மகளிர் குழு விவசாயிகள்!
மருதம் என்றால் வயலும் வயல் சார்ந்த இடமும் என்று தெரியும். மருதம் என்ற பெயரில் சுய உதவிக்குழு நடத்துபவர்களுக்கும் வயல் மீது ஆர்வம் வந்ததுதான் ஆச்சர்யம். திருச்சி மாவட்டம், சிறுகமணி எஸ். புதுக்கோட்டையில
மருதம் என்றால் வயலும் வயல் சார்ந்த இடமும் என்று தெரியும். மருதம் என்ற பெயரில் சுய உதவிக்குழு நடத்துபவர்களுக்கும் வயல் மீது ஆர்வம் வந்ததுதான் ஆச்சர்யம். திருச்சி மாவட்டம், சிறுகமணி எஸ். புதுக்கோட்டையில் மருதம் சுய உதவிக்குழுவினர் முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகின்றனர்.
மருதம் சுய உதவிக் குழுத் தலைவி செல்வராணி, துணைத் தலைவர்கள் வேலம்பாள், செல்வி ஆகியோர் கூறியது:
""நம் முன்னோர்கள் சாண எரு, இலை தழைகள், பசுந்தாள் உரப் பயிர்கள் ஆகியவற்றை இடுபொருள்களாக இட்டு சாகுபடி செய்து வந்தனர். அதுவும் இயற்கை சார்ந்த வேளாண்மைதான். பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால், ரசாயன வேளாண்மை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தாத சூழ்நிலை ஏற்பட்டது.
நம் முன்னோர்கள் இயற்கை விவசாயத்தையே செய்து வந்தனர். 1960-களுக்குப் பிறகு நாட்டில் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்பட்டு, ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதன்மூலம், அதிக மகசூல் பெருகினாலும் மண்வளம் பாதிக்கப்பட்டது. மேலும், அதிலிருந்து விளையும் நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் மற்றும் பயறு வகைப் பயிர்கள் அனைத்தும் நஞ்சு கலந்துவிடுகின்றன. இதைப் பயன்படுத்துவதனால், மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
எனவே, நாங்கள் மீண்டும் பழைய முறையைப் போன்று, இயற்கை விவசாயத்தை செய்ய வேண்டும் என்று இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம்.
பொதுவாக இயற்கை எருக்கள் இடும்போது, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய 3 சத்துகளும் கிடைக்கும். முதலில் பயிரிடுவதற்கு முன்னதாக, நிலத்தை நன்கு பண்படுத்த வேண்டும். அதற்கு கொளஞ்சி, தக்கைப்பூண்டு, சணப்பு போன்ற ஏதாவது ஒரு பயிரை தெளித்து அது பூக்கும் தருணம் வரும்போது, அதை மடக்கி உழவு செய்ய வேண்டும்.
உதாரணத்துக்கு, நெல் பயிரிட வேண்டும் என்றால் உழவுக்குப் பிறகு, அடியுரமாக மண்புழு எருவை ஏக்கருக்கு 500 கிலோ வீதம் தெளிக்க வேண்டும். பின்னர், நடவு செய்த 15 ஆம் நாள் களையெடுத்து ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு உரத்தை மேலுரமாகத் தெளிக்க வேண்டும். 17- ஆம் நாளில் 12 லிட்டர் ஜீவாமிர்தத்தை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
20-வது நாளில் மீன் அமினோ அமிலம் 2 லிட்டருடன், அரை கிலோ வேப்பம் புண்ணாக்கு கரைசலை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதனால், பயிரில் உள்ள பூச்சிகள் அனைத்தும் ஓடி விடும்.
நெல் பயிர் நடவு செய்து 15, 30, 45 ஆகிய நாள்களில் மண்புழு உரம், 17, 34, 51 ஆகிய நாள்களில் ஜீவாமிர்தம், 20, 40, 60 ஆகிய நாள்களில் மீன் அமினோ அமிலம் (பூச்சி விரட்டி) பயன்படுத்தலாம்.
நாம் பயிரிடும் பயிரைப் பொருத்து, தேவையான அளவுக்கு இந்த மூன்று பொருள்களையும் பயன்படுத்தலாம்.
ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் இயற்கை உரத்துக்குச் செலவு மிகக் குறைவாகவே உள்ளது. அதோடு, பயிரின் வளர்ச்சியும், மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது.
