மரங்களின் வரங்கள்!: வேப்ப மரம்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் வேப்ப மரம் பேசுகிறேன். ஐயோ, கசப்பு வந்து விட்டது என்று என்னை வெறுத்து ஓடாதீர்கள். தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். நான் மனிதர்களை வாழ வைக்கும் அமுத சுரபியாக விளங்குகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா! நான் மீலியேசி குடும்பத்தை சேர்ந்தவள். என்னுடைய தாயகம் பாரதம். நான் கசப்பானவளாக இருந்தாலும், நான் பல நோய்களைக் குணப்படுத்துவேன் என்ற இனிப்பான செய்திகளை உங்களுக்கு சொல்ல வந்திருக்கிறேன்.
என் மூச்சுக் காற்றுப் பட்டாலே நோய்கள் பறந்தோடி விடும். என்னிடமிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாவும் பயன்படுகிறது. நச்சுக் கிருமிகளை அழிக்கும் திறன் எனக்கு உள்ளது. என்னுடைய இலை கொசு விரட்டியாக பயன்படுகிறது. இலையை அரைத்துக் களிம்பாக்கி புண்களை ஆற்றவும், கட்டி வீக்கங்களைக் கரைக்கவும் பயன்படுத்தலாம். என் பட்டை காய்ச்சலைப் போக்க பயன்படுகிறது.
Advertisement
என் எண்ணெய், மூலம், பலவீனம், தோல் நோய்கள், குஷ்டம், மூட்டுவலி, பொடுகு, புண், அம்மை, புற்று நோய், பாம்புக்கடி ஆகிய பிரச்சினைகளுக்கு பயன்படுகிறது. என்னுடைய குச்சியினால் பல் துலக்கினால் பயோரியா போன்ற பல் நோய்கள் வராது. அதனால் குழந்தைகளே, "ஆலும் வேலும் பல்லுக்குருதி' என்கின்றனர்.
என்னுடைய பிசின் மேக நோயைப் போக்கும். எனவே, நான் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்கும் வல்லமை படைத்தவளாக இருக்கிறேன். நான் உங்கள் உடல் நலன் காக்கும் அருள் மிகுந்த கிருமி நாசினி. என்னுடைய காற்றும், நிழலும் க்ஷய ரோகம் எனும் காச நோயை விரட்டக் கூடியது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்ததனாலேயே அமெரிக்கா என்னை உரிமைக் கொண்டாடியது.
வேதங்கள் தான் வேப்ப மரங்களாக மாறியது என்கிறது புராணம். நான் சக்தியின் அம்சம். எனவே தான், அம்மனின் கோயில்களில் என்னை தெய்வமாக மதித்து மக்கள் வழிபடுகிறார்கள். நான் காற்றிலுள்ள நச்சுகளை உறிஞ்சிக் கொண்டு, வீடுகளுக்குத் தேவையான நிலை கதவு, ஜன்னல் போன்றவைகளை தயாரிக்க பயன்படுவதால் என்னை ஏழையின் தேக்கு என்றும் அழைக்கிறார்கள். நான் உங்கள் ஆரோக்கியத்திற்கு அரண். என்னுடைய பழத்திலிருந்து கிடைக்கும் "அசாடைரக்டின்' என்ற வேதிப்பொருள் அதிக விலை மதிப்புள்ளது.
நான் தமிழ் மக்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்திருக்கிறேன். என்னுடைய பூவிலிருந்து வடகம், பச்சடி, ரசம் தயாரிக்கலாம். மிகவும் ருசியாக இருக்கும். குடந்தை வியாழ சேமேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு வைத்திதீஸ்வரன் திருக்கோவிலில் நான் தலவிருட்சமாக இருக்கிறேன்.
என்னுடைய நட்சத்திரம் உத்திரட்டாதி நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது நன்றி குழந்தைகளே !
(வளருவேன்)