காட்சி - 1,
இடம் - ஜான் வீடு, மாந்தர் - ஜான், டேவிட், நசரீனா,
(மூவரும் பால்கனியில் பேசிக்கொண்டிருக்கின்றனர்)
ஜான் : கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கொஞ்சநாள்தான் இருக்கு.... அப்பா கிட்டே சொல்லி நாளைக்கே நாமெல்லாருக்கும் புது டிரெஸ் எடுத்துக்கிட்டு வந்துடணும்.
டேவிட் : ஆமாம் ஜான்!.... நசரீனா தயாரா ஒரு லிஸ்டே எடுத்து வெச்சிருக்கா....
நசரீனா : ஆமாம்!.... என்ன வகை டிரெஸ், என்ன கலர்னு ஒரு லிஸ்டே தயார் பண்ணிட்டேன்!
ஜான் : அப்பத்தான் நாம நேரத்தை சீக்கிரமா டிரெஸ்ûஸ செலக்ட் பண்ணிக்கிட்டு வர முடியும்!.... டேவிட், நேத்து வாட்ஸ் ஆப்லே ஒரு செய்தி படிச்சேன். சொல்ல மறந்துட்டேன்.
டேவிட் : என்ன செய்தி?
ஜான் : ஜெர்மனியிலே "செயின்ட் நிக்கலோன்" என்பவர் மாறு வேஷத்திலே ஒவ்வொரு டிசம்பர் அஞ்சாம் தேதியும் குழந்தைகளை சந்திச்சுப் பேசிட்டுப் போறாராம். அப்புறம் கிறிஸ்துமஸ் அன்னைக்கு அவர்களுக்குப் பரிசுகளும் தர்றாராம்! அதே மாதிரி பல நாடுகள்ளே "சான்டாகிளாஸ்' ங்கிற பெயர்லே, பலபேர் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுண்டு பல குழந்தைகளுக்கும் பரிசுகள் தருவாங்களாம்!
டேவிட் : அதே மாதிரி நம்ம வீட்டுக்கும் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா வந்தா, கிறிஸ்துமஸ் பரிசா நான் எதைக் கேட்பேன் தெரியுமா?
நசரீன் : என்ன கேட்பே?
டேவிட் : ஒரு "ஏ' கிளாஸ் கேமரா வேணும்னு கேட்பேன்! நீ?
நசரீன் : விதம், விதமா மேக்கப் செட் வேணும்னு கேட்பேன்! ஜான், நீ என்ன கேட்பே?
ஜான் : பேட்டரியிலே தானா பறக்கற ஜெட் ப்ளேன் கேட்பேன்!
டேவிட் : மொதல்லே கிறிஸ்துமஸ் தாத்தா வரட்டும்! அப்புறம் பரிசுகள் கேட்போம்!
(வாசலில் ஒரு ஏழை மனிதன் குரல் கொடுக்கிறான்)
ஏழை மனிதன் : ஐயா, ஐயா!
ஜான் : யாருங்க?..... என்ன வேணும்? வீட்டுலே யாரும் இல்லே போங்க!....
ஏழை : தம்பி, நான் உங்களைக் காட்டிலும் வயசுலே ரொம்பப் பெரியவன்!.... ஏழைதானேன்னு மரியாதைக் குறைவாப் பேசாதீங்க....
டேவிட் : ஜான், இவன் கையிலே ஒரு பூனைக்குட்டி வேறே!....
ஜான் : போப்பா!
ஏழை : தம்பி, அப்படியெல்லாம் பேசீதீங்க!..... பசியா இருக்கு!.... ஏதாச்சும் சாப்பிடக் கொடுங்க!
டேவிட் : அதெல்லாம் எதுவும் கிடையாது!
ஏழை : தம்பி, இந்தப் பூனைக்காச்சும் கொஞ்சம் பால் கொடுங்க.... எனக்குத் தண்ணியாச்சும் கொடுங்க!....
நசரீனா : பாலும் இல்லே, சாப்பாடும் இல்லே! எதுவும் இல்லே!.... போங்க!
ஏழை : குழைந்தகளா, கிறிஸ்துமஸ் கொண்டாட ஆவலா இருக்கீங்க! ஸ்காண்டிநேவியான்னு ஒரு நாடு இருக்கு தெரியுமா?
நசரீனா : தெரியும். அதுக்கென்ன?
