என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் மகிழ மரம் பேசறேன். எனது அறிவியல் பெயர் மிமுசோப்ஸ் இலாங்கி, ஆங்கிலப் பெயர் ஸ்பானிஷ் செர்ரி என்பதாகும். நான் சபோடாசியே குடும்பத்தை சேர்ந்தவன். நான் இளம் பச்சை நிறத்தில் அடர்த்தியான இலைகளையும், மணம் மிக்க சக்கர வடிவிலான மலர்களையும் கொண்டிருப்பேன்.
நான் ஆண்டு முழுவதும் பசுமையாக இருப்பேன். என்னுடைய மலர்கள் பதினைந்து, இருபது நாட்கள் வரை வாடாமல் இருக்கும். வாடினாலும் வாசனை இருக்கும். தென்னிந்தியாவின் வனப் பகுதிகளில் நான் அதிகமாகக் காணப்படுவேன். தமிழ்நாட்டில் எல்லா வகையான நிலப் பகுதிகளிலும் வளரும் திறன் எனக்கு உண்டு. பண்டைய தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும் போது மகிழமரக் கன்று ஒன்றை நட்டு மகிழ்ந்தார்கள்.
என்னுடைய மலர், கனி, விதை, பட்டை ஆகியவை மருத்துவ பயன்கள் உடையவை. என்னுடைய மலர்களிலிருந்து வாசனைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. காய்ந்த மகிழம் பூக்களை பொடி செய்து மூக்குப் பொடி போல உபயோகித்தால் நாள்பட்ட தலைவலி நீங்கும்.
என்னுடைய கனிகள் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாகவும், பட்டை சத்து மருந்தாகவும், காய்ச்சல் போக்கும் மருந்தாகும், பல் ஈறு தொடர்பான வலிகளைப் போக்கும் மருந்தாகவும், மேலும், மகிழம் பூ சாறு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தலைக்கு தடவி வந்தால் உங்களுக்கு பொடுகு, பேன் தொல்லை இருக்காது.
இலக்கியத்தில் என்னை "வகுள மரம்' என்று குறிப்பிடுகிறார்கள். "ஓடு தேர்க்கான் வகுளம்' என்று சீவகசிந்தாமணியும், "மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்' - வாக்குண்டாம்' என ஒளவையாரும், "நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை' என மணிமேகலையும் குறிப்பிடுகிறது.
நினைத்தாலே முக்தித் தரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலிலும், சென்னை, திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலிலும் நான் தலவிருட்சமாக உள்ளேன்.
என்னுடைய ராசி துலாம், நட்சத்திரம் அனுஷம், நான் "சாதாரண' தமிழ் ஆண்டை சேர்ந்தவன். பசுமையாக மரங்களை வளர்த்திடுவோம் ! பரிசாக மழையைப் பெற்றிடுவோம் ! நன்றி குழந்தைகளே !
(வளருவேன்)
- பா.இராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.