கண்ணுக்குத் தெரியாத நூல்கள்!
ஜப்பான் நாட்டில் டெட்சாகன் என்று ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் புத்தரின் போதனைகள் அடங்கிய நூல்களில் பெருவாரியானவை சீன மொழியில் இருந்தன.
ஜப்பான் நாட்டில் டெட்சாகன் என்று ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் புத்தரின் போதனைகள் அடங்கிய நூல்களில் பெருவாரியானவை சீன மொழியில் இருந்தன. அந்த அரிய நூல்கள் ஜப்பானிய மொழியில் இல்லை. எப்படியாவது அந்த நூல்களைத் தொகுத்து ஜப்பானிய மொழியில் வெளியிட வேண்டும் என்பது டெட்சாகன் துறவியின் லட்சியமாக இருந்தது. ஆனால் அந்தப் பணிக்குப் போதுமான பணம் அவரிடம் இல்லை.
அதற்காக அந்தத் துறவி பலரிடம் நன்கொடை கேட்டார். கிடைத்ததை அன்புடன் ஏற்றுக்கொண்டார். சில ஆண்டுகள் கழிந்தன. நூல் வெளியிடப் போதுமான தொகை சேர்ந்துவிட்டது!
திடீரென்று பெய்த பெருமழையால் நாட்டில் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மக்கள் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாயினர். திரட்டிய பணத்தையெல்லாம் மக்களின் துன்பத்தைப் போக்கச் செலவழித்துவிட்டார் டெட்சாகன் துறவி!
மீண்டும் புத்தரின் மொழிபெயர்ப்புக்காக நிதி திரட்டத் தொடங்கினார் துறவி. சில ஆண்டுகளில் தேவையான தொகை சேர்ந்துவிட்டது!
ஆனால் மறுபடியும் ஜப்பான் நாட்டில் கொடிய தொற்றுநோய் தாக்கத் தொடங்கியது. துறவி, மறுபடியும் தான் சேர்த்து வைத்த தொகை முழுவதையும் மக்களின் நோயைத் தீர்க்க செலவழித்துவிட்டார்.
புத்தரின் சூத்திரங்களில் மனம் பறிகொடுத்த அவர் தன் லட்சியம் நிறைவேற மறுபடியும் நன்கொடை கேட்ட அலைந்தார். புத்தரின் அருளால் அவருக்கு வேண்டிய பணம் சேர்ந்துவிட்டது!
வெற்றிகரமாக அவர் புத்தரின் போதனைகள் அடங்கிய புத்தகங்களை ஜப்பானிய மொழியில் வெளியிட்டார்!
ஜப்பானிய மக்கள் அவற்றைப் படித்து ஆன்மிக எழுச்சியையும், நிம்மதியையும் அடைந்தனர்.
""துறவி டெட்சாகன் மூன்று முறை பெளத்த சூத்திரங்களை நூலாக வெளியிட்டார்! முதல் இரண்டு நூல்களும் கண்ணுக்குத் தெரியாதவை! மூன்றாவது நூலைவிட அவை மிகச் சிறந்தவை!'' என மகிழ்ச்சியுடன், பெருமையுடன் சொல்கிறார்கள்!