முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்:  பொரி உருண்டை!

ந்த மரத்தடியில் காரை நிப்பாட்டறேன்.. இட்லி சாப்பிடலாம்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:37 AM
பகிர்:

காட்சி - 1,
இடம் - நெடுஞ்சாலை,
மாந்தர் - தொழில் அதிபர் மாதவன், அவர் மனைவி ஸ்ரீதேவி, மகன் ராம், இட்லி கடை பாட்டி கமலம்மாள் அவர் கணவர் துரைராஜ்
(மாதவனும் அவர் குடும்பத்தினரும் காரில் செல்கிறார்கள்.)

மாதவன் - அந்த மரத்தடியில் காரை நிப்பாட்டறேன்.. இட்லி சாப்பிடலாம்.
ஸ்ரீதேவி - சரிங்க... (காரில் பின் பக்கம் தேடுகிறாள்.. காலடியில் குனிந்து தேடுகிறாள்) என்னங்க, இட்லி கூடையை எடுத்து வைக்க மறந்திட்டேன்.. டிபன் கேரியரில் எல்லோருக்கும் இட்லி, பூண்டு மிளகாய்ப் பொடி நல்லெண்ணெயில் குழைச்சு ஒரு டப்பா, ஊசிப் போகாமல் இருக்க
வதக்கிய தக்காளி சட்னி எல்லாம் அதில் இருக்கே!
மாதவன் - என்னது?...... வீட்டிலேயே வெச்சுட்டியா!..... சரி கோயிலுக்குப் போயிட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது சாப்பிட்டுக்கலாமே...... வீணாகாது இல்லியா
ஸ்ரீதேவி - கெட்டுப் போகாது. ஆனா இப்போ பசிக்கு உதவலியே!....
(அப்போது அங்கு செல்லும் ஒரு வழிப்போக்கரிடம்)
மாதவன் - ஏம்ப்பா தம்பி, இந்தக் கிராமத்தில் இட்லி எங்கேயாவது கிடைக்குமா?
வழிப்போக்கன் - என்னா இப்படி கேட்டுட்டீங்க,.....எங்க நெய்விளக்கு கிராமத்து கமலம் பாட்டி இட்லி கடை இருக்கே. நேரா போனீங்கன்னா, ஒரு கிலோமீட்டரில் இருக்கு!... போய் சாப்பிட்டுப் பாருங்க.. இந்த வட்டாரம் பூரா பிரபலம் ஆச்சே.
மாதவன் - ரொம்ப நன்றிங்க!....(குடும்பத்தினரைப் பார்த்து) வாங்க நடந்தே போகலாம்....
(காரை எலெக்ட்ரானிக் சாவியால் அழுத்த பீப் பீப் என்ற ஒலியுடன் பூட்டிக் கொள்கிறது. வழிப் போக்கன் காட்டிய பாதையில் நடக்கிறார்கள்-)

காட்சி - 2,
இடம் - கமலம்மாள் இட்லி கடை,
மாந்தர் - மாதவன், ஸ்ரீதேவி, ராம், கமலம்மாள் பாட்டி, அவர் கணவர் துரைராஜ்

(இட்லி கடை எளிமையாக ஒரு கீற்றுக் கொட்டகையில் விளம்பர போர்டு இல்லாமல் இருக்கிறது. மரப் பலகை பெஞ்சு, சிறு மேசைகள் பலர் அங்கே சாப்பிடுகிறார்கள். மாதவன் குடும்பத்தினர் ஒரு பெஞ்சில் அமர சூடாக ஆவி பறக்க தட்டில் இட்லியை எடுத்து வந்து பாட்டியின் கணவர் துரைராஜ் வாழை இலைகளில் வைக்கிறார்).

