முகப்பு
சிறுவர்மணி

உழைப்பு! 

பணக்கார வீட்டுப் பையன் சத்தியன் ஒரு நாள் பக்கத்து ஊருக்குத் தனது ஆடி காரை தானே ஓட்டிக்கொண்டு சென்றான்.  நடு இரவில் வீடு திரும்பும்பொழுது காரின் டயர் ஒன்று பஞ்சர் ஆகிவிட்டது! சுற்றும் முற்றும் பார்த்தா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

பணக்கார வீட்டுப் பையன் சத்தியன் ஒரு நாள் பக்கத்து ஊருக்குத் தனது ஆடி காரை தானே ஓட்டிக்கொண்டு சென்றான்.  நடு இரவில் வீடு திரும்பும்பொழுது காரின் டயர் ஒன்று பஞ்சர் ஆகிவிட்டது! சுற்றும் முற்றும் பார்த்தான். சாலையோரம் ஒரு பஞ்சர் போடும் கடை இருந்தது. 

ஆனால் கடையில் ஒரு வயதானவர் மட்டுமே இருந்தார். சத்தியன் அவரிடம் சென்று, ""என் காரின் டயர் பஞ்சராகிவிட்டது.... சரி செய்ய முடியுமா?'' என்று கேட்டான்.
""தம்பி, நான் மட்டும்தான் இருக்கேன்.... எனக்கு வயதாகிவிட்டது.... உதவியாள் வெளியே சென்றிருக்கிறான். என்னால் தனியாகப் பழுது பார்க்க முடியாது.... '' என்றார்.
""நான் உதவி செய்யறேன்...'' 
""உன்னைப் பார்த்தால் பணக்கார வீட்டுப் பிள்ளை மாதிரித் தெரியுது!.... உன்னால் உதவி செய்ய முடியுமா?...  முதல்லே ஜாக்கி போட்டு டயரைக் கழட்டணும்!'' என்றார் முதியவர்.
""எனக்குப் பழக்கமில்லே.... இருந்தாலும் நீங்க சொல்லுங்க நான் செய்யறேன்...''
""அதனாலேதான்  நான் சந்தேகப்பட்டேன்...ஆனா இப்போ வேறே வழியில்லை.... நான்  சொல்றபடி செய்...''
""சரிங்க.... நீங்க சொல்லுங்க.... அதன்படி செய்யறேன்!''
முதியவர் சொல்லச் சொல்ல அதன்படி ஜாக்கியை உயர்த்தி பஞ்சர் ஆன டயரைக் கழற்றினான் சத்தியன். பழக்கமில்லாததால் அவனுக்கு வேர்த்துவிட்டது! ஆனால் மனதில் உற்சாகம் பெருக்கெடுத்தது! 
பழுது பார்க்கப்பட்டு சக்கரத்தைப் பொருத்தி ஜாக்கியை எடுத்தபிறகு முதியவரைப் பார்த்து, ""எவ்வளவு பணம் தரணுங்க?'' என்று கேட்டான் சத்தியன்.
""தம்பி, இது போன்ற வேலைக்கு நூறு வாங்குவேன்.... ஆனா நீ எனக்கு உதவி செய்திருக்கே!.... அதனாலே ஐம்பது ரூபாய் கொடு போதும்!'' என்றார் பெரியவர். 
உடனே சத்தியன் இருநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துப் பெரிவரிடம் கொடுத்தான்.
""சில்லறை இல்லையேப்பா!.... ஐம்பது ரூபாயா இல்லையா?''
""பரவாயில்லே அதை நீங்களே வெச்சுக்குங்க!''
""எதுக்குப்பா?''
""ஐயா நான் உங்களுக்குக் கொடுத்தது கூலி இல்லை.... எனக்கு உழைப்பின் மதிப்பையும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் நீங்க இன்னிக்கு உணர்த்திட்டீங்க.... அதுக்காக நான் தர்ற குரு காணிக்கையா இந்தப் பணத்தை மறுக்காம வாங்கிக்குங்க'' என்றான் சத்தியன்.
நெற்றியில் படர்ந்திருந்த வியர்வையை வழித்துவிட்டுக் காரின் கதவுகளைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கையை அசைத்து விடை பெறும் சத்தியனைப் பார்த்து பதிலுக்குக் கையை அசைத்தார் முதியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.