மரங்களின் வரங்கள்!: துஷ்ட தேவதைகளின் எதிரி புத்திர சீவி மரம்
நான்தான் புத்திர சீவி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "புத்ரன் ஜீவா ராக்ஸ் பர்கி' அல்லது டட்ரைபீடிஸ் ராக்ஸ் பர்கி'. நான் புத்ரன்ஜிவாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
குழந்தைகளே நலமா?
நான்தான் புத்திர சீவி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "புத்ரன் ஜீவா ராக்ஸ் பர்கி' அல்லது டட்ரைபீடிஸ் ராக்ஸ் பர்கி'. நான் புத்ரன்ஜிவாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். ஈரச்செழிப்புள்ள சதுப்பு நிலங்களிலும், ஆற்றோரங்கள், அதிக மழை பொழியும் இடங்களிலும் என்னை நீங்கள் காணலாம்.
நான் ஓங்கி உயர வளருவேன். நான் மிகவும் கடினமானவன். அதே சமயத்தில் உறுதியானவன். நான் ஒரு பசுமை மாறா மரம். ஆனால், என் இலைகள் ஒரேடியாக உதிராது. நீண்ட சிறு கிளைகளில் நேரற்ற தன்மையில் இலைகள் நீண்ட கோள வடிவிலிருக்கும். துளிர் இலைகளில் மெல்லிய ரோமங்கள் காணப்படும். முதிர்ந்த இலைகள் தடித்து, பளபளப்பாக, அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும்.
என் பூக்கள் இருபால் தன்மையுடையவை. அதாவது, ஆண் பூக்களும், பெண் பூக்களும் தனித்தனியானவை. ஆண் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், பெண் பூக்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இருவகை பூக்களும் மிகச் சிறியதாகக் காணப்படும். என் இலைகள் கால்நடைகளுக்கு நல்லத் தீவனமாகும். என் இலைகளை மாடுகளின் தொண்டை வீக்கத்திற்கு மருந்தாக கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
என் பழத்தில் அதிகளவில் "மன்னிட்டால்' உள்ளது. என் பழத்தை வெளவால்களும், சிறு பிராணிகளும் விரும்பி சாப்பிடுவாங்க. என் விதைகள் கடினமான தோளுடன் இருக்கும். அக்கால மக்கள் என் விதைகளை மாலையாகச் செய்து குழந்தைகளுக்கு அணிவிப்பார்கள். ஏனென்றால், குழந்தைகள் மீது கண் திருஷ்டி விழாது எனவும், அவர்களை துஷ்ட தேவதைகள் அணுகாது என்பதும் அவர்கள் நம்பிக்கை.
என் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். இந்த எண்ணெய் சிவப்பு மஞ்சள் நிறத்திலிருக்கும். அக்கால மக்கள் இந்த எண்ணெய்யை விளக்கெரிக்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் மிகவும் கடினமானவன் என்பதால் கடைசல் வேலைகளுக்குப் பெரிதும் பயன்படுவேன். கட்டடப் பொருள்கள், எளிதில் உடையாத உங்களுக்குப் பிடித்தமான பொம்மைகள், வேளாண் கருவிகள் செய்ய பெரிதும் பயன்படுவேன்.
என் இலையையும், விதையையும் கஷாயம் செய்து குடித்தால் குளிர் காய்ச்சல் வந்த இடம் தெரியாது. விதையை மட்டும் பொடித்து, வெல்லத்துடன் கலந்து காலை, மாலை இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாவதோடு, வயிற்று உப்புசம் நீங்கும், நா வறட்சி போயே போய்விடும். அதோடு உடலும் நல்ல பலம் பெற்று புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.
என்னை அதிக நீர்ச்செழிப்புள்ள பகுதிகளில் வளர்ந்து உங்களுக்குப் பலன்கள் பல கொடுப்பேன். என்னை சாலையோரத்திலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும் நட்டு வளர்த்தால் அழகுக்கு அழகூட்டுவேன். பெரிய கட்டட வளாகங்களிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் ஒரு வரிசையில் என்னை நட்டு வளர்த்தால், நான் அக்கட்டடத்திற்கு அரணாக இருப்பேன். அதோடு, வாகனங்களிருந்து வரும் இரைச்சலும், தூசுகளும் உங்களை அண்டாமல் பார்த்துக் கொண்டு, நிழலும் தருவேன்.
குழந்தைகளே! உலகின் சுவாசப்பை என காடுகள்தான் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், சுவாசித்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் வாயு மரங்கள் மூலமாக உங்களுக்குக் கிடைக்கிறது. காடுகள் அழிந்தால், மழை குறையும், காலம் தவறி பெருமழை பொழியும், வெப்பநிலை அதிகரிக்கும், பனிக்கட்டிகள் உருகி சிறிய தீவுகள், கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
"காட்டு வளமே நாட்டு வளம், காடழிந்தால் நாடழியும்' என்பது சான்றோர் வாக்கு. ஆனால், இயற்கையின் கொடையாகக் காணப்படும் காடுகள் இன்று மனிதர்களின் ஆக்கிரமிப்பால் தன் சுயஉருவை இழந்து காங்ரீட் வீடுகளாக மாறிவருகின்றன. நினைவிருக்கட்டும், காடுகளையும், நாடுகளையும் அழிவிலிருந்து காப்பது உங்கள் கடமை குழந்தைகளே.
மிக்க நன்றி குழந்தைகளே! மீண்டும் உங்களை ஒரு குட்டிக் கதையோடு சந்தித்து, உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
(வளருவேன்)