ஏழை : அங்கே ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்திலேயும் விலங்குகளையும், பறவைகளையும் அலங்கரிச்சு அன்பா விருந்தும் போடறாங்க! அது மட்டுமில்லே, கனடா நாட்டின் ஒரு பகுதியிலே பூனைகளுக்கு ஏக மதிப்பு! அன்னைக்கு பூனைகளை நல்லா கவனிச்சு விருந்தும் வைக்கிறாங்க! நீங்க என்னடான்னா இந்தப் பூனைக்குக் கூட.......
ஜான் : அது எங்க இஷ்டம்! போயிட்டு வாங்க!....
(உள்ளே இருமல் மற்றும் முனகல் சப்தம்)
ஏழை : குறும்புக்காரப் பசங்க! தம்பி உள்ளே யாருப்பா அப்பப்போ இருமிக்கிட்டும், முனகிக்கிட்டும் இருக்காங்க?
டேவிட் : அது எங்க தாத்தா! உடம்பு சரியில்லே... அது அப்படித்தான் இருமிக்கிட்டு இருக்கும்.... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்க.... வந்ததும் கவனிச்சுக்குவாங்க....
ஏழை : பெரியவங்களை அப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசாதீங்க.... உள்ளே போய் தாத்தாவுக்கு என்ன வேணும்னு கேளுங்க....
ஜான் : அதையெல்லாம் கேட்க மாட்டோம்! நீ பேசாம போ!
ஏழை : சரி,.... கர்த்தர்தான் உங்களுக்கு நல்ல புத்தி தரணும்!.... வரேன்!
காட்சி - 2,
இடம் - ஸ்டான்லி குடிசை வீட்டு முன்புறம், மாந்தர் - ஸ்டான்லி, விக்டோரியா.
( ஸ்டான்லி சில புத்தகங்களைத் தூசு தட்டிக்கொண்டிருக்கிறாள்.)
விக்டோரியா : என்ன ஸ்டான்லி, ரொம்பத் தூசா?
ஸ்டான்லி : ஆமாங்க்கா!.... புத்தகங்களை பாதுகாப்பா வெச்சுக்கத்தான் ஒரு அலமாரி இல்லே!
விக்டோரியா : அத்தனையும் அருமையான நூல்கள்! அலமாரி இருந்தா அழகா அடுக்கிக் குறிப்பெழுதி வெச்சுக்கலாம்!
ஸ்டான்லி : ஆனா இதுலே பாதிப் புத்தகங்களைக்கூட நாம இன்னும் படிக்கலே!
விக்டோரியா : எப்படிப் படிக்க முடியும்? தினமும் காலையிலே ஐந்து மணிக்கு எழுந்துக்க ஆசைப்பட்டோம்!.... ஆனா ஆறு மணிக்குத்தானே எழுந்துக்கறோம்! அப்பா, அம்மாவும் நம்மை எழுப்ப மாட்டேங்கிறாங்க.... அந்த ஒரு மணி நேர இழப்பாலே நாம படிக்க நேரம் கிடைக்கறதில்லே....
ஸ்டான்லி : அதோ பார்!.... வாசல்லே யாரோ விழுந்து கிடக்காங்க.... ஒரு பூனை கூட அவர் பக்கத்துலே படுத்துக்கிட்டு இருக்கு பார்!
விக்டோரியா : ஆமாம்! பெரியவர்!... கழுத்துலே ஒரு சிலுவை.... வா!.... ( மெதுவா உள்ளே அழைச்சுக்கிட்டுப் போகிறார்கள்) இங்க பாரு!.... பூனையும் கூடவே வருது...
ஸ்டான்லி : ஐயா, இந்தாங்க தண்ணி, குடிங்க!....
விக்டோரியா : ரொம்பப் பசி போலிருக்கு!.... இந்தாங்க ரொட்டியையும் பாலையும் சாப்பிடுங்க! (பூனைக்கும் பால் தருகிறார்கள்)
ஸ்டான்லி : இந்தாங்க வாழைப்பழம்! (உள்ளிருந்து ஒரு குரல் - ""ஸ்டான்லி!.... விக்டோரியா!'' என்று. - )
ஏழை : போதும்மா!.... உள்ளே யாரோ உங்களைக் கூப்பிடறா மாதிரி இருக்கே!....
விக்டோரியா : எங்க பாட்டிதான்!.... ரெண்டு நாளா ஜுரம்!.... இப்போ மருந்து தர வேண்டிய நேரம்!.... மறந்துட்டேன்.... கொடுத்துட்டு வந்துடறேன்!
ஏழை : அம்மா, அப்பா வீட்டிலே இல்லையா?
ஸ்டான்லி : கிறிஸ்துமஸூக்கு புதுத் துணி வாங்கப் போயிருக்காங்க....
