கருவூலம்: கிறிஸ்துமஸ் சிறப்புகள்!
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கம் லண்டனிலுள்ள ஆல்பர்ட் மியூசியத்தின் டைரக்டராக இருந்த "சர் ஹென்றி கோல்' என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
வாழ்த்து அட்டை!
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கம் லண்டனிலுள்ள ஆல்பர்ட் மியூசியத்தின் டைரக்டராக இருந்த "சர் ஹென்றி கோல்' என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. "ஜான் கால் சாட் ஹார்ல்லே' என்ற ஓவியரைக்கொண்டு 1843 - இல் வாழ்த்து அட்டைக்கு வடிவமைப்பு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார் கோல். இந்த முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல் மடிப்பு இல்லாத ஒரே அட்டைதான். இதில் மூன்று சித்திரங்கள் இருந்தன. நடுவிலுள்ள படத்தில் விக்டோரியன் காலத்துக் குடும்பத்தினர் பண்டிகை விருந்து மேஜை முன் நண்பரின் நல்வாழ்வுக்காக கோப்பையை உயர்த்தியபடி அமர்ந்திருக்கிறார்கள். கோல் இந்த முதல் கிறிஸ்துமஸ் அட்டையை 1000 பிரதிகளே அச்சிட்டார். இன்று இதில் 12 அட்டைகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. 70,000 வாழ்த்து அட்டைகளைச் சேமித்து வைத்துள்ள உலகிலேயே மிகப் பெரிய அருங்காட்சியகமான "ஹால்மார்க் ஹிஸ்டாரிகல் கலக்ஷனில்' கோலின் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் இரண்டு இடம் பெற்றுள்ளன.
நட்சத்திரம்!
Advertisement
எல்லா கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் கிறிஸ்துமஸ் நாளின்போது பல்புகளால் ஆன நட்சத்திரங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இதற்குக் காரணம் இயேசு பிறந்த அன்று விசேஷமாக ஒரு நட்சத்திரம் தோன்றியது. இது இயேசுவின் பிறப்பை முன்னறிவித்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதன் நினைவாக இந்த நட்சத்திரங்களைத் தொங்க விடுகிறார்கள்.
முதல் கிறிஸ்துமஸ் மரம்!
இயேசு பிறந்தபோது உலகில் உள்ள மரங்களிலெல்லாம் மலர்கள் பூத்துக் குலுங்கியதாம்! இதை நினைவு கூறும் பொருட்டே மரங்களை வைக்கிறார்கள். ஆரம்பத்தில் "பெர்ட்ரீ' என்னும் ஒருவகை தேவதாரு மரத்தைத்தான் பல நூற்றாண்டுகளாக ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் பயன்படுத்தின.
இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை 1841 - இல் அறிமுகப்படுத்தினார். இது வின்ட்சர் கோட்டையில் நடந்த கிறிஸ்துமஸ் குழந்தைகளின் விருந்தின்போது இளவரசரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதல் கிறிஸ்துமஸ் நாளில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படுகிறது.
மழலைகளின் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி!
மெக்சிகோ நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று ஒரு மண் பானை நிறைய இனிப்புகள் நிரப்புவார்கள். அந்தப் பானையைக் கட்டித் தொங்கவிடுவார்கள். குழந்தைகள் தடியால் அடித்துப் பானையை உடைக்க முயற்சி செய்வார்கள். பானை உடைந்ததும் இனிப்புகள் கொட்டும்!
பிரான்ஸ் நாட்டுக் குழந்தைகள் தங்கள் காலணிகளை வீட்டு வாசலில் கதவின் அருகே கிறிஸ்துமஸ் இரவு வைத்துவிட்டுப் படுத்துக்கொள்வார்கள். தேவ குமாரனைக் காண அந்த வழியாகப் போகும் மூன்று அரசர்கள் வீட்டு வாசலில் நின்று இந்தக் காலணிகளில் பரிசுப் பொருட்களை நிரப்பிவிட்டுப் போவார்கள் என்று நம்புகிறார்கள்.
ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் தாத்தா கிடையாது!..... பாட்டிதான்!..... இந்தப் பாட்டிதான் சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகளை அளிப்பார்! பாட்டியின் பெயர் "பாபுஸ்கா!'