மாதவன் - இட்லி சுவையா இருக்கே!.... பெரிசாவும் இருக்கு!...
ஸ்ரீதேவி - பஞ்சு பஞ்சா இருக்கு!.... தேங்காய் சட்னி, சாம்பார் சிவப்பு மிளகாய் பூண்டு துவையல், மிளகாய்ப் பொடி நல்லெண்ணெய் ரொம்ப சுவையா இருக்குங்க!....
ராம் - அம்மா நான் நாலு சாப்பிட்டேன்!
மாதவன் - ( துரைராஜிடம் ) சார் நாங்க மொத்தம் இருபது இட்லி சாப்பிட்டோம். இந்தாங்க...
(ஐநூறு ரூபாய் தாளை நீட்டுகிறார்)
துரைராஜ் - இருபது ரூபா இல்லீங்களா.. இருந்தா கொடுங்க
மாதவன் - ஒரு இட்லி இருபது ரூபாயா..... அப்போ நானூறு எடுத்துக்குங்க...
துரைராஜ் - இல்லீங்க,... நீங்க சாப்பிட்ட இருபது இட்லிக்கும் விலை மொத்தம் இருபது ரூபா தான்!.... ஒரு இட்லி ஒரு ரூபா
மாதவன் - ( மயங்கி விழாத குறையாக ) இந்தாங்க இருபது ரூபா....
(கல்லா பெட்டி அருகில் செய்தித் தாளால் செய்யப்பட்ட பெரிய பொட்டலங்களை பார்க்கிறார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி - (துரைராஜிடம்) - இது என்ன பொட்டலங்கள் ?

வெளியே வரும் கமலம்மாள் - பொரி உருண்டை வாங்கிப் போங்கம்மா வீட்டுக்கு. வெல்லம் போட்டு செஞ்சது.. குழந்தைகளுக்கு கண்ட தின்பண்டங்கள் வாங்கித் தர்றதுக்கு இதைக் கொடுங்க..ரொம்ப நல்லது. ஒருபொட்டலத்தில் பத்து பொரி உருண்டை இருக்கும். ரூபாக்கு இரண்டு..... பொட்டலம் ஒண்ணு அஞ்சு ரூபா.
ஸ்ரீதேவி - சரி நாலு பொட்டலங்கள் தாங்க...
(இருபது ரூபாய் தருகிறார்.)

ஸ்ரீதேவி - உங்க ஹோட்டலில் வயிறாரச் சாப்பிட்டோம்!.... வர்றோம் சார்.. வர்றோம் பாட்டி அம்மா!....

துரை ராஜ், கமலம்மாள் இருவரும் - இந்தப் பக்கம் வந்தா மறந்திடாமல் வாங்க...

காட்சி 3,
மாந்தர் - மாதவன் குடும்பத்தினர், வழிப்போக்கன் முருகன்
(மாதவன் குடும்பம் காருக்குத் திரும்ப,... வழிகாட்டிய நபர் அங்கே வர...)

