முகப்பு
சிறுவர்மணி

ஒரு தவளையும் அதனுடைய கிணறும்! 

ஒரு சின்னத் தவளை தனக்கு என்று ஒரு கிணறு வெட்டிக்கொள்ள விரும்பியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:


ஒரு சின்னத் தவளை தனக்கு என்று ஒரு கிணறு வெட்டிக்கொள்ள விரும்பியது. அவ்வாறே வெட்டி, ஒவ்வொரு கல்லாய் எடுத்து, வைத்து, மிகுந்த முயற்சியோடு கட்டி முடித்தது. கிணறு என்றால் தண்ணீர் இருக்க வேண்டுமல்லவா?..... தண்ணீர் இருக்கிறதா என்று உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டது. தனது கிணற்றில் தண்ணீர் குடிக்க யாராவது வருகின்றார்களா என்று ஆவலுடன் அங்கும், இங்கும் பார்த்தது. அப்போது அங்கே ஒரு ஆட்டுக்குட்டி வந்தது.

""தவளையாரே,.... எனக்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் கொடுப்பீர்களா?'' என்று கேட்டது.

உடனே தவளை தனது மரத்தாலான வாளியைக் கிணற்றுக்கு உள்ளே விட்டு வாளி நிறைய தண்ணீர் எடுத்து ஆட்டுக்குட்டிக்குக் கொடுத்தது.

""மிகவும் நன்றி!'' என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி போய்விட்டது.

"" அடுத்து ஒரு சிறிய குருவி அங்கே வந்தது. ""தவளையே, தாகமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருகிறாயா?....'' என்று கேட்டது.

உடனே தவளை தனது வாளியைக் கிணற்றுக்குள் விட்டு, தண்ணீர் எடுத்து அந்தக் குருவிக்குக் கொடுத்தது. அந்தக் குருவியும், ""நன்றி!'' என்று சொல்லிவிட்டுப் பறந்து போய்விட்டது.

அடுத்து அங்கே ஒரு பன்றிக்குட்டி வந்தது.

""ஏ! குட்டித் தவளையே!.... எனக்கு தாகமாக இருக்கிறது!.... கொஞ்சம் தண்ணீர் கொடு!' என்று அதிகாரமாகக் கேட்டது.

அந்தப் பன்றிக்குட்டி, ""ஏ, குட்டித் தவளையே!'' என்று அழைத்த வார்த்தையைக் கேட்டு தவளை சிறிது வருத்தம் அடைந்தது.

""என்னை யாரும் "குட்டித் தவளையே' என்று அழைப்பதை நான் விரும்பமாட்டேன்!'' என்று பதில் சொன்னது.

""நீ தண்ணீர் தரவில்லையென்றால், நான் உன்னை விழுங்கி விடுவேன்'' என்று பன்றிக்குட்டி பயமுறுத்தியது.

""அப்படியா!..... அதுதான் உன்னால் முடியாது!'' என்று சொல்லிக்கொண்டே குட்டித் தவளை மிகவும் புத்திசாலித்தனமாக வாளியுடன் கிணற்றுக்குள்ளே குதித்துவிட்டது. (அதற்கா தெரியாது? வாளியுடன் மறுபடியும் தரைக்கு வர..)

பாவம் அந்தப் பன்றிக்குட்டி!.....ச தவளையையும் பிடிக்க முடியவில்லை,...... தண்ணீரும் குடிக்க முடியவில்லை!...... வந்த வழியே தன் வீடு நோக்கிப் போய்விட்டது.

(நினா பாவ்லோவா எழுதிய ருஷ்ய நாட்டுக் குட்டிக் கதை.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.