பாராட்டுப் பாமாலை! - 34: வாழ்த்திடுவோம் வாரீர்!
அடித்த கஜா புயல் விளைத்த அழிவுகளில் சிக்கிதுடித்த மக்கள் துயர் துடைக்கும்
அடித்த கஜா புயல் விளைத்த
அழிவுகளில் சிக்கி
துடித்த மக்கள் துயர் துடைக்கும்
துய பணிகட்கு
முடிந்த வரை பொருள் கொடுக்க
முனைந்தவர்கள் பலபேர்!
வடிந்த கண்ணீர் துடைப்பதற்கு
வந்த அவர்களிலே
இரவிச்சந்திரன் என்னுமொரு
மாற்றுத் திறனாளர்
தர முனைந்த கொடை நமக்கு
சற்றே வியப்பளிக்கும்!
கணக்கற்றோர் நன்கொயையாய்க்
காசு பணம் தந்தார்!
உணவுப் பொருள் புத்தாடை
உதவியவர் பலபேர்!
இரவிச்சந்திரன் தான் வளர்த்த
இரு ஆடுகளையே
தரவந்தார் மாவட்டத்
தலைவரிடம் ஒருநாள்
கடலூர் மாவட்டத்தில்
கவின் வளங்கள் நிறைந்து
கிடக்கும் குறிஞ்சிப்பாடி மாவட்டம்
பெரிய குமட்டி என்னும்
பெயருடைய சிற்றூரில்
பிழைப்பதற்கு சிறிய
முயற்சியுடன் ஜெராக்ஸ் கடை
மூலம் பொருளீட்டி
வாழ்ந்து வந்த இரவிச்சந்திரன்
வசதி மிகுந்தா ரல்லர்!....
சூழ்ந்த பிறர் துயர் துடைக்கும்
தூய மனம் உடையார்
தென்னை வாழை நெல் கரும்பைச்
சீரழித்த புயலால்
பன்னூறு கால்நடைகள்
பாழாகிப் போன
பெருந்துயரைத் துடைப்பதற்குப்
பேரன்பினோடு
தருகின்றேன் ஆடிரண்டை
தக்கார்க்கு அவற்றைத்
தாருங்கள் எனச் சொல்லி
தந்தார் இரண்டாட்டை!
வாருங்கள் நாமவரை
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம்!