முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பூ வாசத்தை இழக்கிறோமா?

நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பழைய கண்டுபிடிப்புகள்தான் அடித்தளம். ஆனால் நவீனத்தைப் புகுத்துகிறோம் என்ற பெயரில் நமக்கான பழைய அடையாளத்தை அழித்துவிடுகிறோம். அந்த வகையில் நம் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதுதான் வாசனைத் திரவியமான அத்தர்.  இப்போது "அத்தர்' வாசனையும் போய்விடுமோ என்று பலருக்கும் பயம். காரணம், பெர்ஃப்யூம், டியோட்ரன்ட், பாடி ஸ்ப்ரே, டியோ என்ற புதுப்புது பெயர்களால் அத்தர் என்கிற சொல் மறக்கடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய கிழக்கு இந்தியா, பாகிஸ்தானில் அத்தர் மிகவும் பிரபலம். இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் அத்தரை விரும்பி உபயோகிப்பதுண்டு. அத்தர் என்ற வாசனை திரவியத்தில் எந்தவித வேதிப்பொருள்களோ, ஆல்ககாலோ (மது) கலக்கப்படுவதில்லை; முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட ஒரு சில  பகுதிகளில் அத்தர் பெருமளவில் குடிசைத் தொழில் போன்று தயாரிக்கப்படுகிறது. கன்னோஜ் சரித்திரபிரசித்திப் பெற்ற ஊர் மட்டுமல்ல; இந்த நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் "அத்தர்' தொழிற்சாலைகள் உண்டு.

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்தந்தப் பகுதி விவசாயிகள் கன்னோஜ் என்ற இடத்தில் ரோஜா, மல்லிகை பூக்களைக் கொய்து கொண்டு வருவார்கள். அதனை அருகில் உள்ள அத்தர் தயாரிப்பாளர்களிடம் பட்டுவாடா செய்கின்றனர்.

அந்த பூக்கள் பிரிக்கப்பட்டு தண்ணீருடன் கலக்கப்பட்டு, செம்பு பானைகளில் வைத்து கொதிக்க வைக்கப்படுகிறது. செம்பு பானைகள் என்றால் சிறிய அளவிலானவை அல்ல. பெரிய பெரிய அளவிலான செம்பு பானைகள். செங்கல் சூளை போன்ற மிகப்பெரிய சூளையில் பானைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தீ மூட்டப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் வாசனையான நீராவி, மூங்கில் குழாய்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. அந்த வாசனை நீராவி, சந்தன எண்ணெய் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் சென்று சேருகிறது. இந்தக் கலவைதான் அத்தராக உருமாறுகிறது.

""அத்தரை இயந்திரங்களில் தயாரித்தால் அதன் நறுமணத்தில் வித்தியாசம் வந்துவிடும். அதன் பின்பு அத்தரின் மதிப்பு குறைந்துவிடும்'' என்கின்றனர் அத்தர் தயாரிப்பாளர்கள்.

இந்தத் தொழில் இப்போது நலிவடைந்து கொண்டே வருகிறது. காரணம் இதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. மூலப்பொருள்கள் இப்போது இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுவதில்லை. போதிய வரவேற்பு இல்லாமல், அதிக முதலீடு போட வேண்டியுள்ளதால் இந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து கொண்டே வருகிறது.

இந்தியராக இருங்கள்; இந்திய வாசனையையே நுகருங்கள் என இவர்களுக்கு யார் சொல்வது?!

முழு கட்டுரையைப் படிக்க →