குழந்தைகளே நலமா,
நான் தான் கறிவேப்பிலை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் முறயா கொயிங்கீ என்பதாகும். நான் ரட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். கறியில் போடும் இலை என்பதாலும், என் இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் எனக்கு கறிவேப்பிலை என்ற பெயர் வந்தது. பச்சையாக இருக்கும் போதே நான் நல்ல வாசனையுடன் இருப்பேன். எனக்குன்னு தனி மணமும், சிறப்பான சுவையும், நல்ல குணமும் இருக்கு. இந்தச் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்.
நான் புதர்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தவன். கறிவேம்பு இலை என்பது தான் மருவி பின்னர் கறிவேப்பிலை என்றானது. என் தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளரும். என் பூக்கள் வெண்மை நிறத்திலும், பழங்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை உணவுக்கும், காட்டு கருவேப்பிலை மருந்தாகவும் பயன்படுது.
எங்கிட்ட, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பி2, சுண்ணாம்பு (கால்சியம்), இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், புரதம், தாது உப்புகள், அமினோ அமிலங்கள், கிலைகோûஸட்ஸ், செரின், அஸ்பார்டிக் அமிலம், அலனைன், புரோலைன் போன்ற எண்ணற்ற சத்துகள் இருக்கு. உங்கள் முன்னோர்கள் என் மருத்துவக் குணங்களை அறிந்து தான் என் இலைகளை உணவில் சேர்த்து வந்திருக்காங்க என்பதை மறந்தீடாதீங்க.
உங்க அம்மா சமைக்கும் போது நீங்கள் ஒரு வாசனையை நுகர்ந்து சந்தோஷப்படுவீர்களா, அந்த வாசனையை தருபவன் நான் தான். நீங்கள் உண்ணும் உணவில் கட்டாயம் நான் இடம் பெற்றிருப்பேன். குழந்தைகளே, நீங்கள் சாப்பிடும் போது நிறைய முறை நான் பார்த்திருக்கிறேன். அம்மா, குழம்பை ஊற்றியதும் என்னைத் தேடி, கண்டுபிடித்து தனியே போடுறீங்க. அப்போ நான் ரொம்ப வருத்தப்படுவேன். அவ்வாறு செய்யாதீங்க. ஏன்னா, உங்கள் செரிமான மண்டலத்தை சீராக்குவதே நான் தான். என்னிடம் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு, அதைக் கேளுங்க.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்ற சொலவடைகள் உங்களுக்குத் தெரியுமல்லவா? இவை எனக்கும் பொருந்தும். என் இலைகளை நீங்கள் உண்பதால் உங்களுக்கு இரத்த சோகை வராது. வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் அறவே இருக்காது. உங்களுக்கு குமட்டல், தலைச்சுற்றல் இருக்கா, என் இலையை சாப்பிடுங்க, சீரான இரத்த ஓட்டம் இருக்கும். உங்கள் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கண் பார்வையை மென்மேலும் உறுதியாக்கி, உங்கள் உடலில் சேரும் கெட்டகொழுப்பையும் நான் குறைத்து, முடியை கருமையாக்குவதுடன், வலுவாகவும் மாற்றுவேன். உங்களுக்கு நரைத்த முடி வளராது.
நீரிழிவு நோய்க்கு நான் நல்ல மருந்து. நீரிழிவு நோய் இருப்பவர்கள் காலையிலும், மாலையிலும் 10 கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் இரத்த அளவு கட்டுப்பட்டு இரத்த சோகை ஓடிடும். வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்னு சாப்பிட்டால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது குறைவதுடன், சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறையும். எங்கிட்ட போதுமான அளவு இரும்பு சத்தும், போலிக் அமில சத்துமிருக்கு, அதனால் நான் உங்கள் எலும்பை வலுவூட்டுவேன்.
என்னிடம் கார்பசோல் ஆல்கலாய்டுகள் நிறை இருக்கு. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் சக்தியை உங்களுக்குத் தருது. அதனால், உங்களுக்கு வயிற்றுப் போக்கு இருக்காது. ஏன்னா, பாக்டீரியாவிற்கான எதிர்ப்பு சக்தி எங்கிட்ட நிறையவே இருக்கு. என் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறை அல்லது இலைகளை பொடி செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு குணமாவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.
என் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் உங்கள் வயிற்றிலிருக்கும் அனைத்து விதமான தொந்தரவும் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். என் இலைகளில் உயிர்வெளியேற்ற எதிர்ப்பொருள் இருக்கு. குழந்தைகளே. அதாவது, எங்கிட்ட பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்பொருள்கள் போன்ற நிறைந்துள்ளன. எனவே, என் இலைகள் நோய்த் தொற்றுக்கான மிகப் பெரிய தீர்வாக இருக்கும். உங்களுக்கு பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்னைகளுக்கு நான் சிறந்த தீர்வு. முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றை குணப்படுத்துவதில் நான் முன்னணியில் இருக்கேன்.
மனிதர்கள் இல்லாமல் மரங்களால் வாழ முடியும். ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.