வழிப்போக்கர் - என்ன சார் சாப்பிட்டீங்களா.. நல்லா இருந்திச்சா உங்க ஊரில் இதே இட்லி சாப்பிட்டா இருநூறு முன்னூறு ரூபா பில்ஆகியிருக்கும்!..... இங்கே ரொம்ப குறைச்ச விலைக்கு விக்கிறாங்க கமலம்மாளும் துரை சாரும்!....
மாதவன் - நீங்க சொன்னது ரொம்ப சரி. ஐயா உங்க பெயர் என்ன?
வழிப்போக்கன் - என் பெயர் முருகன். விவசாயிங்க. எங்க கிராமத்தில் எல்லோருமே கமலாம்மாள் கடையில் தான் இட்லி சாப்பிடுவோம். ஒரு நாளைக்கு எப்படியும் ஆயிரம் இட்லி வியாபாரம் நடக்கும்.
மாதவன் - இந்த வயதான காலத்தில் ரொம்ப சிரமமா இருக்குமே.. அதுவும் மிகக் குறைந்த விலையில் தர்றாங்க.
முருகன் - ஐயா.. காலையில் வேலைக்குப் போகும் நாங்க சாப்பிட்டுவிட்டு மதியத்துக்கும் கட்டி எடுத்துக்குவோம், மாலை விவசாய வேலை முடிஞ்சு வர்ற நாங்க காய்கறிகள் வாங்கி வந்து பாட்டியிடம் தருவோம். எங்க வீட்டுப் பெண்கள் அரிசி உளுந்து கழுவ, மாவறைக்க, பாத்திரம் கழுவ, தண்ணீர் கிணற்றில் இருந்து இறைக்க முறை வைத்துக் கொண்டு உதவி செய்வாங்க.
மாதவன் - ரொம்ப வியப்பா இருக்கு! ஒற்றுமையா இருக்கறதுலே எத்தனை நன்மை இருக்கு!..... உங்க எல்லோரையுமே பாராட்டணும்!....அவங்களுக்கு ஏதாவது பண உதவி செய்யலாமா நான் ?
முருகன் - ஐயா,.... அவங்க குடும்பமே தேச விடுதலைக்குப் போராடின குடும்பம்!.... துரைராஜ் தகப்பனார் நேதாஜியின் இந்திய தேசீய ராணுவப் படை வீரர்..... ரங்கூனில் இருந்தார்.... கமலத்தம்மாள் தகப்பனார் காந்திஜியின் சேவா கிராம் மற்றும் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்தவர்!.... இவங்களுக்கு நில புலம் கொஞ்சம் இருக்கு..... பிள்ளைகள் அயல் நாட்டில் வேலை பார்க்கிறாங்க!.....
மாதவன் - அப்படியா?..... அப்படீன்னா இதை ஒரு சேவையாத்தான் செய்யறாங்களா?....
முருகன் - ஆமாம்!..... இவங்க செய்யும் அன்ன தானத்துக்கு கடவுள் செல்வத்தை கோயில் உண்டியல் மாதிரி அள்ளித் தர்றார். இருவருக்குமே அரசாங்க சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் வருது. நிலத்தில் தேவையான நெல், உளுந்து, தென்னை, வாழை, மிளகாய், எள் பயிர் செய்யறாங்க. அவங்க நோக்கமே இந்தக் கிராமத்து மக்களுக்கு வயிறார சாப்பாடு போடணும்...... இயற்கையான பழமை மாறாத தின் பண்டங்களைத் தயார் பண்ணித் தரணும்ங்கிறது தான்!
மாதவன் - நாங்க கூட பொரி உருண்டை நாலு பொட்டலம் வாங்கினோம். விலை மிக மலிவா இருக்கிறதுதான் கொஞ்சம் சங்கடமா இருக்கு..... மனசுக்கு உறுத்தலா இருக்கு!..... வசதி இருந்தும் பொருளுக்கு ஏத்த விலையைத் தர முடியலையே!...
முருகன் - வசதி என்னங்க வசதி!.... மனுசங்க எல்லாரும் ஒண்ணுதான்!.... அதுமட்டுமா கடலைமிட்டாய், எள் உருண்டை, முறுக்கு அதிரசம் என நாட்டுப் பலகாரங்களும் அவ்வப்போது போடுவாங்க. செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தான் பயன் படுத்தறாங்க!
மாதவன் - தம்பி அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய ஆசைப் படறேன்....
முருகன் - ஐயா.. உங்களைப் பார்த்தா ரொம்ப பெரிய இடத்தைச் சேர்ந்தவரா தெரியுது. இப்படி ஒரு கணவன் மனைவி சமுதாயத் தொண்டு ஆற்றுவதை வெளி உலகுக்குக் கொண்டுவாங்க அது போதும்! இப்படி ஒரு உணவகம் நடத்தறதை அவங்க வெளி உலகுக்கு காட்ட விரும்பறது இல்லை! இது அவங்க கடைக்கு ஒரு விளம்பரமா நான் சொல்லவில்லை! இதை சமூக ஊடகங்களில் பரவ விட்டால் பார்ப்பவர்கள், வசதி படைத்தோரில் சிலநல்ல உள்ளங்கள் மனமுவந்து லாப நோக்கின்றி தொண்டு செய்ய முன் வருவார்கள்
மாதவன் - கண்டிப்பா செய்யறேன். வர்றேன் மிஸ்டர் முருகன்.....
( கோயிலுக்குச் சென்று விட்டு கார் நெடுஞ்சாலையில் வீட்டை நோக்கிச் செல்ல)
ஸ்ரீதேவி - இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்தாங்க....அந்த ஹோட்டல்லே பெரியவங்க தரிசனம்!... அதோடு சாமி தரிசனம்!....மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க....
மாதவன் - ஆமாம்.....எனக்கும் மனசு நிறைஞ்சுதான் இருக்கு!
ராம் - அப்பா என் கை பேசி மூலம் அந்த தாத்தா, பாட்டி, இட்லி சுடற இடம் எல்லாம் உங்களைக் கேட்காமல் படம் எடுத்திட்டேன்.
மாதவன் - நல்ல வேளை செஞ்சேப்பா!.... இது எனக்கு உதவும்!.... என் நண்பர் மின்னல் தொலைக் காட்சி சேனலில் நிருபரா இருக்கார் அவருக்கு வாட்ஸப் மூலம் அனுப்பறேன்!....