இயற்கை விவசாயத்தை செய்வதனால், ஏக்கருக்குச் சராசரியாக 25-35 மூட்டை நெல் கிடைக்கிறது. ஆனால், ரசாயன உரத்தைப் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்வதனால், ஏக்கருக்கு 15- 25 மூட்டை வரையே நெல் கிடைக்கிறது.
இதேபோல, வாழைக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு நேந்திரன் வாழைக்கு 12 முதல் 15 டன் வரை கிடைக்கும். ஏலரசி (ராணி பூவன்- ஏக்கருக்கு) 15 முதல் 17 டன் வரை கிடைக்கும். பூவன் வாழைக்கு (ஏக்கருக்கு) 15 முதல் 20 டன் வரை கிடைக்கும். பயிர்களுக்கு இடுபொருள் செலவு குறைவாக உள்ளதுடன், அதிக மகசூலும் கிடைக்கிறது. மேலும், நிலத்தின் தன்மை மிக வளமாக மாறுகிறது.
இந்த இயற்கை உரங்களைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்படுத்தினால், அதன்பிறகு அந்த நிலம் நல்ல பண்பட்ட நிலமாக மாறிவிடும். இதுபோன்ற நிலங்களில் எந்தப் பயிரை பயிரிட்டாலும் நல்ல மகசூல் கிடைக்கும்'' என்றனர் அவர்கள்.
இதுகுறித்து சேவை தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. தேவேந்திரன் கூறியது:
ஒவ்வொரு மகளிர் குழுக்களுக்கும் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இயற்கை உரம் தயாரிப்பு, பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகளை 4 நாள்களுக்கு அளிக்கின்றோம். இவ்வாறு பயிற்சி பெற்ற அந்தப் பெண்கள் தங்களது குழுக்களில் உள்ள மற்ற பெண்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். மேலும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் அளிக்கிறோம்.
இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்கள் மற்றும் கருவிகளை வாங்குவதற்கு வங்கிகளின் மூலம் ரூ. 20 ஆயிரம் வரை கடன் பெற்றுத் தருகிறோம். இந்தக் கடனை 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
ஜீவாமிர்தம் செய்வது எப்படி?
10 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ வெல்லம், 2 கிலோ உளுந்த மாவு, 2 கைப்பிடி அளவு மணல், 200 லிட்டர் தண்ணீர் இவை அனைத்தையும் நன்றாக கலக்கி 24 மணிநேரம் வைத்திருந்து 5 நாள்களுக்குள் தெளிக்கலாம்.
மண்புழு எரு தயாரிப்பது எப்படி?
மர நிழலிலோ அல்லது கொட்டகை அமைக்க வேண்டும். அதில் 10 அடி நீளத்துக்கு தரையில் பிளாஸ்டிக் சாக்குகளை (கோணிப் பை) விரித்து விட வேண்டும். அதன் மேல் தேங்காய் உரி மட்டைகளை கவிழ்ந்தவாறு அடுக்கி வைக்க வேண்டும். அதற்கு மேல் மக்கிய குப்பைகள் (சாண எரு) ஒரு டன் அளவுக்கு கொட்டி பரப்பி விட வேண்டும். அதில் 3 கிலோ மண்புழுவை விட வேண்டும். அதன்பிறகு, சணல் சாக்குகளை (கோணிப் பை) மூடி வைக்க வேண்டும்.
அதன்பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள், 30 லிட்டர் தண்ணீர் தெளிக்க வேண்டும். 30 நாள்களுக்குப் பிறகு, 20 முதல் 30 கிலோ வரை மண்புழு எரு கிடைக்கும். அதை தனியாக சேகரித்து வைக்க வேண்டும்.
வெல்லம் 1 கிலோ, மாட்டு சாணம் 5 கிலோ, கடலை புண்ணாக்கு 2 கிலோ இது மூன்றையும் 20 லிட்டர் தண்ணீரில் 10 நாள்கள் ஊறவைத்து, அந்தக் கரைசலை அந்த மண்புழு படுக்கையின் மீது தெளிக்க வேண்டும்.
இதனால், மண்புழுக்களுக்கு கூடுதலாக உணவு கிடைக்கிறது. மறுபடியும் ஒருநாள் விட்டு ஒருநாள் 20 லிட்டர் தண்ணீர் தெளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரத்துக்கு தெளிக்க வேண்டும். பின்னர், மண்புழு எரு சேகரிக்கலாம்.
கடைசியில், 5 முதல் 6 கிலோ வரை மண்புழு கிடைக்கும். மண்புழு எரு மொத்தத்தில் 600 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ மண்புழு எரு ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.