ஏழை : வறுமையிலும் செம்மையா நடந்துக்கற உங்களை சந்திச்சதுலே ரொம்ப சந்தோஷம்! உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்! வரேன்!
காட்சி - 3,
இடம் - தெரு, மாந்தர் - ஸ்டான்லி, விக்டோரியா, ஜான், டேவிட், நசரீனா.
(ஐவரும் சந்திக்கிறார்கள்)
ஸ்டான்லி : டேவிட், ஜான், நசரீனா! உங்களுக்கு எங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! எங்கே போய்க்கிட்டு இருக்கீங்க?
டேவிட் : நாங்க மைக்கேல் தெரு சாலமன் பங்களாவுக்குப் போய்க்கிட்டிருக்கிறோம்! அங்கே கிறிஸ்துமஸ் தாத்தா எங்களுக்குப் பரிசுகள் தரப்போறாராம்! செய்தி வந்திருக்கு!
விக்டோரியா : எங்களையும் அங்கே வரச்சொல்லியிருக்காங்க!.... வாங்க எல்லோரும் ஒண்ணா போவோம்!
காட்சி - 4,
இடம் - சாலமன் பங்களா, மாந்தர் - ஸ்டான்லி, விக்டோரியா, ஜான், டேவிட், நசரீனா, கிறிஸ்துமஸ் தாத்தா.
கிறிஸ்துமஸ் தாத்தா : ஓ!.... குழந்தகளா!.... வாங்க!வாங்க!... உங்க எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
ஐவரும் : உங்களுக்கும் எங்களோட கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தாத்தா!
கி. தாத்தா : ஸ்டான்லி, விக்டோரியா, உங்களை கிறிஸ்துமஸ் கரோல் குழுவில் பார்த்தேன்! பக்தியோட நல்லாப் பாடினீங்க!.... உங்க எல்லோருக்கும் பரிசு தரத்தான் வரவழைச்சிருக்கேன்! உங்களுக்குத் தர வேண்டிய பரிசுகளை இந்த கிறிஸ்துமஸ் மரத்திலேதான் கட்டித் தொங்க விட்டிருக்கேன்!
விக்டோரியா : தாத்தா!.... உங்களுக்கு எங்களை எப்படித் தெரியும்?.... எதுக்குப் பரிசு?
கி. தாத்தா : அதை அப்புறம் சொல்றேன்.... எல்லோரும் இந்த கிறிஸ்துமஸ் மரத்துகிட்டே வாங்க.... ம்... இதோ பாருங்க.... உங்களுக்கான பரிசுப் பொருட்களை, நீண்ட கயிறுகளிலே கட்டி, இந்த மரக்கிளைகள்ளே தொங்க விட்டிருக்கேன்! கயிறுகளின் கீழ் முனைகள்ளே உங்கள் பெயர்கள் எழுதியுள்ள அட்டைகளையும் இணைச்சிருக்கேன்! இந்த அட்டைகள் உள்ள கயிறுகளை இதோ, இங்கே கட்டியிருக்கேன் பாருங்க! நீங்க உங்க பெயர்கள் உள்ள கயிற்றை அவிழ்த்து விட்டதும், உங்களுக்கான பரிசுப் பெட்டி தானா கீழே இறங்கி வரும்! நீங்க அதை எடுத்துக்க வேண்டியதுதான்! முதல்லே ஸ்டான்லி, நீ உன்னோட கயிற்றை அவிழ்த்து விடு!
(ஸ்டான்லி அவ்வாறே செய்ய, மற்றவர்களும் அதே போன்று செய்கிறார்கள்.... பரிசுப் பெட்டிகளைத் திறந்து பார்க்கிறார்கள்)
ஸ்டான்லி : தாத்தா! எனக்கு வந்த பெட்டியிலே, இந்த மூவாயிரம் ரூபாய் ரசீதும், சின்னதா ஒரு அட்டையும் இருக்கு!
கி. தாத்தா : வாழ்த்துகள்! அதோ!... அந்த அறையிலே வச்சிருக்கிற புத்தக அலமாரிதான் உனக்குக் கிடைச்சிருக்கிற பரிசு! அதுக்கான ரசீதும், உத்தரவாத அட்டையும்தான் இது! போய்ப்பாரு!
விக்டோரியா : தாத்தா, எனக்குக் கிடைச்ச பெட்டியிலே ஒரு அழகான கைபேசி இருக்கு!
கி. தாத்தா : சபாஷ்! வாழ்த்துகள்!
