முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: தேனீக்களின் நண்பன் குமிழம் மரம்

நான் தான் குமிழம் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயல் மெலைனா அர்போரியா என்பதாகும். நான் வெர்பினேயே தாயரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

Updated On : 4 ஜூலை, 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

குழந்தைகளே நலமா?

நான் தான் குமிழம் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயல் மெலைனா அர்போரியா என்பதாகும். நான் வெர்பினேயே தாயரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய அறிவியல் அறிஞர் ஜோஹான் ஜார்ஜ் மெலைன் என்பவர் தான் என்னை தேடி கண்டு பிடித்தார். அதனால், அவர் நினைவாக இந்தப் பெயரை எனக்கு வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அவருக்கு என் நன்றி. நம் தொல்காப்பியர் சுட்டியுள்ள 31 மரங்களில் நானும் ஒருவன் என்பதை நினைக்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கு. அர்போரியா என்பது மரத்தைக் குறிக்கும்.

எனது தாயகம் பாரசீகம். வடமொழியில் என்னை சர்வோபத்ரம் என்று அழைப்பாங்க. நான் மியான்மர், தாய்லாந்து, லாவோ, கம்போடியா, வியட்நாம் மற்றும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் அதிகமாக காணப்படுகிறேன். நான் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையன். நான் மலைப் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுவேன்.

Advertisement

தொடர்ந்து நீர் தேங்கும் இடத்தில் நான் வளர மாட்டேன். நான் ஏராளமான இலைகளுடன் பார்க்க அழகா இருப்பேன். இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் நான் காணப்படுவேன். நம் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இயற்கையாகவே நான் வளர்ந்திருக்கிறேன். நான் ஒரு ஆணி வேர் தாவரம் என்பதால், எனக்கு பக்க வேர்கள் கிடையாது. என்னை திறந்த வெளிகளில் நீங்கள் வளர்த்தால், ஒரு சிறந்த காற்றுத் தடுப்பானாக நான் உங்களுக்கு இருப்பேன்.

என் இலைகள் கீழே விழுந்த மட்கி நிலத்தை வளப்படுத்தும். நான் உங்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளே, பட்டு புழுகளுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு நல்ல மருந்தாகவும் நான் இருக்கேன். என் முற்றிய கனிகள் வளைந்த மூக்குப் போன்ற தோற்றமுடையன.

என் மரத்தின் இலை, தழைகள், கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். குறிப்பாக, மான்கள் என் இலையையும், கனியையும் விரும்பி சாப்பிடுவாங்க. நான் தீப்பெட்டி, தீக்குச்சி, ஒட்டுப் பலகை மற்றும் மரக்கூழ் தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகிறேன். என் பலகைகள் லேசானவை, ஆனால் உறுதியானவை. என்னைக் கொண்டு நீங்கள் மேசை, நாற்காலிகள், ஜன்னல்கள், நிலைக்கதவுகள், பலகைகள், பிளைவுட்கள், கிரிக்கெட் மட்டை, கைவினைப் பொருட்கள், மரச்சாமான்கள், பென்சில் பெட்டிகள் செய்யலாம். "தோலக்' எனப்படும் இசைக் கருவியும் தயாரிக்கறாங்க. கை, கால் இழந்த மாற்றுத் திறனாளிகளக்கு செயற்கை கை, கால் தயாரிக்க நான் பெரிதும் உதவுகிறேன் என்பதை சொல்வதில் நான் பெருமைப்படறேன்.

எங்கிட்டேயும் நிறைய மருத்துவ பயன்பாடுகள் இருக்கு. என் இலைச்சாறு சிறுநீரக கோளாறு, இருமலுக்கு சிறந்த நிவாரணி. என் இலையை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால், உங்கள் தலைவலி பறந்து போய் விடும். என் பூக்கள் இரத்தம் தொடர்பான அனைத்து நோய்களுக்கு சிறந்த நிவாரணி. அதுமட்டுமல்ல குழந்தைகளே, என் பூவில் நிறைய தேன் இருப்பதால், என் மரத் தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து உபரி வருமானம் பெறலாம்.

என் மரவேர்கள் சிறந்த மருத்துவ குணம் உடையது. என் வேரின் கஷாயம் பசியை தூண்டவும், மலமிளக்கியாகவும், புத்தி பேதலித்தல் மற்றும் வலிப்பு நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுது. அது மட்டுமா, காய்ச்சல், அஜீரண கோளாறு ஆகியவற்றுக்கும் இது சிறந்த மருந்து.

மண்ணுக்கு மரம் பாரமல்ல, மழைக்கு அது ஆதாரம். குழந்தைகளே, அறம் செய்ய விரும்புங்க, அதோட மரம் நடவும் விரும்புங்க. மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.