ஞாயிறு கொண்டாட்டம்

பெண்களுக்கு அரசியல் ஈடுபாடு வேண்டும்!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு  உறுப்பினர். எல்லாவற்றுக்கும் மேல் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகக் களமிறங்கும் போ

ஜி.மீனாட்சி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு  உறுப்பினர். எல்லாவற்றுக்கும் மேல் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகக் களமிறங்கும் போராளி. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தூண்களாகத் திகழும் பாப்பா, இவரது தாய். உமாநாத், இவரது தந்தை. அதனால் இயல்பிலேயே

வாசுகியின் ரத்தத்தின் சிவப்பில்,  கம்யூனிஸ சிவப்புச் சித்தாந்தமும் ஊறிக் கிடக்கிறது. மாதர் சங்கச் செயல்பாடுகள், கட்சிப் பணிகள் என்று படு சுறுசுறுப்பாக இருக்கும் இந்தத் தோழியை கொண்டாட்டத்துக்காக சந்தித்தோம்.

உங்களது அரசியல் பிரவேசம் திட்டமிட்டு நடந்த ஒன்றா?

ஜனநாயக மாதர் சங்கத்தைத் துவக்கி முதல் பொதுச் செயலாளராக இருந்தவர், என் தாய் பாப்பா. கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் தந்தை உமாநாத். அப்போது நாங்கள் திருச்சியில் குடியிருந்தோம். எங்கள் வீடே ஓர் அரசியல் விவாதக் களமாகத்தான் விளங்கியது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் பல சமயங்களில் எங்கள் வீட்டில்தான் நடக்கும். ஈஎம்எஸ் நம்பூதிரி பாட் போன்ற பெருந்தலைவர்கள் பலர் வருவார்கள்.

இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்க்கவும், அவர்களின் பேச்சுக்களைக் கேட்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவை எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தின. தாயின் செயல்பாடுகள் என்னை மாதர் சங்கப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபடும் உத்வேகத்தைக் கொடுத்தன. படிக்கும் காலத்திலேயே மாதர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

1960-களில் டிபன்ஸ் ஆஃப் இந்தியா ரூல் சட்டப்படி கம்யூனிஸ்ட்டுகள் தேச விரோதிகளாக முத்திரை குத்தப்பட்டனர். அதில் என் அம்மாவும், அப்பாவும் கைதாயினர். அந்த நேரத்தில், என்னையும் என் இரண்டு சகோதரிகளையும் பாதுகாத்து காப்பாற்றியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களே. இப்போதும் என் சொந்தம், உறவுகள் என்றால், அது மாதர் சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும்தான்.

உங்களின் இத்தனை ஆண்டுகால மாதர் சங்கப் போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகக் கருதுவது எதை?

கீழ்வெண்மணி விவசாய கூலித் தொழிலாளர்கள் எரிக்கப்பட்ட சம்பவம் என்னைப் பெரிதும் வேதனைக்குள்ளாக்கியது. அதில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட மிராசுதாரரை விடுவித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேட்டு பெருத்த அதிர்ச்சியடைந்தேன். நீதித்துறையிலும் சாய்மானங்கள் இருக்கும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி அது.

திருச்சியில் 1970-களில் நடந்த சிம்கோ தொழிலாளர்கள் போராட்டமும் குறிப்பிடத்தக்க ஒன்று. 135 நாட்கள் நீடித்த அப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது நான் கல்லூரி மாணவி. மேற்கூறிய இரண்டு போராட்டங்களும் என் அரசியல் வாழ்வைப் பெரிதும் சீரமைத்தன.

உங்கள் படிப்பு, குடும்பம் பற்றி..?

அப்போது பெண்கள் அதிகம் படிக்கத் தயங்கும் காலம். அப்போது  பி.காம் படிப்பை சென்னையில் முடித்தேன். வங்கிப் பணியில் சேர்ந்தபோதுதான் என் கணவர் விஸ்வநாதனை முதன்முதலில் சந்தித்தேன். அவரும் தொழிற்சங்கத்தில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டு வந்தார். ஒத்த எண்ணங்கள் எங்கள் இருவரையும் வாழ்க்கையில் ஒன்றிணைத்தன. எங்களுக்கு ஒரே பெண் -அனுபமா. திருமணமாகிவிட்டது. சமீபத்தில்தான் பேரன் பிறந்தான்.

