"வால்டர் வெற்றிவேல்' அமுல் பேபி
"வால்டர் வெற்றிவேல்" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் அறிமுகமாகியவர் தனலஷ்மி. தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சாந்தி நிலையம்" தொடரில் சுமதியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
"வால்டர் வெற்றிவேல்" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் அறிமுகமாகியவர் தனலஷ்மி. தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சாந்தி நிலையம்" தொடரில் சுமதியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. படித்துக் கொண்டே நடித்துக் கொண்டிருக்கிறேன். என் அப்பா ஒரு ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. அக்காவுக்குத் திருமணமாகி விட்டது. என்னுடைய விருப்பத்திற்காக நடிகர் சங்கத்தில் நடனம் கற்று வருகிறேன்.
நடிக்க வந்தது எப்படி?
நான் குழந்தை பருவத்திலேயே நடிக்க வந்துவிட்டேன். என் சித்தப்பா சினிமாவில் சிகை அலங்காரம் செய்பவர். "வால்டர் வெற்றிவேல்' படத்திற்கு அவர் வேலை செய்யும்போது அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது நான் கொழுகொழு என்று அமுல் பேபி மாதிரி இருப்பேனாம். அதனால் அவர் என்னைத் தூக்கிக்கொண்டு போய் நடிக்க வைத்தார். அதில் சுகன்யா மேடம் ஒரு பாடல் காட்சியில் தன்னுடைய குழந்தைக்கு விஷம் கலந்த பால் கொடுத்துவிட்டு தாலாட்டு பாடிக்கொண்டிருப்பார்கள். அந்த விஷம் சாப்பிடும் குழந்தையாக வருவது நான் தான். அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக இடம் பிடித்திருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படித் தான் நடிக்க வந்தேன்.
"சாந்தி நிலையம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
அந்தத் தொடரில் சுமதிங்கிற கதாபாத்திரம் செய்கிறேன். குயிலி அம்மாவோட பெண்ணாக நடிக்கிறேன். பாலசந்தர் அங்கிளோட தொடர் அது. அவருடைய தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன வருத்தம், அந்தத் தொடரைப் பொறுத்தவரை என் காட்சிகள் எல்லாம் முடியபோகுது. என் கதாபாத்திரம் ஆரம்பிக்கும்போது வேற மாதிரி ஆரம்பித்தது. ஆனால் இப்போது டிராக் கொஞ்சம் மாறி வேறு பக்கம் போய்விட்டது. ஒரு நல்ல தொடரின் வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
சுமதி பரீட்சையில் பெயில் ஆகிவிடுவது போல் தொடரில் வருகிறது. தற்போது உண்மையாகவே பரீட்சை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். தங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
உண்மையில் நான் நன்றாகப் படிப்பேன். அதனால் பெயிலாகிவிடுவேன் என்ற பயம் எல்லாம் எனக்கு இல்லை. எங்கள் பள்ளியில்கூட நான் நன்றாகப் படிக்கும் பெண் என்பதால் ஷூட்டிங் போக எல்லாம் அனுமதி கொடுப்பார்கள். நான் பள்ளிக்குப் போகாத அன்று என்ன பாடம் நடந்தோ அதை எல்லாம் சொல்லி படிக்கச் சொல்வார்கள். அதனால் பரீட்சை பற்றிய பயம் எனக்குக் கிடையாது.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
"மகள்', "அனுபல்லவி' என இரண்டு தொடர்களில் நடித்து வருகிறேன். பெரியதிரையில் ஏவி.எம்.மின் "முதல் இடம்' படத்தில் முதல் முறையாக ஹீரோயினுக்குத் தோழியாக நடித்து வருகிறேன்.
எதிர்காலத் திட்டம்?
பிளஸ் டூ முடித்துவிட்டு மேற்கொண்டு கரஸ்ஸில் படித்துக்கொண்டே நடிப்பில் முழு கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன். எனக்கு சி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதே சமயம் ஒரு நல்ல நடிகைன்னு பேர் வாங்கணும். நிறைய வித்தியாசமான கதாபாத்திரம் செய்ய வேண்டும்.