நூல் புதிது
மாணவர்களுக்கான தேர்ந்தெடுத்த கதைகள் -சிவரஞ்சன்; யு.எம்.ஐ.புக் பேங்க், எண்.8, 6-ஆவது குறுக்கு, 8-ஆவது முதன்மைச் சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், சென்னை-109. தொடர்பு எண்: 9043050699.
மொத்தம் 50 கதைகள். மகனின் ஆய்வு ஆர்வத்தை அறிந்த தந்தை, அவனுக்கு ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்துக் கொடுத்து, அவன் ஆய்வுக்கு உதவுவதை 'தங்கம் விளையும் மலை' கதையும்; உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு எது என ஆசிரியைக் கேட்க, வகுப்பில் 'முட்டாள்' என எல்லோராலும் இகழப்படும் பல்லவி எழுந்து சரியான விடை சொல்லி, ஆசிரியரிடமிருந்து பேனாவைப் பரிசாகப் பெறுவதை 'பேனா பரிசு' கதையும் - என இதிலுள்ள கதைகள் வெற்றி, பிறருக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராம முன்னேற்றம், நட்பின் பெருமை, முயற்சியின் சிறப்பு முதலிய நன்னெறிகளை எடுத்துக் கூறுகின்றன. 'பருவத்தே பயிர் செய்'தால் எதிர்காலத்தில் மிகுந்த பயன் பெறலாம் என்ற மையக் கருத்தையே எல்லாக் கதைகளும் வலியுறுத்துகின்றன.
நீல தேவதை (கதைகள்) ரமணா; பக்.32; ரூ.30; -வானம் பதிப்பகம், எம்.22, 6-ஆவது அவென்யு, அலகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-600 089. +91 91765 49991.
இந்நூலிலுள்ள ஐந்து கதைகளையும் நீங்கள் ஐந்தே நிமிடத்தில் படித்து முடித்துவிடலாம் எனும் அளவுக்கு மைக்ரோ கதைகளை எழுதி அசத்தியுள்ளார் ரமணா. மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது ரமணாவின் கற்பனை வளம்தாம் இந்நூல். அதுமட்டுமல்ல, ஆறு வயதிலேயே ரமணா ஒரு நாவலையும் எழுதியிருக்கிறாராம். நூலின் தலைப்பைக் கொண்டுள்ள 'நீல தேவதை' என்ற கதை 15 வரிகள்தான். ஆனால், அதில் ரமணா சிலவற்றை எடுத்துரைக்கும் விதம்... அடடா... அற்புதம்! அப்பா பிங்குவுக்காகக் காத்திருந்து காந்திருந்து ஒரு பென்குயின் குடும்பம் அடையும் வருத்தம், நம்மையும் வருந்த வைக்கிறது.
காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை போர் நம்மை சிரிக்க வைக்கிறது. கியாரா என்ற குட்டிப் பெண் புலியும், அண்ணன் கயானும் கால்பந்து விளையாடப் போய் ராக்கெட்டில் ஏறிப் பறக்கும் அறிவியல் அதிசயமும் நடக்கிறது. இந்நூலுக்கு ஓவியர் டி.என்.ராஜன் வரைந்த ஓவியங்களை சிறார் மிகவும் ரசித்து மகிழ்வர். 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பதற்கு சிறுவன் ரமணன் ஓர் எடுத்துக்காட்டு.
பாப்பா பாப்பா கவிபாடு - வ.வெ.இராஜாமணி; பக்.80; ரூ.75; லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18; தொடர்பு எண்: 98412 36965.
குழந்தைகள் விரும்புவது போன்ற குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் கைதேர்ந்தவர் இந்த நூலாசிரியர். எந்தவொரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையாரை நினைக்கணும், அவர் தாளினையே வணங்கணும் என்று பிள்ளையாருக்கு முதல் வணக்கம் கூறி முதல் பாடலைத் தொடங்கியுள்ளார்.
அம்மாவின் அன்பு, பாசம், எல்லா மதங்களையும் சமமாகக் கருத வேண்டும், உழைப்பின் மேன்மை, சேமிப்பின் அவசியம், நட்பின் இலக்கணம், ஒற்றுமையின் அவசியம், உண்மையான பக்தி, பூனைக்குட்டி, பள்ளிக்கூடம், மழை, ஏப்ரல் ஃபூல், கொலு, சேவல், சைக்கிள், நடைவண்டி, வானவில் என மொத்தம் 32 பாடல்கள் உள்ளன. பாப்பாக்களுக்கு ஏற்றாற்போல எளிய தமிழ் நடையில் பாடல்கள் அமைந்துள்ளன.