ஜான் : என்ன தாத்தா இது, எனக்கு வெறும் பைபிள் பொன்மொழிகள் போட்ட ஸ்டிக்கர்தான் இருக்கு!
நசரீனா : எனக்கு வீட்டுப் பிராணிகள்னு போட்ட ஒரு புத்தகம்தான் வந்திருக்கு! இதுதான் பரிசா?
டேவிட் : "அன்பு செய்து மகிழ்வோம்' னு எழுதின ஒரு படம்தான் எனக்குக் கிடைச்சிருக்கு.... இதெல்லாம் ஒரு பரிசா?
கி. தாத்தா : அப்படிச் சொல்லாதீங்க!... உண்மையிலே உங்களுக்குத் தேவையான, தகுதியான பரிசுகள்தான் கிடைச்சிருக்கு! ஜான், டேவிட், நசரீனா! உங்ககிட்டே ஏழைகளுக்கு இரங்கற குணம் இல்லை. பிராணிகள்கிட்டே அன்பு இல்லே.... பெரியவங்களை மதிச்சு நடந்துக்கிற குணம் இல்லை. இந்த நால்ல குணங்கள் எல்லோருக்கும் இருக்கணும். இதைப் பத்தி உங்களுக்குச் சொல்லத்தான் இந்தப் பரிசுகளை கர்த்தர் உங்களுக்கு அனுப்பிச்சிருக்கார்.
டேவிட் : நாங்க நல்லவங்கதான் தாத்தா!
கி . தாத்தா : யோசிச்சுப் பாருங்க.... இருபது நாள் முன்னாலே உங்க பங்களாவுக்கு ஒரு பூனையோடு வந்த ஏழையை நீங்க அலட்சியப் படுத்திப் பேசினீங்க.... அவனுக்குத் தண்ணி தரக்கூட மறுத்துட்டீங்க.... வீட்டிலே இருந்த வயதான தாத்தாவையும் அலட்சியப்படுத்திப் பேசினீங்க.... நான் சொல்றதெல்லாம் உண்மைதானே?
ஜான் : உண்மைதான்.
கி . தாத்தா : ஆனா விக்டோரியாவும், ஸ்டான்லியும் அந்த ஏழையை அன்போடு உபசரிச்சாங்க.... அவன் கேட்காமலேயே சாப்பிட ரொட்டி கொடுத்தாங்க..... பூனைக்கும் பால் கொடுத்தாங்க.... வீட்டிலே இருக்கிற பாட்டியையும் கவனிச்சுக்கிட்டாங்க! அதனாலே அவங்களுக்குத் தேவையான புத்தக அலமாரியைக் கர்த்தர் கொடுத்திருக்கார். நேரப்படி எழுந்திருக்க அலாரம் அடிக்கிற கைப்பேசியையும் கொடுத்திருக்கார்!
விக்டோரியா : தாத்தா, எங்க பேரு, எங்க தேவை, நாங்க நடந்துகிட்ட விதம் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
கி. தாத்தா : டிசம்பர் ஐந்தாம் நாள் நான்தான் உங்க வீட்டுக்கு வந்து பேசிககிட்டிருந்தேனே!
விக்டோரியா : அப்படியா?
கி. தாத்தா : என்னைத் தெரியல்லே? இப்போ பாருங்க.... (என்றபடி கிறிஸ்துமஸ் தாத்தா வேஷத்தைக் கலைத்துவிட்டு) நான்தான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்த அந்த ஏழை!
ஸ்டான்லி : ஆமாம்!
கி. தாத்தா : ஜெர்மனி நாட்டு "செயின்ட் நிக்காலன்' மாதிரி நானும் செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதான் ஏழை மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்தேன். உங்க குணம், தேவை பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன்! இப்போ புரிஞ்சுதா? மகிழ்ச்சிதானே?
ஜான் : புரிஞ்சுது தாத்தா! இந்த கிறிஸ்துமஸ் நாள்ளே எங்களை நல்வழிப்படுத்தினதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி!
நசரீனா : இனிமே பைபிள் பொன்மொழிகள் படியே நாங்க நடந்துப்போம்!
விக்டோரியா : சான்டா கிளாஸ் தாத்தா! மறுபடியும் வெள்ளை தாடி மீசையை நல்லா ஒட்ட வெச்சுக்குங்க! எல்லோரும் ஒண்ணா ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்!
டேவிட் : சன்டே கிளாஸ்,..... இல்லை,.... சான்டா கிளாஸ் தாத்தா வாழ்க!
(சிரிப்பலைகள்)
- திரை -
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.