முகப்பு
சிறுவர்மணி

கண்ணாடியின் கதை!

மனிதன் முதன்முதலாக கண்ணாடியைக் கண்டுபிடித்தது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வுதான். இந்த சம்பவம்தான் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக இருந்ததாக பண்டைய ரோமானிய வரலாற்று ஆசிரியர் பாலினி சொல்கிறார். 

Updated On : 10 நவம்பர், 2018 at 3:07 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:46 PM


மனிதன் முதன்முதலாக கண்ணாடியைக் கண்டுபிடித்தது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வுதான். இந்த சம்பவம்தான் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக இருந்ததாக பண்டைய ரோமானிய வரலாற்று ஆசிரியர் பாலினி சொல்கிறார். 

கடற்கரை ஓரத்தில் கட்டிட கட்டுமானத்திற்கான கற்களை விற்கும் வியாபாரிகள் சிலர் ஓய்வெடுப்பதற்காக கூடாரம் அமைத்துத் தங்கினர். பசியாறுவதற்காக சில கற்களைக் கொண்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். அந்தக் கற்கள் சூடாகி உருகி திரவமாக ஓடி பளபளப்பாக நிலத்தில் உறைந்துவிட்டது! மிக வினோதமான அந்தப் பொருளை அவர்கள் விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அந்தச் சம்பவம்தான் கண்ணாடி உருவாகக் காரணமாக அமைந்தது என சொல்லப்படுகிறது. 

செயற்கையான கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டது எப்போது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. கி.மு.1500 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மெசபடோமியா மற்றும் எகிப்தில் கண்ணாடி பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். சிலிக்கா மணலில் செய்த பாத்திர அச்சுகளை உருகிய கண்ணாடி திரவத்திற்குள் தோய்த்து கண்ணாடிப் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். 

Advertisement

இம்முறை 500 வருடங்களில் மத்திய தரைக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் பரவி கண்ணாடி தயாரிப்புத் தொழில் வெற்றிகரமாக இருந்துள்ளது.  கண்ணாடி தயாரிப்புக்குக் கடும் உழைப்பும், அதிக பணமும் தேவைப்பட்டன. ஆனால் கண்ணாடி விலை உயர்வானதாக இருந்தது! அக்காலகட்டத்தில் கண்ணாடிப் பொருட்களை மன்னர்களும், பெரும் செல்வந்தர்களுமே பயன் படுத்தி வந்தனர். அறிவியல் வளர்ச்சிதான் இந்தப் பாகுபாடுகளைக் களைந்தது எனலாம். 

கண்ணாடி குறித்த மேலும் ஒரு வரலாற்றுத் தகவலும் உண்டு. கி.மு. 27 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஊதுகுழல் கருவி சிரியன் பொறியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நீண்ட இரும்புக் குழலின் நுனியைக் கண்ணாடித் திரவத்தின் மேல் வைத்து அதன் மறுமுனையில் இருந்து காற்றை ஊதி திரவத்தை அச்சுக்குள் படிய வைப்பதுதான் இம்முறை. இந்த யுக்தி கண்ணாடி தயாரிப்பை மிகவும் எளிமையாக்கியது. அதனால் கண்ணாடி விலையும் குறைந்தது. சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 
கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய ஆண்டுகள் வரை கால்ஷியமும், இரும்பு தாதுக்களும் கலந்த மணல் 1700 சென்டிகிரேடுக்கு மேல் சூடாக்கும்போது உண்டாகும் பளபளப்பான திரவத்தை வைத்துத்தான் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் சோடியம் கார்பனேட்டையும், கால்சியம் கார்பனேட்டையும் கலந்து உருக்கும் ரசாயன முறை கண்டுபிடிக்கப்பட்டது பிறகு அதனுடன் மக்னீஷியம் ஆக்ûஸடு சேர்த்ததும் கண்ணாடிக்கு ஒளி புகும் தன்மை வந்தது. இந்தியாவில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்தே கண்ணாடிகள் சில ஆபரணங்களாக புழக்கத்தில் இருந்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.