர்வு செய்யலாம்..? நீங்களே சொல்லுங்கள்!'' என்றார் ஆசிரியர்.
அடுத்த சில நிமிடங்களில் வகுப்பில் அமர்ந்திருந்த பலர் எழுந்து நின்று விருப்பம் தெரிவித்தனர். உடனே முடிவெடுக்க முடியாத நிலையில் ஆசிரியர்!    
""உங்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக  உள்ளது. சரி! உங்களில் யாருக்கெல்லம் விட்டுக் கொடுக்கும் எண்ணம் உள்ளதோ, அவர்கள் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளலாம்!'' என்றார்.

சிவா, ரகு, மோகன் என்ற மூன்று மாணவர்களைத்தவிர, அனைவரும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். இதனால் ஆசிரியருக்கு மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.   ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு மூவரையும் அழைத்தார்.
""அன்பு மாணவச் செல்வங்களே..! இம்மூவருக்கும் ஒரு போட்டி வைத்து, அதில் வெற்றி பெறும் ஒருவருக்கு வகுப்புத் தலைவன் பதவி அளிக்க முடிவு செய்துள்ளேன்...''
""என்ன போட்டி ஐயா..?...'' ஆர்வமாய்க் கேட்டனர் மாணவர்கள். 
""கொஞ்சம் பொறுங்கள்!....'' என்று வெளியில் சென்ற ஆசிரியர் சற்று நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தார்.
""வகுப்புக்கு வெளியே மூன்று களிமண் குவியல் வைத்துள்ளேன். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், காய்ந்து போயிருக்கும் இக்களிமண் குவியலை இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடவேண்டும். இதுதான் போட்டி!....'' என்றார் ஆசிரியர்.
போட்டியும் ஆரம்பித்தது! மூவரில் மோகன்  பெரிய சம்மட்டியும், ரகு மண்வெட்டியும் கொண்டுவந்தான். ஆனால் சிவா  வாளி ஒன்றில்  தண்ணீரை எடுத்து வந்தான். இதையெல்லாம்  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்களுக்கு ஒன்றுமே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
மோகன்  சம்மட்டியைக்கொண்டு காய்ந்த களிமன் குவியலை அடித்து நொறுக்கினான். சிறிது நேரத்தில் அதை இருக்கும் இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக்கிவிட்டு பெருமிதத்துடன்  திரும்பி வந்தான்.
ரகு மண்வெட்டியைக் கொண்டு ஒரு பெரிய பள்ளம் தோண்டினான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட களிமண் குவியலை அதனுள்  தள்ளி மூடினான்.  அவனது மண் குவியலும் அப்போது மறைந்துவிட்டது. அனைவரின் கவனமும்! இப்போது சிவாவின்மேல் திரும்பியது. 
வாளியில் கொண்டுவந்த தண்ணீரைக் கொண்டு களிமண்ணை ஈரமாக்கி ஏதோ செய்து முடித்திருந்தான். காலம் முடிந்ததும், ஆசிரியர் ராமலிங்கம் முடிவை அறிவிக்கத் தயாரானார்.
""களிமண்ணை சம்மட்டியால் அடித்து நொறுக்கி மண்ணோடு மண்ணாகக் கலக்கச் செய்து விட்டான் மோகன். அடுத்ததாக ரகு,  ஒரு பெரிய பள்ளம் வெட்டி அதில் களிமண்ணைப்போட்டு மூடிவிட்டான். ஆனால் நம்ம சிவா, அவனுக்கு ஒதுக்கப்பட்ட  அக்களிமண்ணைக் கொண்டு அழகாக.. மகாத்மாகாந்தி. அன்னை தெரெசா,  காமராஜர், அப்துல்கலாம் போன்ற தலைவர்களின் உருவங்களைச் செய்து அசத்தியிருக்கிறான். இப்போ நீங்களே சொல்லுங்க. யார் வெற்றி பெற்றது?...'' என்றார் ஆசிரியர்.
அனைத்து மாணவர்களும்  ஒருமித்த குரலில்,   ""சார்! சிவாதான் எங்க வகுப்புத் தலைவன்!....''  என்று பெருமிதத்துடன்  கூறினர். ஆசிரியர் ராமலிங்கம் ஒரு திறமை வாய்ந்த மாணவன் சிவாவை வகுப்புத் தலைவனாக்கிய பெருமிதத்தோடு அடுத்த வகுப்புக்குச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.