சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: கொன்றை மரம்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? 

பா.இராதாகிருஷ்ணன்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? 

நான் தான்  கொன்றை மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர்  கஸ்ஸியா ஃபிஸூலா என்பதாகும். நான் பேபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  என்னை தாமம், நீள்சடையோன், கொன்னை,  சரக்கொன்றை, பிரணவ என்றும் அழைப்பார்கள். சங்கக் காலத்தில் காடும் காடு சார்ந்த பகுதியுமான முல்லை நிலத்திற்குரிய மரமாக நான் இருந்தேன். நான் தங்க மழை பொழிவதை போல தோற்றத்தைக் கொண்டுள்ளேன்.  கொன்றை மலர் சூடியவன் சிவன். "மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே' என சுந்தரமூர்த்தி நாயனார் சிவனை பெருமையாகப் பாடுகிறார். 

நான் ஏப்ரல், மே மாதங்களில் பூ பூக்கத் தொடங்குவேன்.  அதற்கு முன்னதாக இலைகளை உதிர்க்கவும் ஆரம்பிப்பேன்.  நான் இலையில்லாமல் பொன் மஞ்சள் பூக்களால் நிறைந்து சரம் சரமாக தொங்கி உங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து படைப்பேன். அவ்வளவு அழகாக இருப்பேன். "கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்' எனது பெருமையை கவிஞர் வைரமுத்து ஐயாவும் திரைப்பட பாடலில்  பாராட்டியிருக்கிறார்.  

கேரள மாநிலத்தின் மலர் நான். நம் தமிழ்நாட்டின் மலர் செங்காந்தள். கேரள மக்கள் விஷு பண்டிகையின் போது என்னை வைத்து தான் பூஜை செய்வார்கள்.  தாய்லாந்து நாட்டின் மலரும் நான் தான்.  எனது பூ, இலை, காய் மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக் குணம் உள்ளது. 

பூவையும், இளங்கொழுந்தையும் துவையல் செய்து  சாப்பிட்டால் சர்க்கரை வியாதி மட்டுமல்ல வயிற்றுக் கோளாறு, மேகக் கோளாறு போன்றவைகளும் சரியாகும்.  எனது பூவை அரைத்து காய்ச்சியப் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம் பெறும், நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது நோய்கள் குணமாகும், ஆவியில் வேக வைத்து, பின் சாறை பிழிந்து அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து குடித்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறிவிடும், கஷயாமாக்கிக் குடித்து வந்தால்  நீரிழிவு நோய் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.  

எனது இலையை பசையாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி படர்தாமரை உள்ள இடத்தில் பூசினால் அது ஓடி விடும்.      என் காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை நாம் சமையலில் சேர்க்கும் புளியைப் போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். எனது பட்டை சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனது வேர்ப்பட்டை கஷாயம் இதய நோய், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும்.  என் கனியை குரங்கு, நரி, கரடி விரும்பி உண்ணும். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரின் புராணப் பெயர் கொன்றை வனம். கன்னியாகுமரி மாவட்டம்,  சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம், அருள்மிகு ஆட்சீஸ்வரர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், பந்தநல்லூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆகிய திருக்கோவில்கள் தலவிருட்சமாக இருக்கிறேன். 

நான் தமிழ் ஆண்டு விக்ருதியை சேர்ந்தவன். மரங்களைப் பேணுவோம், மா நிலம் போற்ற வாழ்வோம்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.    

(வளருவேன்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

ஆந்திரத்தில் ‘மோந்தா’ புயல்! முதல்வா் சந்திரபாபுவுடன் பிரதமா் ஆலோசனை!

இன்று கரையைக் கடக்கிறது ‘மோந்தா’ புயல்! 9 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி

SCROLL FOR NEXT