முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: இயற்கை பிரசவம் - நஞ்சுள் மரம்

நான் தான் நஞ்சுள் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் சிட்ராக்ஸ் டைகோகாஸ் என்பதாகும். நான் ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.

Updated On : 5 செப்டம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:45 PM

குழந்தைகளே நலமா,

நான் தான் நஞ்சுள் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் சிட்ராக்ஸ் டைகோகாஸ் என்பதாகும். நான் ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை சிலோன் பாக்ஸ் வுட் என்று ஆங்கிலத்தில் அழைப்பாங்க. எனது தாயகம் இந்தியா. எனக்குத் தமிழில் "நல்ல மந்தரம்' என்ற பெயருமுண்டு. நான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிஸா, ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறேன். என்னை அழகு மரமுன்னும் சொல்வாங்க. நான் ஒரு ஆல்ரவுண்டர் குழந்தைகளே. என் பட்டைகள், வேர்கள் மருந்துப் பொருளாகி நோய்களைக் குணப்படுத்தும் திறன் வாய்ந்தவை. குறிப்பாக, மகப்பேறு அடைந்த பெண்களுக்கு என் பாகங்கள் அனைத்தும் அருமருந்தாகப் பயன்படுது.

என் பழங்களை நீங்கள் உண்ணலாம், ருசியாக இருக்கும். கால்நடைகள் என் தழைகளை விரும்பி சாப்பிடுவாங்க. தேனீக்கள் தேன் எடுக்க என் பூக்களை நாடி பாடிக்கிட்டே வருவாங்க. விவசாய கருவிகள், உங்கள் வீடுகளுக்குத் தேவையான தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யவும் நான் பயன்படறேன். நான் பழங்குடி மக்களிடம் மிகவும் பிரபலம். என் மரத்தின் பட்டையை மையாக அரைத்து குழைத்து எலும்பு முறிவின் மீது தடவினால் எலும்பு முறிவு குணமாகும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். என் இலைகள், பட்டைகளை சுடு நீரிலிட்டு காய்ச்சி, வடிக்கட்டி குடித்தால் உடல் காய்ச்சல், வாயுத் தொல்லை அறவே இருக்காது.

Advertisement

அது மட்டுமா குழந்தைகளே, தாய்மார்கள் எவ்வித சிரமுமின்றி சுகமாக பிரசவிக்க நான் உதவுகிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அக்கால பழங்குடி பெண்கள் சுகமாக பிரசவிக்க என் இலைச் சாற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருக்காங்க. அதுவும் நம் தமிழ்நாட்டில் கொல்லி மலைப்பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் இன்று கூட என் இலைகள், பட்டைகளை கஷாயமாக்கி, அதனுடன் வாழைப்பழத்தையும் கலந்து மருந்தாகக் குடிக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுகிறது. சிசேரியன் பிரசவத்திலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுதலை தரும் மரம் நானாவேன் என்று சொல்வதில் எனக்குப் பெருமையாயிருக்கு.

குழந்தைகளே உங்களுக்கு ஈர்க்கொல்லி என்றால் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் பெண்களுக்கு நீண்ட தலைமுடி இருக்கும். இப்பதான் நீங்களெல்லாம் ஷாம்புக்கு மாறிட்டீங்களே, அதனால் உங்களில் சிலருக்கு முடியுமில்லை, முடியே இல்லாத போது ஈறுகள், பேன்கள் எப்படி வசிக்கும். உங்கள் பாட்டிமார்களிடம் கேட்டுப் பாருங்கள். ஈர்க்கொல்லியின் பெருமையை. அந்த ஈர்க்கொல்லி என் மரத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் ஈர்க்குளி, பேன் சீப்புன்னும் சொல்வாங்க.

அக்கால மகளிர் தழைய, தழைய தங்கள் கூந்தல்களில் வாசம் நிறைந்த பூக்களைச் சூடி மகிழ்வார்கள். அதனால், அவர்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தது. குட்டி பேன்களுக்கு நமுடு என்று பெயர். முட்டை பேன்களை ஈறு என்று சொல்வாங்க. இவற்றை பெண்களின் தலைமுடியிலிருந்து பிரித்தெடுக்க என்னிடமிருந்து தயாரிக்கப்பட்ட மரச்சீப்பையும், ஈர்க்கொல்லியையும் பயன்படுத்தினாங்க. இதைக்கொண்டு தலைவாரினால் பேன்களும், ஈர்களும் வெளியே வந்துடும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லட்டுமா, என் மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த மரசீப்பு இப்போது கடைகளில் விற்கிறார்கள். நூறு சதவீதம் ஆர்கானிக். வாங்கும் போது என் பெயர் சொல்லி கேட்கு வாங்குங்க குழந்தைகளா.

உங்களுக்கும், எங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு. உங்கள் வெளிமூச்சு எங்களின் உள்மூச்சாகிறது. எங்களின் வெளிமூச்சு உங்களின் உள் மூச்சாகிறது என்பதை உணருங்கள். அதாவது, மனிதனும் பிற உயிரினங்களும் வெளியேற்றும் நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை நாங்க உறிஞ்சி, உங்களுக்கு ஆக்ஸிஜனைக் கொடுத்து உங்களைக் காப்பாத்தறோம். ஒரு மரம் ஆண்டொன்றுக்கு ஒரு டன் கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. மரங்களை நடுங்கள், வளம் பல பெறுங்கள். நன்றி குழந்தைகளே. மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.