சிறுவர்மணி

தாத்தாவின் கோபம்!

காசிக்குத் தாத்தாவும் சென்று வந்தார் - உடன் களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்.

DIN

காசிக்குத் தாத்தாவும் சென்று வந்தார் - உடன்
 களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்.
 ஆசையாக் கூடிப் பேசுகையில் - அங்கே
 ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான்.
 "அத்தையும் காசிக்குச் சென்று வந்தாள் - இனி
 அவரைக்காய் தின்பதே இல்லையென்றாள்.
 சித்தப்பா காசிக்குச் சென்று வந்தார் - இனி
 சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார்.
 பாட்டியும் காசிக்குச் சென்று வந்தாள் - இனி
 பாகற்காய் தின்பதே இல்லையென்றாள்.
 சீட்டாடும் பழக்கத்தை விட்டே னென்றார் - காசி
 சென்று திரும்பிய மாமாவுமே.
 இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் - அங்கே
 ஏதேனும் ஒன்றினை விட்டு வந்தார்.
 அப்படி நீயும் விட்டதென்ன? தாத்தா
 அவசியம் கூறிட வேண்டு'' மென்றான்.
 "கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர் - என்னைக்
 கூறிடுவாரன்றோ? ஆதலினால்
 கோபத்தைக் காசியில் விட்டு வந்தேன்'' - என்றே
 கூறினார் மறுமொழி தாத்தாவுமே.
 கண்ணனும் உடனேயே, ""தாத்தா, தாத்தா நீயும்
 காசியில் விட்டதும் என்ன?'' என்றான்.
 "இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே...
 எங்கே கவனமோ? '' என்றுரைத்தார்.
 முரளியும், ""தாத்தா நீ விட்டதென்ன?'' - என்றே
 மீண்டும் ஒரமுறை கேட்டிடவே
 திரும்பவும் ""கோபத்தை விட்டே'' னென்றே - தாத்தா
 செப்பினர் முரளியும் "ஓகோ'' என்றான்.
 அருணனும் கோபுவும் அழகப்பனும் - இன்னும்
 அலமுவும் கீதா காவேரியுமே
 திரும்பத் திரும்ப இக்கேள்விதனைக் - கேட்கச்
 சீறி எழுந்தனர் தாத்தாவுமே!
 "வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா - என்ன
 வேடிக்கையா இங்கே காட்டுகின்றீர்?
 தோலை உரித்தே எடுத்திடுவேன்'' என்று சொல்லியே
 கையில் தடி எடுத்தார்!
 "கோபத்தைக் காசியில் விட்டே னென்றார் - இதோ
 குண்டாந்தடியுடன் வந்ததடா!
 ஆபத்து! ஆபத்து '' என்றே சொல்லி - உடன்
 அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!
 - அழ. வள்ளியப்பா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT