கருவூலம்: குஜராத் மாநிலம்
துவாரகா என்று அழைக்கப்படும் துவாரகை நகரம் ""தேவ பூமி துவாரகை'' மாவட்டத்தில் அரபிக் கடற்கரையில் அமைந்துள்ளது.
சென்ற இதழ்த் தொடர்ச்சி.....
துவாரகை!
துவாரகா என்று அழைக்கப்படும் துவாரகை நகரம் ""தேவ பூமி துவாரகை'' மாவட்டத்தில் அரபிக் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏழு மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். மேலும் முக்தி தரும் 7 நகரங்களில் இதுவும் ஒன்று.
Advertisement
பண்டைய யதுகுல அரசர்கள் ஆட்சி செய்த ஆநர்த்தா நாட்டின் தலைநகரமாக விளங்கிய துவாரகை நகரை ஸ்ரீகிருஷ்ணர் உருவாக்கினார் என்று நம்பப் படுகிறது. மகாபாரத காவியத்தில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகா பீடம் இங்குதான் உள்ளது. மேலும் துவாரகை சிந்து சமவெளி நாகரீக தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது.
துவாரகாதீஸ்வரர் ஆலயம்!
இந்த ஆலயம் துவாரகை நகரில் உள்ளது. அழகிய கிருஷ்ணர் கோயில்! 108 திவ்ய தேசங்களில் ஒன்று. 5 ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம்!
இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கிருஷ்ணர் ஆட்சி செய்த அன்றைய துவாரகை கடலில் மூழ்கிவிட்டது. கிருஷ்ணரின் பேரனான வஜ்ரநாபி என்பவரால் கி.மு. 400 - இல் இந்தக் கோயில் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது.
இவ்விடத்தில் ஏற்கெனவே இருந்த ஆலயம் கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பாலும், பிற இன்னல்களாலும் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சாளுக்கிய பாணியில் கட்டப்பட்ட துவாரகை கிருஷ்ணர் ஆலயம் மிகப் பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணரின் பட்டத்தரசிகளுக்கும், பலஹராமருக்கும், துர்வாச முனிவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இந்த ஆலயம் உலகப் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ருக்மணிதேவி கோயில்!
ஊருக்கு வெளியே பட்டத்தரசியான ருக்மணி தேவிக்கு ஒரு கோயில் உள்ளது. 12 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயில் அற்புதமான கலையம்சம் கொண்டதாக அமைந்துள்ளது.
பேட் துவாரகை!
இது கட்ச் வளைகுடாவில் உள்ள தீவு ஆகும். இதனைத் தீவுத் துவாரகை என்றும் அழைக்கின்றனர். இங்கும் கிருஷ்ணருக்கு ஆலயம் உள்ளது. சிந்து சமவெளி நாகரிக தொல்லியல் களங்களில் இதுவும் ஒன்று.
துவாரகை தொல்லியல் கள ஆய்வுகள்!
1963 - இல் இந்திய தொல்லியல் ஆய்வகம் துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன! துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கி இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாகேஸ்வர் கோயில் துவாரகை!
நாகநாதர் கோயில் என்றும் இச்சிவன் கோயில் அழைக்கப்படுகிறது. துவாரகை நகருக்கு வெளியே அமைந்துள்ள இக்கோயில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.
சூரியன் கோயில் மோதேரா!
கி.பி. 1026 - ஆம் ஆண்டில் செளராஷ்டிர வம்சத்தை ஆண்ட சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவியால் சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களும், கலை நுணுக்கங்களும் கொண்ட இக்கோயில் மகிசனா மாவட்டத்தில் புஷ்பாவதி ஆற்றங்கரையில் உள்ளது.
இக்கோயிலின் சில பகுதிகள் கஜினி முகம்மது மற்றும் அலாவுதீன் கில்ஜியின் படைகள் படையெடுத்து வந்த போது, அவர்களின் படைகளால் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் இந்து மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது.
சாளுக்கிய கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக தனிச் சிறப்புகளுடன் அற்புதமான கலை நயத்துடன் கட்டப்பட்ட இக்கோயிலில் 3 மண்டபங்கள் உள்ளன.
சபா மண்டபம்!
இம்மண்டபத்திற்கு செல்லும் வழியில் மிகப் பெரிய தோரண வளைவுகள் உள்ளன. வியக்கத்தக்க வகையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய 52 தூண்கள் உள்ளன.
குடா மண்டபம்!
இம்மண்டபத்தில்தான் கோயிலின் கருவறை உள்ளது. குதிரைகள் பூட்டிய தேரில் சூரிய பகவான் அமர்ந்து இருப்பது போன்ற சிலை வடிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற சுவர்களில் சூரியனின் 12 நிலைகளை எடுத்துக்காட்டும் விதமான சிற்பங்களுடன் பல அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சூரிய குண்டம்!
செவ்வக வடிவில் அமைந்த ஆழமான குளம்தான் சூரிய குண்டம்! இக்குளம் 53 . 6 மீ நீளமும், 30 . 6 மீ அகலமும் கொண்டது. மக்கள் இறங்கி நீராட வசதியாக நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படிகளுக்கு இடையே 108 சிறு சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
நாட்டியாஞ்சலித் திருவிழா!
இந்தியாவின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளக்கும் விதமாக மோதேரா சூரியன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 3 நாட்கள் புகழ் பெற்ற கலைஞர்களின் நாட்டியாஞ்சலித் திருவிழா நடத்தப்படுகிறது.
ராணியின் கிணறு!
நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணறு பதான் மாவட்டத்தில் உள்ளது. இக்கிணறு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் சேமிப்புக்காக படிக்கிணறு எனப்படும் இவ்வகைக் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மக்கள் நீரை எடுக்க வசதியாக நூற்றுக்கணக்கான படிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படிக்கிணறு சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவி ராணி உதயமதியால் நிறுவப்பட்டதால் ராணியின் கிணறு எனப்படுகிறது.
இக்கிணற்றில் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், காளி, நாக கன்னிகள், 16 வகையான கலை நயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் உள்ளிட்ட 800 -க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நிஷ்களங்கேஷ்வர் ஆலயம்! - பாவ் நகர்.
மிகவும் எளிமையான இந்த ஆலயம் பாவ் நகருக்கு அருகில் உள்ள கோலியாக் கடற்கரையில் உள்ளது. முழுக்க, முழுக்க ஆச்சரியங்களும், பிரமிப்புகளும் கொண்டது. கடற்கரையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் அரபிக் கடலுக்குள் இருக்கிறது. கடலில் அலைகள் அதிகம் உள்ள நேரங்களில் இங்கு ஒரு தூணையும் கொடியையும் மட்டுமே காணமுடியும்! ஆனால் அலைகள் குறைந்த நேரத்தில் கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று 5 சுயம்பு லிங்கங்களை தரிசனம் செய்யலாம்!
தினந்தோறும் கடல் உள்வாங்கி சிவனை வழிபட வழிவிடுகிறது! இந்த 5 சிவ லிங்கங்களும் பாண்டவர்கள் ஐவரும் வணங்கியவை என்று கூறப்படுகிறது!
கிர்நார் மலைகள்!
கிர்நார் என்பது ஒரு மலைத்தொடராகும்! 5 சிகரங்களைக் கொண்டது. குஜராத்தின் மிக உயரமான மலை. 3061 அடி உயரமும் பத்தாயிரம் படிகளும் கொண்டது. ஜூனாகாத் மாவட்டத்தில் இந்த மலைகள் உள்ளன. பெளத்தர்களும், இந்துக்களும் மற்றும் சமணர்களும் கிர்நார் மலையைப் புனிதத் தலமாகக் கருதுகின்றனர். இங்கு தீர்த்தங்கரர் நேமிநாத் கோயில், மல்லிநாத் கோயில், ரிஷபதேவ் கோயில், பார்சவநாத் கோயில், உள்ளிட்ட புகழ் பெற்ற சமண கோயில்களும், பாவ்நாத் மகாதேவ் கோயில், தத்தாத்ரேயர் கோயில், அம்பா மாதா கோயில் காளிகா கோயில் ராமசந்திரா கோயில் முதலியவை உள்ளன.
கரடுமுரடான பாதைகள், அழகிய வனங்கள், செங்குத்தான படிக்கட்டுகள், சிறிய பள்ளத்தாக்குகள், ஆங்காங்கே கோயில்கள் என அற்புதமான சூழல் கொண்டது கிர்நார் மலைத் தொடர்! கார்த்திகை மாதம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இம்மலைகளை வலம் வருகின்றனர்!
பாலிதானா சமணர் கோயில்கள்!
பாலிதானா கோயில்கள் அல்லது சத்ருஞ்ஜெய மலைக்கோயில்கள் பவநகர் மாவட்டத்தில் உள்ள சத்ருஞ்ஜெய மலையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள "சுவேதாம்பர சமண' சமயத்தவர்கள் வழிபடும் 863 கோயில்களின் தொகுப்பாகும். இம்மலைக்கு நேமிநாதர் தவிர மற்ற அனைத்து சமணத் தீர்த்தங்கரர்களும் வருகை புரிந்துள்ளனர். 3000 படிகள் கொண்டது. சமணர்களின் 5 முக்கிய புனிதத் தலங்களில் முதன்மையானது! தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு வந்து வழிபட வேண்டும் என்று சமணர்கள் கருகின்றனர்.
லோத்தல்! - தொல்லியல் அருங்காட்சியகம்!
இந்த அருங்காட்சியகம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ளது. இது ஹரப்பா கால நகரமான லோத்தலில் 1952 - ஆம் ஆண்டு முதல் 1961 - ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கிர் தேசியப் பூங்கா!
செளராஷ்டிரா தீபகற்பத்தில் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது இந்தப் பூங்கா. உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்குப் புகழ் பெற்றது! அதைத் தவிர இங்கு சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், மான் வகைகள், மலைப்பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட பல வகையான வன விலங்குகள் உள்ளன. 250 -க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் இங்கு உள்ளன.
நல் சரோவர் பறவைகள் சரணாலயம்!
அகமதாபாத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் நல் சரோவர் ஏரி உள்ளது. இங்கு, நீர் வாத்துகள், கரண்டி வாயன், செந்நாரை, பெருங்கொக்கு, வெண்கொக்கு போன்ற 100 -க்கும் மேற்பட்ட பறவைகள் வலசை வருகின்றன.
சம்பானேர் பாவாகேத் தொல்லியல் பூங்கா!
பஞ்ச் மஹால் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புதையல். சுமார் 800 மீ. உயரம் கொண்ட பாவாகேத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சம்பானேர் - பாவாகேத் என்று அழைக்கப்படுகிறது. இப்பூங்கா யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
சனா குகைகள்!
இக்குகைகள் சோம்நாத்தில் உள்ள மலை ஒன்றின் மேல் வெவ்வேறு மட்டங்களில் ஒரு குழுவாக அமைந்துள்ளன. இவை கி.மு. 2 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டவை. அழகிய சிற்பங்களும், ஸ்தூபிகளும், படுக்கைகளும் கொண்டவை.
தொடரும்....