மாதர் சங்கப் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட விரும்பி, 2001-ல் வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். மாதாமாதம் சம்பளமாகக் கிடைத்துவந்த பெரிய தொகையையும் பொருட்படுத்தாமல், என் விருப்பத்துக்கு என் கணவரும், மாமியாரும் மதிப்பளித்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் உங்களால் மறக்க முடியாதது..?

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் அனைத்துமே எங்களால் மறக்க முடியாதவைதான். குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பத்மினி வழக்கு, திருச்சி சாமியார் பிரேமானந்தாவின் செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்து அம்பலப்படுத்திய வழக்கு ஆகிய இரண்டும் மாதர் சங்கத்தின் தீவிர செயல்பாட்டுக்குக் கிடைத்த வெற்றிகளாகும்.

பாதிக்கப்பட்ட பெண்களே களமிறங்கிப் போராடும்போதுதான் அது நிலைத்த போராட்டமாக இருக்கும்.

மேற்கூறிய சம்பவத்தில் பத்மினிக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து இன்று அவர் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். மாதர் சங்க நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். இந்த இரு வழக்குகளிலும் மாதர் சங்கத்தின் நடவடிக்கை மட்டுமல்லாமல், ஊடகங்களின் ஆதரவும் பெருமளவுக்கு இருந்ததால்தான் வெற்றி பெற முடிந்தது.

திரைப்படங்களில் இடம்பெறும் ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், எதிராக மாதர் சங்கம் சார்பில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறீர்கள்.

ஆனால் முன்பு போல இப்போதெல்லாம் போராட்டங்களில் ஈடுபடுவதில்லையே... ஏன்?

அதுபோன்ற போராட்டங்களில் ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்கிறேன். அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமும்கூட. அரசு பஸ்களில் ஆபாசப் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாவை போடக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து பல ஆண்டுகளுக்கு முன்பு மனுக் கொடுத்தோம். அதன் விளைவாக ஆபாசப் பாடல்களை ஒலிபரப்பத் தடை விதித்தனர். எஃப்எம் வந்த பிறகு அதுபோன்ற பாடல்களை தடை செய்ய முடியவில்லை. காரணம், பாடல்களுக்கு சென்ஸôர்ஷிப் கிடையாது. சினிமாவில் சென்ஸôர் செய்யப்பட்ட பாடல் வரிகளை, ஆடியோவில் சென்ஸôர் செய்ய முடியாது. காரணம், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் இப்போது வெளியிடப்படுகின்றன.

ஆடியோ பாடல்களையும் தணிக்கை செய்து வெளியிட சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த விஷயத்தில் படைப்பாளிகளின் படைப்புச் சுதந்திரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் உட்பட்டுத்தான் நம் தலையீடும் இருக்க வேண்டியுள்ளது.

உங்கள் பணி நிமித்தம் பல பகுதிகளுக்கும் சென்று வருகிறீர்கள். இன்றைய நிலையில் பெண்களின் குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் நிலை எப்படியுள்ளது?

பெண்களிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவொளி இயக்கம், சுயஉதவிக் குழுக்கள் போன்ற பல அமைப்புகள் வாயிலாக பெண்கள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவதால், சுயநலம் மறைந்து குழு மனப்பான்மை வளர்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், சமூகம் சார்ந்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

படித்த பெண்கள்கூட அரசியலுக்கு வரத் தயங்குகிறார்களே..?



அரசியல் என்பது நமது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையது. "அது ஒரு சாக்கடை' என்பது சாதாரண மக்களை அரசியலுக்கு வர விடாமல் தடுக்கும் சந்தர்ப்பவாத பிரசாரம் என்பதே என் கருத்து. நேர்மையான, நியாயமான, சமூக சேவை உணர்வுடைய பெண்கள் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும். இடதுசாரிகளின் அரசியல் மக்களுக்கான அரசியல் என்பதாலேயே நான் அரசியலுக்கு வந்தேன்.

உங்கள் தாய், தந்தை தவிர வேறு யாரை ரோல் மாடலாகக் கருதுகிறீர்கள்?

ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபகத் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான மறைந்த கே.பி.ஜானகியம்மாளின் தன்னலமற்ற சேவை என்னை மிகவும் கவர்ந்தது. எளிமைக்கு இலக்கணம் அவர். மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பி.சீனிவாசராவ், பி.எஸ்.தனுஷ்கோடி போன்ற விவசாயத் தொழிலாளர் தலைவர்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தவர்களே. அரசியலில் இதுபோன்ற தலைவர்களைக் காண்பது அரிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT