இரண்டு மலைகளுக்கு நடுவே பொங்கிப் பாயும் வெள்ளம், வானும் மண்ணும் கைகோர்க்கும் தொடுவானம், அந்திப் பொழுதில் கூடு திரும்பும் பறவைகள், புல்லின் நுனியில் ஜொலிக்கும் பனித்துளி, பூக்களின் சோலையில் தேன் அருந்தும் பட்டாம்பூச்சிகள், மழைக்கு முன்னோட்டமாக தோகை விரித்தாடும் மயில்... இத்தனையையும் ஓவியக் காட்சிகளாய் வரைந்திருக்கிறார் ஸ்வேதா. சென்னை, கவின்கலைக் கல்லூரியில், நுண்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இவர். பிறவியிலேயே காது கேட்காத வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளியான இவரால் பேசமுடியாவிட்டாலும், இவரின் ஓவியங்கள் பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
உலகத்தின் பொதுமொழியான "தூரிகை மொழி' என்னும் தலைப்பில் இவர் மூன்றாண்டுகளுக்கு முன் வைத்த ஓவியக் கண்காட்சி பத்திரிகைகள் ஊடகங்கள் பலவற்றின் கவனத்தைக் கவர்ந்த ஒன்று. தனி ஓவியக் கண்காட்சிகளின் மூலமாகவும், குழு ஓவியக் கண்காட்சிகளின் மூலமாகவும் புகழ்பெற்று விளங்கும் ஸ்வேதாவின் ஓவியத் திறமையைப் பாராட்டி, தேசிய அளவில் வழங்கப்படும் "அவுட்-ஸ்டான்டிங் கிரியேட்டிவ் அவார்ட்'டை மாற்றுத் திறனாளியான ஓவியர் ஸ்வேதாவுக்கு சமீபத்தில் தில்லியில் நடந்த விழாவில் வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். பல்வேறு துறை சார்ந்த 53 பேர்களுக்கு வழங்கப்பட்டன இந்த விருதுகள். இதில் ஓவியத் துறையில் விருது வாங்கிய பூரிப்பில் இருந்த ஸ்வேதாவை சென்னை, பெருங்குடியிலிருக்கும் அவரின் வீட்டில் சந்தித்தோம். நொடிக்கு நொடி விதவிதமான உணர்ச்சிகளை ஸ்வேதா தன் முகத்தில் காட்டிக் கொண்டிருக்க, ஸ்வேதாவின் தந்தை கணேசன் நம்மிடம் பேசியதிலிருந்து...
""பெசன்ட் நகரிலிருக்கும் பால வித்யாலயா சிறப்புப் பள்ளியில் ஸ்வேதாவைச் சேர்த்தோம். அந்தப் பள்ளியில் வாய் பேசமுடியாத குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சியும் அளித்தனர். அந்த சிறப்புப் பள்ளியில் குழந்தைகளோடு தங்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ள ஓவியத்தையும் ஓர் ஊடகமாகப் பயன்படுத்துவது அவர்களின் வழக்கம். இப்படித்தான் ஓவியத்தில் ஸ்வேதாவுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவள், நான் வரைந்த ஓவியங்களில் இருக்கும் பிழைகளையும் திருத்த ஆரம்பித்தாள். அப்போது அவளுக்கு வயது 8. அவளுக்கு ஓவியம் வரைவதில் இயல்பாகவே இருக்கும் ஆர்வம் அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. அவளின் ஓவியத் திறமையைப் பார்த்த "ஃப்ரீடம் அறக்கட்டளை'யின் நிறுவனர் டாக்டர் சுந்தர், ஸ்வேதாவை ஓவியத் துறையில் புகழ்பெற்ற ராம சுரேஷ் என்பவரிடம் தனிப் பயிற்சிக்கு அனுப்பினார். ஃப்ரீடம் அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை முறையான பயிற்சிகளின் மூலம் வெளிக் கொணரவைக்கும் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் உதவியால்தான், ஸ்வேதா ஓவியத்துறையில் வெகு வேகமாக தன்னை வளர்த்துக் கொண்டாள். நீர் வர்ணம், எண்ணெய், அக்ரலிக், கேன்வாஸ்... எனப் பல வகைகளில் ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றாள். அவள் பார்த்த நிஜக் காட்சிகளையும் அவள் மனத்தில் உருவான கற்பனைகளையும் ஓவியமாகத் தீட்டத் தொடங்கினாள். ஐந்து வருடங்களில் அவள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு தூரிகை மொழி என்னும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி வைத்தோம். அது பல தரப்பினரையும் கவர்ந்தது.
ஸ்வேதாவின் ஓவியப் பணிகளைப் பாராட்டி அவளுக்கு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பினர் யுவ கலா பாரதி விருதை வழங்கியிருக்கின்றனர். தனியார் நிறுவனங்களுக்காகவும் அமைப்புகளுக்காகவும் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். தற்போது தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஓவியப் பயிற்சி அளித்துவருகிறாள்''
என்றார் கணேசன்.
- தன்னைப் பற்றி தனது தந்தை சொல்வதை கண்கள் பனிக்க பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவின் முகத்தில் மகிழ்ச்சிப் பெருமிதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.