சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: குழந்தைகளுக்கு அருமருந்து ஜாதிக்காய் மரம்

நான் தான் ஜாதிக்காய் மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் மைரிஸ்டிக்கா ஃபிராகாரன்ஸ் என்பதாகும்.

DIN

குழந்தைகளே நலமா?

நான் தான் ஜாதிக்காய் மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் மைரிஸ்டிக்கா ஃபிராகாரன்ஸ் என்பதாகும். நான் மைரிஸ்ட்டிகசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் இந்தோனேஷியா. இருந்தாலும் நான் நம் நாட்டிலும், இலங்கை, மலேசியா, கரீபியன் தீவுகளிலும் அதிகமா காணப்படறேன். நான் எப்போதும் பசுமையுடன் இருப்பேன். இந்தியாவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், கேரளாவில் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் போன்ற மாவட்டங்களிலும், நான் அதிகமா காணப்படறேன்.

குழந்தைகளுக்கு என் காயிலிருந்து பெறப்படும் மருத்துவப் பொருள்கள் அருமருந்து. ஜாதிக்காய் துவர்ப்பு மற்றும் காரச் சுவைகளைக் கொண்ட விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்று. குழந்தைகளே, எங்கிட்ட ஒரு தனி மகத்துவம் இருக்கு. அது என்னன்னு தெரியுமா, உங்களுக்கு என்னிடமிருந்து இரண்டு நறுமணப் பொருள்கள் கிடைக்கும். ஒன்று கொட்டை வடிவில் இருக்கும் ஜாதிக்காய், இன்னொன்று என் காயின் மேல் பகுதியைச் சுற்றிருக்கும் தோல் பகுதி. இதன் பெயர் ஜாதிப்பத்ரி, ஆங்கிலத்தில் "மேஸ்' என அழைப்பாங்க. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஜாதிக்காயில் இனிப்பு சுவையிருக்கும், ஜாதிப் பத்ரியில் காரத்தன்மை இருக்கும். அதனால் சில நாடுகளில் காரத்திற்காக ஜாதிப்பத்ரி பொடியை பயன்படுத்தறாங்க. ஜாதிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாயிருக்கு, இவை உங்கள் செல்களை சேதப்படுத்தும் "ஃப்ரீ ரேடிக்கல்களை' எதிர்த்துப் போராடி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இது முகச் சுருக்கங்களையும், வயதானத் தோற்றத்தையும் தடுக்கும் என்பதால் இந்திய தாய்மார்கள் காரம், இனிப்பு சுவைக்கு என் காயை பயன்படுத்தறாங்க. ஜப்பானில் இது தான் கறிப்பொடி. இந்தோனேஷியாவில் அனைத்து உணவு பண்டங்களிலும் என் காய் இடம்பெறும். ஐரோப்பியர்கள் சாஸ், ஜாம், சாலட் போன்ற பலவற்றுக்கும் என் காயை பயன்படுத்தறாங்க.

உங்களுக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்று வலிக்கு நல்லத் தீர்வு ஜாதிக்காய் தாங்க. உங்களுக்கு தூக்கமின்மை பிரச்னை இருக்கா? இனி அந்தக் கவலையை விடுங்க, ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை சூடான பாலில் கலந்து இரவில் அருந்தினால் நல்ல தூக்கம் வரும். என் காயிலிருக்கும் "மிரிஸ்டிசின்' எனும் வேதியல்பொருள், மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களான அல்சீமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற பல நோய்களைத் தீர்க்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடிச்சிருக்காங்க. என் காயிலிருந்து கிடைக்கும் "மேசின்' என்ற வேதிப்பொருளை பிணிகள் பல போக்கும் மருந்துகளிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் நீர்களிலும் பயன்படுத்தறாங்க. குழந்தைகளே, ஜாதிக்காய் பொடியை தினமும் உண்டு வந்தால் செரிமான பிரச்னையே உங்களுக்கு இருக்காது, உடம்பும் சுறுசுறுப்பாக இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு வயிறு உப்புசமா இருந்தா, ஜாதிக்காய் விதையை அரைத்து கொடுப்பாங்க. வயிற்றுப் போக்கை நிறுத்தும் குணமும் எனக்கு உண்டு. உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு இருக்கா, ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி தடவுங்க, வயிற்று போக்கு சட்டுன்னு நின்னுடும். என் காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் "ஒலியோரேசின்' எனும் கொழுப்பு, வெண்ணெய் போன்றவை, வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும், பாக்டீரிய மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுது. ஜாதிக்காயை அதிகம் உண்டால் மயக்கம் ஏற்படும் என்பதை மறந்துடாதீங்க.


மரங்கள் மழையை மட்டும் தரவில்லை, சிறந்த மருத்துவர்களாகவும் விளங்குகின்றன என்பது புரிகிறதா. நன்றி, குழந்தைகளே மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT