மனிதகுல நாகரிக வளர்ச்சி என்னதான் உயர உயரப் போனாலும், இயல்பான உடல் நலம், முழு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது இன்னமும் தேவையாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் மகளிர் குழுக்கள், மாணவர்கள், மகப்பேறு தாய்மார்களுக்கு நலக் கல்விக்கான தகவல்களைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்
கரூரைச் சேர்ந்த பயிற்சியாளர் டி.என். சேதுலிங்கன்.
"சித்தர்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், பயிற்சியளிப்பதற்காக செல்லாத மாவட்டங்களே இல்லை. திருச்சியில் அரசுத் திட்டமான "புதுவாழ்வுத் திட்டத்தின்' பயிற்சிக்காக வந்திருந்த சேதுலிங்கனுடன் நடத்திய உரையாடலில் இருந்து...
அது என்ன நலவாழ்வு பயிற்சி? வளர்ச்சி மேம்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு தனிப் பயிற்சி தேவையா?
உண்மையில் இப்போதுதான் அவசியமாகப்படுகிறது. எப்படித் தூங்க வேண்டும்? பல் துலக்க வேண்டும்? சாப்பிட வேண்டும்? குளிக்க வேண்டும்? என்பது எதுவும் தெரியாத மனிதர்களாகத்தான் நாம் வாழ்கிறோம். இதனால்தான் இப்போது புதிதுபுதிதாக நோய்கள் உருவாகின்றன.
ஒய்யாரமாக மல்லாந்து படுத்துக் கொண்டோ, சவத்தைப் போல கை கால்களை நீட்டி நேராகவோ படுக்கக் கூடாது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கும். இடதுபுறமாகத்தான் (ஒருக்களித்து) படுக்க வேண்டும்.
பல் துலக்கும் பற்பசையை பிரஷ்ஷில் எடுத்துக் கொண்டு வாயை ஏதோ ஒரு "ஸ்டேண்ட்' போல வைத்து மற்ற மற்ற வேலைகளைப் பார்க்கும் பலரையும் பார்க்க முடிகிறது. இது முற்றிலும் தவறு. 2 நிமிஷங்களுக்கு மேல் பல் துலக்கக் கூடாது.
குளிக்கும்போது சாதாரண பச்சைத் தண்ணீரில் குளித்தால் தலையிலிருந்து தண்ணீரை ஊற்ற வேண்டும். வெந்நீரில் குளித்தால் முதலில் காலில் இருந்து ஊற்றி, பிறகு தலையில் ஊற்ற வேண்டும்.
தண்ணீர் குடிக்கும்போதே நன்றாக கொப்பளித்து விழுங்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. முன்னதாகவோ அல்லது சாப்பிட்டு முடித்து சிறிதுநேரம் கழித்தோ குடிக்கலாம். உணவுப் பொருள்களை நன்கு மென்று விழுங்க வேண்டும்.
அதுபோல பலருக்கும் சாப்பிட்டவுடன் டீ அல்லது காபி அருந்தும் பழக்கம் இருக்கிறது. இவ்வாறு செய்வது தவறு. பழக்கமாகிவிட்டவர்கள் சிறிதுநேரம் கழித்தாவது குடிக்கலாம்.
கூடை கூடையாகப் பழங்கள் சாப்பிடலாம். ஆனால், அதுபோல சாப்பாட்டையும் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் ஏறத்தாழ ஒரு முழு உணவுக்கு சமம். ஆனால், இப்போது வயிறு முட்ட தின்றுவிட்டு, முடிக்கும்போது கூடவே ஒரு வாழைப்பழத்தையும் சாப்பிடுகிறார்கள்.
பொதுவில், நன்கு பசித்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். இதைச் செய்தால்போதும் சர்க்கரை நோய் நம்மை அண்டாது. ஆனால், எதையும் நாம் செய்வதில்லையே!
குழந்தைப் பேறுக்கும் இதுபோல பட்டியல் இருக்கிறதா?
நிச்சயமாக. ஒரு சேலை வாங்குவதற்காக கடை கடையாக ஏறி இறங்குகிறோம். ஆனால், குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் அதுவாக நடைபெற வேண்டுமா? ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்ணுக்கு குறைந்தபட்சம் 45 கிலோ எடையாவது இருக்க வேண்டும்.
உடலுறவின்போதுகூட உரிய நாளைக் கணக்கிட்டுக் கொள்வது நல்லது. கரு உருவாகும் நாள்களைத் தெரியாமல் இருந்துவிட்டு, பிறகு குழந்தை இல்லை என்று சொல்லி டாக்டர்களுக்கு மட்டுமல்ல, இப்போது சாமியார்களுக்கும் செலவிடுகிறார்கள்.
உண்மையில் நல்ல ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும் திறன் நம்மிடம்தான் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை மட்டுமே நம்பியிருக்காமல், உடலில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அந்தக் குறையை பெரும்பாலும் உணவின் மூலமே ஈடுகட்ட முடியும்.
அதேபோல குழந்தை வயிற்றில் இருக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். குடித்துவிட்டு வந்து கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கும் அப்பாமார்களின் வெறித்தனம் கருவில் இருக்கும் குழந்தைகளையும் சென்று சேர்கிறது.
பிறந்த குழந்தையை நடக்க வைக்கிறீர்களாமே?
ஏன் நடக்காது? உண்மையில் நன்றாக வளர்ந்ததாகக் கூறும் நாம்கூட அத்தனை கவனமுடன் நடப்பதில்லை. பிறந்தவுடன் குழந்தை நன்றாக நடக்கும்.
"ஆட்டோமேட்டிக் ஸ்டெப்பிங்' என்ற அந்த நுட்பத்தின் மூலம் முன்பாதத்தை மேஜையின் விளிம்பில் லேசாகத் தட்டிவிட்டு, மேஜையில் குழந்தையை நிறுத்தி உடலை மட்டும் பிடித்துக் கொண்டால் போதும். மிக அழகாக ஒவ்வொரு கால்களாக முன்எடுத்து வைத்து எல்லாக் குழந்தையும் நடக்கும்.
இதேபோல, கன்னத்தை லேசாகத் தடவிவிட்டால் வாயை நம் கையை நோக்கிக் கொண்டு வந்து விரல்களைச் சப்பும். பிறக்கும்போதே குழந்தை சப்பத் தெரிந்திருக்கும். சில பெண்கள் குழந்தைக்கு பால் குடிக்கத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, புட்டிப்பால் புகட்டுவதைப் பார்க்கிறோம். அது முற்றிலும் தவறு.
உள்ளங்காலில் விரல்களுக்கு கீழே விரலை வைத்து அழுத்தினால் விரல்களை நெருக்கிப் பற்றும். அதேபோல கைகளுக்குள் நம் விரலை வைத்தால் அழுத்திப் பற்றும். படுத்திருக்கும்போது ஒரு முறை கால்களை மடக்கி நீட்டிவிட்டால், குழந்தை இன்னொரு முறை கால்களை மடக்கி நீட்டும்.
இவற்றைச் செய்தால் அந்தப் பகுதி நரம்புகள் இயல்பாக வேலை செய்கின்றன என்று பொருள். இல்லாவிட்டால் மிக எளிய பயிற்சிகள் அல்லது சிறிய அறுவைச் சிகிச்சைகள் செய்து பிற்காலத்தில் ஊனம் பெரிய அளவில் உருவாகிவிடாமல் தடுக்கலாம்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 27 ஆயிரம் குழந்தைகளை இவ்வாறு பரிசோதித்து ஆலோசனை வழங்கியிருக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.