முத்துக் கதை!
தேன்சிட்டு ஒன்று பூவரச மரக்கிளையில் வந்து அமர்ந்தது. சற்றே படபடப்புடன் காணப்பட்டது. அருகிலிருந்த செல்போன் கோபுரத்தைக் கடந்து வரும்போது அதன் மீது எதோ ஒரு சக்தி இழுப்பதைப் போன்று உணர்ந்தது. எனவே, மேற்கொண்டு பறக்க இயலாமல் அருகிலிருந்த அந்த மரத்தில் வந்து அமர்ந்தது.
அங்கே கூடு அமைப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே அணில் வந்தது. பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டபின், "என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என கேட்டது.
"இந்த மரத்தில் கூடு கட்டுவது பற்றிதான்'' என்றது தேன்சிட்டு.
அதற்கு அணில், "ஐயோ இங்கே வேண்டாம்!'' என்றது. ஏன் என தேன்சிட்டு கேட்டதற்கு, "இந்த மரத்தில் யாரும் கூடு கட்டமாட்டாங்க, இந்த மரத்தில் மரப்பல்லி ஒண்ணு இருக்கு. ரொம்ப பெரியது என்னோட அளவு இருக்கும்!'' என்றது. "அதனால் என்ன?'' எனக் கேட்டது தேன்சிட்டு.
"அந்தப் பல்லி மரத்தோட நிறத்திலேயே இருக்கும். எப்போது எங்கிருக்கும்னு தெரியாது. எந்தப் பறவையும் வந்து கூடுகட்டுவதற்கு பயந்துட்டு போயிடும்!'' என்றது அணில்.
"அப்படி அந்த பல்லி என்ன செய்யும்?'' எனக் கேட்டது தேன்சிட்டு.
"தெரியல.... நான் எதுவும் பார்க்கல, எங்க கூட இருக்கறவங்க பேசிக்குவாங்க, அப்புறம் அந்த பல்லி பார்க்கவே பயங்கரமா இருக்கும்!'' என்றது அணில்.
"சரி பரவாயில்லை!.... என்னால் இன்னும் நிறைய நேரம் பறக்க முடியாது, அந்த செல்போன் கோபுரத்துகிட்ட போனதுக்கு எதோ ஒரு சக்தி என்னை பலமாக இழுத்தது!.... அதிலிருந்து தப்பித்து வந்துட்டேன்!....நான் இப்போ தங்க ஒரு கூடு கட்டணும்!....அந்தப் பல்லி வந்தால் வரட்டும்... இந்த மரத்திலேயே கூடுகட்ட அதுகிட்டயே அனுமதி கேட்டுவிடுகிறேன்!.... அதையும் மீறி எதாவது தாக்குவதற்கு வந்தால் சடாரென பறந்துபோனால் போகிறது!'' என்றது.
"ஐயோ!.... எனக்கு பயமாக இருக்கு!.... நான் கிளம்பறேன்!....'' என்று சொல்லி கிளைகளுக்கிடையே தாவிச் சென்றது அணில். அப்போது மரப்பல்லி வரவும் சரியாக இருந்தது. உண்மையில் அணில் சொன்னமாதிரி பார்க்க பயமாத்தான் இருக்கு என மனதிற்குள் நினைத்துக் கொண்டது தேன்சிட்டு. ஆனாலும் மிக தைரியமாக தனது நிலையைச் சொல்லி, மேற்கொண்டு பறக்க இயலாத நிலையும் சொல்லி அந்த மரத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டது. அந்த மரப்பல்லிக்கு ஆச்சரியம்!
"என்ன இது?.... அணில் உட்பட எந்த பறவைகளும் உட்காரவும், கூடுகட்டவும் பயப்படுகிற இந்த மரத்தில இவ்வளவு தைரியமா கேட்குதே இந்த சின்ன குருவி!...' என நினைத்துக் கொண்டு, அதன் தைரியத்தையும், அதன் தேவையையும் உணர்ந்து அந்த தேன்சிட்டு தங்குவதற்கு அனுமதி அளித்தது.
"இன்னும் ஓரிரு வாரங்களில் பலத்த காற்று வரும் அதற்குள் நீ நல்ல இடம் பார்த்துக் கொள்!'' என ஆலோசனையும் வழங்கியது அந்த மரப்பல்லி.
துணிவும், தைரியமும் இருந்தால் எந்த இடத்திலும் நம்மால் வாழ்ந்துவிட முடியும் என்பதற்கு இந்த தேன்சிட்டுகூட உதாரணம்தானே. அணில் கூறியதைப் போன்று யாரோ சொன்னார்கள் அவர் இப்படி இவர் அப்படி என்றும், ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதும், தீர விசாரிக்காமல் சொல்வதும் எந்த விதத்திலும் நன்மை தராது. மேலும் தோற்றத்திலும் நிறத்தையும் வைத்து ஒருவரின் குணநலன்களை முடிவுசெய்துவிட முடியாது எனவும் இந்த தேன்சிட்டுவிற்கு நடந்த சம்பவத்தை வைத்து உணர முடிகிறது.
- ஜனனி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.