காட்சி - 4,
மாந்தர் - அறிவிப்பாளர்,
(மின்னல் தொலைக்காட்சி-“மண்ணில் ஒரு மணம்”- நிகழ்ச்சி ஒளிபரப்பு)

அறிவிப்பாளர் - இந்தக் காலத்தில் சுவையான இட்லி ஒரு ரூபாய். சட்னி சாம்பார் துவையல் பொடி நல்லெண்ணெயுடன்.......வாழை இலையில் பரிமாறுதல்.....பொரி உருண்டை ஐம்பது பைசா கடலை மிட்டாய் எள் உருண்டை என நாட்டு தின்பண்டங்கள் எல்லாம்..... எங்கே எனக் கேட்கிறீர்களா?..... இதோ நம் நகரில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையின் தெற்கே உள்ளே ஐந்து கிலோமீட்டரில் உள்ள நெய்விளக்கு கிராமத்தில் தான்
(தொடர்ந்து ஒளிக்காட்சிகள் திரையில்.. அதில் துரைராஜ் கமலம்மாள் தம்பதியரின் சேவைக் காட்சிகள்)
(நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு)
தொலை பேசியில் - ஹலோ மின்னல் தொலைக் காட்சிங்களா?
அறிவிப்பாளர் - ஆமாம் என்ன வேணும்?
குரல் - இப்போ ஒளி பரப்பாச்சே அந்த கமலம்மாள் பாட்டி துரைராஜ் உணவகத்துக்கு எப்படி போறது வழி சொல்ல முடியுமா ?
அறிவிப்பாளர் - எதுக்கு ?
தொலைபேசி குரல் - நாங்க எங்க வட்டச் சேவா சங்கம் மூலமா உதவி செய்யலாம்ன்னு இருக்கோம். ஒரு வேன் அல்லது கார் வாங்கித் தர்றோம். நவீன பர்னிச்சர், பெரிய கேஸ் அடுப்பு வாங்கித் தர்றோம்.
மின்னல் தொலைக் காட்சி நிருபர் - அவங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அதுவே நாம பெரிய உதவி செஞ்ச மாதிரி தான். நம்முடைய தலையீட்டால் கிராமம் அதன் பொலிவை, ஒரு குடும்பம் போல உள்ள கூட்டு உழைப்பை இழக்கக் கூடாது. வேண்டுமானால் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற ஒரு உணவகத்தைத் திறக்க முயற்சி செய்யுங்க..... உங்க விசாரிப்புக்கு நன்றி.

(திரை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.