முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!  33: இயற்கையைக் காக்கும் இனிய குடும்பம்!

புதுவை அருகே பூத்துறை எனும் ஊர்புன்னகை பூக்கும் மரங்ளின் சொர்க்கம்!

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:06 AM
பகிர்:

புதுவை அருகே பூத்துறை எனும் ஊர்
புன்னகை பூக்கும் மரங்ளின் சொர்க்கம்!
பொட்டல் வெளியில் புதிதாய்த் தோன்றிய 
ஆரண்ய வனம் .... அற்புதக் காட்சி!

நூறு ஏக்கர் செம்மண் பரப்பில் 
கோடிக்கணக்கில் மரம் செடி கொடிகள்!
தனி ஒரு மனிதர் களத்தில் இறங்கி
தாவரம் வாழ உலகம் படைத்தார்!

அவரது பெயரே சரவணனாகும்
ஆரோவில் நிர்வாகம் இப்பணி தந்தது!
அவரது திருமகள் நற்செல்வி என்பவள்
அப்பா வழியில் அவளும் நடந்தாள்!

கல்வி பயில்வது ஆரோவில் பள்ளியில் 
கடமை!.... இயற்கையைப் போற்றிக் காப்பது
பல்வகையான மரக்கன்று நட்டாள்
பரவின வேங்கை பூவரசு வேம்பு!

மகிழம்.... ஆலம்,... பனைமரம்...அரசு
மகிழ்ந்தாள் கன்று வளர்வதைக் கண்டு!
மறவாதிருந்து தண்ணீர் ஊற்றி
மரமாய் ஆவதைப் பார்த்தாள் நெகிழ்ந்து!

கல்வியை மரங்களைக் கண்ணாய்க் காத்தாள்
கலைகளில் ஓவியம், நடனம் கற்றாள்!
உடலைக் காக்க யோகா பயிற்சி!
ஓடுதல்,.... தாண்டுதல் ஆர்வம் கொண்டாள்!

வனத்துக்கு வருவார் பள்ளிப் பிள்ளைகள்
வரவேற்று இயற்கை உயர்வைச் சொல்வாள்!
வனத்தில் வாழும்  விலங்குள் பறவைகள் - மாந்தர்
வாழ்வில் ஏற்கும் பங்கை விளக்குவாள்!

சரவணன்,... வத்சலா,... நற்செல்வி,.... பாட்டி
சலிப்பே இன்றிக் காட்டில் வாழ்கிறார்!
அமைதியும் மகிழ்வும் நிரம்பிய சூழல்!
அங்கே நிறைந்தது ஆண்டு இருபத்தைந்து!

இயற்கையைக் காக்கும் இனிய இக்குடும்பம் 
எல்லா நலமும் பெற்றிட வேண்டும்!
இளையோர்க் கெல்லாம் நல்வழி காட்டும் - பணியை 
இனிய நற்செல்வியும் தொடர்ந்திட வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.