இயற்கை தந்த வாழ்வு!
இயற்கை சூழல்களுக்குச் செல்லாமல் திரைப்படம் தயாரிக்க முடியாது என்கிற அளவுக்கு ரசிகர்களின் மனதில் வெளிப்புற காட்சிகள் இரண்டறக் கலந்துவிட்டன. தங்களால் நேரில் பார்க்க முடியாத இடங்களை திரையில் பார்க்க முடி
இயற்கை சூழல்களுக்குச் செல்லாமல் திரைப்படம் தயாரிக்க முடியாது என்கிற அளவுக்கு ரசிகர்களின்
மனதில் வெளிப்புற காட்சிகள் இரண்டறக்
கலந்துவிட்டன.
தங்களால் நேரில் பார்க்க முடியாத இடங்களை திரையில் பார்க்க முடிகிற மகிழ்ச்சி ரசிகர்களுக்கு. ரசிகர்களின் எண்ணத்திற்கேற்ற வண்ணத்தைத் தேடி, தேடிக் கண்டுபிடித்து நம் கண் முன்னே கொண்டு வரும் பணியைச் செய்து வருபவர்கள்தான் லொக்கேஷன் மேனேஜர்கள்.
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட இடங்களும் இருக்கின்றனவா என்று மலைக்க வைக்கும் அபூர்வ பகுதிகளை திரைக்குக் கொண்டுவரும் தமிழக லொகேஷன் மேனேஜர்களில்
முக்கியமானவர் குற்றாலம் ம.சரவணக்குமார். அவரை சொக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
எத்தனை படங்களுக்கு லொக்கேஷன் தேர்வு செய்து கொடுத்துள்ளீர்கள்?
இதுவரை 35 படங்களுக்கும், 15 சீரியல்களுக்கும் லொக்கேஷன் தேர்வு செய்து கொடுத்துள்ளேன். சீரியலைப் பொறுத்தவரை "சூலம்', "கோலங்கள்', "மெட்டி ஒலி', "அம்மன்', "இந்திரா', "நாகம்மா', "நரசிம்மா', "தாயம்' உள்ளிட்ட தொடர்களுக்கு லொக்கேஷன் தேர்வு செய்து கொடுத்துள்ளேன்.
"பார்த்திபன் கனவு', "பேராண்மை', "வில்லு', "குட்டி', "இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்', "புலி வேஷம்', "கற்றது தமிழ்', "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', "முரட்டுக்காளை' உள்ளிட்ட 35 படங்களில் லொக்கேஷன் பணிகளை செய்துள்ளேன்.
சென்னையில் நிறைய வசதிகள் இருக்கும் பொழுது கிராமத்திலிருக்கும் உங்களால் எப்படி இதை செய்ய முடிகிறது?
நான் குற்றாலம் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் இருக்கிறேன். எங்கள் பகுதி மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இயற்கையாகவே மலை சார்ந்த அழகு மிளிரும் பகுதிகளும் ரம்மியமான நீர் வீழ்ச்சிகளும் பயப்பட வைக்கும் மிக அடர்ந்த காடுகளும் இங்கு அதிகம். எனவே நல்ல லொக்கேஷன் தேடி பல திரைப்பட இயக்குநர்கள் இப்பகுதிக்கு வருவது வழக்கம். எனவே இதை செய்வதில் எனக்கு சிரமம் எதுவும் இல்லை.
உங்களின் ஸ்பெஷல் லொக்கேஷன் பற்றி?
இங்குள்ள குற்றால மலைப்பகுதிக்கு வந்து விட்டாலே போதும். அத்தனை லொக்கேஷனும் கிடைத்துவிடும். இங்கு இயற்கை அழகு மண்டிக்கிடக்கிறது. அருகிலேயே வயல்வெளிகள், குளம், ஏரி என இயற்கை இங்கு ஏராளமாக மலர்ந்து கிடக்கிறது.
இதைத்தவிர அம்பாசமுத்திரம், பாபநாசம், அச்சன்கோவில், முண்டந்துறை, களக்காடு, திருச்செந்தூர், தேரிக்குடியிருப்பு என வனப்பான வனப்பகுதிகளும் கடல்பகுதிகளும் இங்கு ஏராளம். வெளிநாடுகளுக்கு இணையான பல இடங்கள் இப்பகுதியில் உள்ளன.
இடங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
தினமும் காலையில் வெளியே சென்றால் இரவில்தான் வீடு திரும்புவேன். எல்லா இடங்களுக்கும் சென்று திரைப்படத்திற்கேற்ற வித்தியாசமான இடங்கள் இருக்கிறதா என பார்ப்பேன். பின் அதை புகைப்படம் எடுத்து ஆல்பமாக தயாரித்து கொண்டு, படங்களுக்குப் பயன்படுத்துவேன்.
எப்பொழுது முதல் லொக்கேஷன்களை தேடி பயணிக்கிறீர்கள்?
நான் பாபநாசத்திலுள்ள கல்லூரியில் படித்தேன். இயற்கையான சூழலில் அமைந்திருந்த அந்தக் கல்லூரிதான் எனது இன்றைய திரை வாழ்க்கைக்குத் தொடக்கம். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இயற்கை மிளிரும் இடங்களை ரசிப்பதற்காக சோறு கட்டி சென்ற எனக்கு இன்று சோறு போடுவதே அந்த இயற்கைதான். கல்லூரி காலம் முதலே லொக்கேஷன்களை புகைப்படம் எடுத்து தள்ளியுள்ளேன். இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளாக திரைத்துறைக்காக லொக்கேஷன்களை தேர்வு செய்து கொடுப்பதை முழுநேரப் பணியாக செய்து வருகிறேன்.
நீங்கள் நடித்திருக்கிறீர்களா?
ஆமாம். சீரியல்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளேன்.
உங்கள் குடும்பத்தைப் பற்றி?
மனைவி தலைமையாசிரியையாக பணி புரிகிறார். சினோலா, வர்ஷா என இரண்டு பெண் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இது தவிர வேறு பணி?
இங்கு லொக்கேஷன் தேடி வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். இங்கு வருபவர்களுக்கு அ.. முதல் ஃ வரை அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்கிறேன். பிற இடங்களில் ஆகும் செலவைவிட இங்கு செலவு குறைவு என்பதால் இப்பொழுது திரைத்துறையினரின் வருகை அதிகரித்துள்ளது.