மரங்களின் வரங்கள்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
பலா மரம்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் பலா மரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் ஆர்ட்டோ கார்பஸ் ஹெடெரொஃ பில்லஸ் லாம்க். நான் மோரேஸி என்ற குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் எனதருமை தமிழ் மக்களின் முக்கனிகளில் இரண்டாவதாக இருக்கிறேன். என்னை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நான் கால்நடைகளுக்கு நல்ல உணவாகவும் விளங்குகிறேன். நான் ஒரு பசுமை மாறா மரம். நான் வறண்ட இடங்களில் கூட முழுமையாக இலையை உதிர்த்திடாது ஓங்கி உயர்ந்து வளருவேன். நான் ஈரச் செழிப்புள்ள மணற்பாங்கான நிலங்களிலும், மலைச்சரிவுகளில் அதிகமாகக் காணப்படுவேன்.
Advertisement
குழந்தைகளே, என்னுடைய காய்களை கறியாகச் சமைத்து உண்ணலாம். சுவையாக இருக்கும். என்னை நேரடியாக உண்பதுடன், ஜாம், பானம், ஜெல்லி முதலியவையும் செய்து சாப்பிடலாம். நான் வீணை, தம்புரா முதலிய இசைக் கருவிகளும், பல விதமான மரச்சாமான்கள், பொம்மைகள் செய்யவும் பயன்படுவேன். நான் ஆஸ்துமா, கண் பார்வை குறைவு, புற்று நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பேன்.
என்னிடம் புரத சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. என்னிடம் பொட்டாசிய சத்து அதிகமாக இருப்பதால், உங்கள் உடலில் சோடியத்தின் அளவை சீராகப் பராமரிக்கவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுப்பேன். என்னிடம் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருந்து மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்ப்பேன். மேலும், உடலிலிருந்து நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி என் பழத்தைப் போலவே உங்களையும் பளபள என வைத்திருப்பேன். என்னுடைய இலையை காய வைத்து பொடியாக்கி தேனில் கலந்து காலை வேலையில் அருந்தினால் நாள்பட்ட வயிற்றுப் புண்ணைப் போக்குவேன். நான் முதுமையை தள்ளிப் போடுவேன். என் காம்பு அருகிலுள்ள சிறு முட்களை எண்ணி ஆறால் பெருக்கி ஐந்தால் வகுத்தால் என்னுள்ள உள்ள பலா பழத்தின் சுளைகளை அறியலாம் என "கணக்கதிகாரம்' என்ற நூல் தெரிவிக்கிறது.
நான் தமிழ் ஆண்டில் சுபகிருது ஆண்டை சேர்ந்தவள்.
என்னுடைய நட்சத்திரம் உத்திராடம், ராசி மிதுனம்.
(வளருவேன்)