அன்று வெள்ளிக்கிழமை.
மாலை ஐந்து மணி இருக்கும். அழைப்பு மணி சத்தம் கேட்டு பங்கஜம் அம்மாள் கதவைத் திறந்தாள். பள்ளியிலிருந்து திரும்பி வந்த தன் மகளைப் பார்த்து வருத்தமுற்றாள்.
""என்னம்மா,.... உன் முகம் வாடி, வதங்கி வாட்டமாக இருக்கிறது!...யாராவது உன்னை அடித்தார்களா? அல்லது உன் வகுப்பு ஆசிரியர் உன்னைத் திட்டினாரா? '' என்று கேட்டாள் பங்கஜம் அம்மாள்.
அதற்கு அவரது செல்ல மகள் கெளசல்யா, ""அம்மா, எனக்குக் கணிதம் சரியாக வரவில்லை.... குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். இந்த வருடம் நான் கணிதப் பாடத்தில் வெற்றி பெற முடியாது என்று என் தோழிகள் என்னைப் பயமுறுத்தினர். '' என்றாள்.
அப்படிச் சொல்லாதே மகளே,.... கணித மேதை இராமானுஜத்திற்குக் கணிதம் ஆரம்பத்தில் வரவில்லை. பின் முயற்சி செய்தார். பயிற்சி எடுத்தார். அதன் பின் இன்று கணிதமேதை இராமானுஜம் என்று புகழ் பெற்றதை மறந்து விட்டாயா? அது மட்டுமல்ல... ஓர் உண்மைச் சம்பவம் உனக்குச் சொல்லட்டுமா?'' என்று கூறினாள் பங்கஜம் அம்மாள்.
""சொல்லுங்க அம்மா!'' என்றாள் கெளசல்யா.
""பிரான்ஸ் நாட்டில் எத்தனையோ அறிஞர்கள் தோன்றியுள்ளனர். எந்த நாட்டிலும் குழந்தைகளுக்கு என்று சிலர்தான் கதை எழுதுவார்கள். அதுபோல... பிரான்ஸ் நாட்டிலும் ஒரு குழந்தை எழுத்தாளர் தோன்றினார்.
குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதுவார். கட்டுரைகள் எழுதுவார். அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவர் அனுப்பிய புத்தகப் பார்சல் அவர் வீட்டுக்குத் திரும்ப வந்துவிடும்! இது போல பதினைந்து முறை அவர் அனுப்பிய கதைகளும் திரும்ப வந்து விட்டன!....சிலரிடம் சென்று வாய்ப்புகள் கேட்டார்.
கிடைக்கவில்லை.... வசவுகள் மட்டுமே கிடைத்தன.
நிறைவாக பதினாறாவது முறையும் கதைகளை அனுப்பி வைத்தார். பத்திரிகையாளரும், பதிப்பகத்தாரும் ஆன ஒருவர் அவர் அனுப்பிய பார்சலைத் திருப்பி அனுப்பினார்.
அத்துடன் ஒரு துண்டுக் கடிதம் எழுதியிருந்தார். துண்டுக் கடிதத்தில், "உங்கள் கதையைப் பதிப்பிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். இனிமேல் நீங்கள் பேனா பிடித்து எழுதுவதைவிட, வேறு வேலை பார்க்கலாம்!' என்று எழுதியிருந்தார்.
மிகவும் வருத்தமுற்றார் குழந்தை எழுத்தாளர். கோபம் வந்தது! சமையல் அறையில் அடுப்பில் எரிந்து கொண்டு இருந்த தீயில், எழுதி வைத்திருந்த கைப்பிரதியை எரிக்கப் போனார்.
அப்பொழுது அவர் மனைவி, ... ""என்னங்க.... எனக்காக இன்னும் ஒரே ஒரு முறை முயற்சி செய்ய முடியுமா?'' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
எழுத்தாளரும் மனைவிக்காக நிறைவாக ஒரு முறை முயற்சி செய்யலாமே என்று ஒரு பதிப்பாளருக்கு அவர் எழுதிய கைப்பிரதியை அனுப்பி வைத்தார்.
அதனைப் பெற்ற பதிப்பாசிரியர் ஒருவர், அதனை முறையாக வாங்கிப் படித்துப் பார்த்து சிறப்பாகப் பதிப்பித்தார். அவர் எழுதிய கதைகள் இன்று லட்சக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அந்த எழுத்தாளரின் பெயர், "ஜுல்ஸ்வேர்ன்!' அவர் எழுதிய நூலின் பெயர், "ஃபைவ் வீக்ஸ் இன் எ பலூன்!'
இன்றும் உலகின் மிகச் சிறந்த குழந்தை இலக்கியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது! '' என்றாள் பங்கஜம் அம்மாள்.
""அம்மா, என் தவறை உணர்ந்தேன்! முயற்சி செய்து, படித்து, கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன்!'' என்று உறுதி மொழி
கூறினாள் கெளசல்யா.
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்! முயற்சி திருவினையாக்கும்!
-என் . சி . ஞானப்பிரகாசம் எழுதிய "100 சிறுவர் கதைகள்' புத்தகத்திலிருந்து...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.