பாடங்கள் போதிக்கும் வள்ளியப்"பா'!
குழந்தைகள் விரும்புது பாட்டப்பா -அதைக் கேட்டு குதிக்குது பாரப்பா!அழகிய கவிதைக்கு வள்ளியப்பா! -அவர் ஆனந்தம் தகுகின்ற இல்லமப்பா!
குழந்தைகள் விரும்புது பாட்டப்பா -அதைக்
கேட்டு குதிக்குது பாரப்பா!
அழகிய கவிதைக்கு வள்ளியப்பா! -அவர்
ஆனந்தம் தகுகின்ற இல்லமப்பா!
குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா! தினம்
கொடுத்தார் கவிதையை அள்ளியப்பா!
அழகு அழகு கவிதையப்பா- அது
அரும்புகள் நெஞ்சைக் கவருமப்பா!
குழந்தையை நேசித்த உள்ளமப்பா -அவர்
கொடுத்த கவிதைகள் வெல்லமப்பா!
மழைபோல் குளுமை தருமப்பா! -அவர்
மாணவர் நேசிக்கும் குருவப்பா!
பிள்ளைகள் பாடுது ராகமப்பா -அவர்
பாட்டுக்கள் பள்ளியில் பாடமப்பா!
நல்லதைக் கூறிடும் பாடலப்பா! -இதை
நாளும் கற்றிட வேணுமப்பா!
பாடங்கள் போதிக்கும் கவிதையப்பா - அவர்
பாடல்கள் அறிவுரை கூறுமப்பா!
நாடே போற்றும் கவிஞரப்பா! - தமிழ்
நாட்டுக்குப் பெருமை அழ.வள்ளியப்பா!