முத்துக் கதை: அங்கி!
அரண்மனைத் தையல்காரர் சிவஞானம் தன் இல்லத்தில் மகாராஜாவின் அங்கியைத் தைக்க பட்டுத் துணியை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.
அரண்மனைத் தையல்காரர் சிவஞானம் தன் இல்லத்தில் மகாராஜாவின் அங்கியைத் தைக்க பட்டுத் துணியை அளவெடுத்துக் கொண்டிருந்தார். அவசரத் தேவை என ஆள் வந்து சொன்னதால் இரவோடு இரவாக தைக்க தயார் செய்து கொண்டிருந்தார். அவர் மனைவி தைலம்மை ஊசிகளில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தாள்.
பெரிய அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் தையல் வேலையை ஆரம்பித்தார். நடு நிசி தாண்டியது. அங்கி தயாராகி விட்டது.
ஜரிகை வேலைப்பாட்டைத் தொடங்கினார். நேர்த்தியாக அமைந்து விட்டது! மடித்து அழகாக ஒரு பெட்டியில் வைக்கப் போனபோது கை தவறி அகல் விழ அங்கி முழுவதும் எண்ணெய் தெறித்து விட்டது!
அங்கங்கே புள்ளி புள்ளியாக அலங்கோலமாகிவிட்டது. அவர் மனைவி அவசர அவசரமாக சுண்ணாம்பு பொடியைத் தடவி எண்ணெய்க் கறையை நீக்க முயற்சித்தாள். திகைத்துப் போனார் சிவஞானம்.
""என்னங்க உள் பக்கம் தானே.. வெளியே தெரியாது ஒரு மெல்லிய துணியை அதே வண்ணத்தில் உட்பக்கமாகப் பொருத்தி மறைத்து விடலாம்.. தெரியாது''..
""என்ன சொன்னே நீ! இது அரசரின் அங்கி. இதை அணிந்து கொண்டு அவர் பல வெளி தேச அரசர்கள், மந்திரிப் பிரதானிகளுடன் விருந்துக்குப் போக வேண்டும். நம் நாட்டின் பெருமைச் சின்னமல்லவா நம் அரசர். என் மனம் ஒப்பவில்லை. இப்போதே வேறு ஒரு அங்கியை தைத்து விடுகிறேன்''
மிகவும் சிரமப்பட்டு இன்னொரு அங்கியை தயாரித்து அலங்கார வேலைகள் முடிந்த போது பொழுது விடிந்து விட்டது. வெளியே குதிரைச் சத்தம்,.
காவலன் அங்கி மடித்து இருந்த பெட்டியை வாங்கிச் சென்றான்.
ஒரு வாரம் கழித்து சிவஞானத்தை சபைக்கு வரவழைத்தார் மன்னர். கை கட்டி வாய் பொத்தி நின்ற சிவஞானத்திடம் ""எண்ணெய்க் கறை பட்ட அங்கியை என்னப்பா செய்தாய்?'' என்று கேட்க, சிவஞானம் விக்கித்துப் போனார்.
""திகைக்காதே.. அன்று இரவு நகர சோதனைக்கு மாறு வேடத்தில் நான் வந்த போது ஊரே அடங்கி விட்ட வேளை உன் வீட்டில் வெளிச்சம் தெரிந்தது. அப்போது நீயும் உன் மனைவியும் பேசியதைக் கேட்டேன்...நடந்ததை அறிந்தேன்! கறை பட்ட அங்கிக்கு மாற்றாக சிரமத்துடன் மறுபடி தைத்த உன் விசுவாசம் என்னை வியப்பில் ஆழ்த்தியது!.... எனச் சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த பெரிய தங்க ஆரத்தை சிவஞானம் கழுத்தில் அணிவித்தார்.
விஷயம் தெரிந்த அவையோர் கரகோஷித்து மகிழ்வை வெளிப்படுத்தினர்.