பௌர்ணமி நிலவில் ...
கும்ப மேளாவில் மூன்று கோடி பக்தர்கள் அலகாபாதில் குவிந்திருந்ததைக் காட்டும் படங்களும், அதையொட்டிய செய்திகளும் வெளியானதைத் தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷன் நெரிசலில் முப்பதுக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததும், காயமடைந்ததும் இப்போது தெரியவருகின்றன.
கும்ப மேளாவில் மூன்று கோடி பக்தர்கள் அலகாபாதில் குவிந்திருந்ததைக் காட்டும் படங்களும், அதையொட்டிய செய்திகளும் வெளியானதைத் தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷன் நெரிசலில் முப்பதுக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததும், காயமடைந்ததும் இப்போது தெரியவருகின்றன. சமயம் சார்ந்த பெரும் கூட்டங்களில் இம்மாதிரி அசம்பாவிதங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல. ஆனாலும் யாரும் இவற்றிலிருந்து பாடம் கற்பதாகத் தெரியவில்லை. படகுகளில் அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்று அவர்கள் ஆற்றில் மூழ்கி மரணம் அடைவதும் வடக்கிலிருந்து அவ்வப்போது வருகின்ற துயரச் செய்திகளில் வழக்கமாகி
வருகிறது.
இரண்டு மாதங்கள் முன்பு, ஹரித்வார்- ரிஷிகேஷ் சென்ற போது, ஹரித்வாரில் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்த பக்தர்கள் சாரிசாரியாக கங்கைக் கரை நோக்கி நடந்ததும், கும்பல் கும்பலாகக் கரையில் புரோகிதரிடம் அமர்ந்து மூத்தோருக்கான கடன்களைச் செய்ததும், குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே நீந்திச் சென்று கங்கையில் குளித்ததும் நினைவுக்கு வருகிறது.
சாரிசாரியாக மக்கள் போய்க்கொண்டே இருந்தாலும் எங்கேயும் நெரிசல் இல்லை. குழப்பம் இல்லை. குழந்தைகள் காணாமல் போகவில்லை. பெரியவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். காவல்காரர்களும் குறைவாகவே தென்பட்டனர். மக்களுக்குள் இருந்த கட்டுப்பாடு தெளிவாகத் தெரிந்தது.
அதேபோல், சண்டி தேவி மற்றும் மானஸா தேவி மலைக் கோயில்களுக்கு ரோப்-வேயில் கூண்டுகளில் செல்ல வரிசையில் நிற்பதும், ஒழுங்கை மீறாததும், மக்களின் கட்டுப்பாட்டைக் காண்பித்தது. அதை நிர்வாகம் செய்யும் தனியார் நிறுவனம் எந்த ஒழுங்கீனத்தையும் ஆதரிப்பதில்லை. அதில் கோயில் நிர்வாகம் தலையிடுவதில்லை. அதனால் ஒரு தனியார் நிர்வாகம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக அத்தனை பெரிய கூட்டத்தைச் சமாளிக்கிறது என்பது தெரிந்தது.
ஆட்டோ ஓட்டிகளும் அடாவடியாக நடப்பதில்லை. குறைந்தபட்ச வாடகையே வசூலிக்கின்றனர். சரியான இடங்களுக்கும் நாம் குறிப்பிடும் ஆசிரமங்களுக்குமே இட்டுச் செல்கின்றனர். தமிழ்நாட்டு யாத்ரீகர்கள் வெகு வெகு குறைவு. ஒரே ஒரு தமிழ்த் தம்பதி மட்டும் ரிஷிகேஷில் தங்களுக்கு ஹிந்தி தெரியவில்லை என்பதால், எங்களிடம் பார்க்க வேண்டிய ஆசிரமங்களையும் கோயில்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
கங்கையைச் சுத்தமாக்கும் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய ஆசிரமத்தில், ஏராளமான அயல்நாட்டினர் தங்கியிருந்தனர். அவர்கள் கங்கையின் தூய்மையையும், சுற்றுச் சூழலின் அமைதியையும் ரசித்தனர்.
எங்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. "ராப்ட்' எனப்படும் கட்டுமரத்தில் சாகசம் செய்யும் இளைஞர்கள் அங்கங்கே தென்பட்டனர். ஹரித்வாரில் மக்கள் கங்கை நீரில் இடும் காசையும், தெரியாமல் தொலைக்கும் சின்னச் சின்ன தங்க நகைகளையும் அரித்து அரித்துத் தேடும் சிலரும் வித்தியாசமாகத் தெரிந்தனர். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருந்தது. ஆனாலும் கூட்டத்துக்கும், ஜனத்திரளுக்கும் குறைவில்லை.
சென்ற பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் போன போது, மாலை ஏழுமணிக்குத் தொடங்கி, இரவு பன்னிரண்டரை மணிக்கு ஹோட்டல் அறையை அடைந்தேன். இத்தனை லட்சக்கணக்கான மக்கள் மலையைச் சுற்றி வருவது வியப்பைத் தந்தது. குழந்தைகள், பெண்கள், அயல்நாட்டவர்கள், நம்முடனே தொடர்ந்து நடந்துவந்ததும், அதில் இருந்த ஒழுங்கும், வழியெங்கும் இருந்த கோயில்களில் சூடம் ஏற்றி வணங்குவதும், கடைகளில் வியாபாரம் சுறுசுறுப்பாக அந்த இரவு மட்டும் நடைபெறுவதைப் பார்ப்பதும் மிக வித்தியாசமான காட்சிகளாக இருந்தன. யாரும் தொலைந்து போகவில்லை. யாரும் மிதிபடவில்லை. எவருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்தக் கட்டுப்பாட்டை எல்லாம் யாரும் மேலிருந்து திணிக்கவேயில்லை. மக்களாகத் தங்களை ஒழுங்காகச் செலுத்திக்கொண்டு வந்தார்கள். மறுநாள் அருணாசலேசுவரர் கோயிலும் பெருவாரியான மக்களின் வழிபாட்டுக்குத் தயாரான நிலையில் இருந்தது. ஆனால் வரிசையை மீறும் சில நபர்களை இங்குதான் அவ்வப்போது பார்க்க முடிந்தது.
ரமணாசிரமத்தில் எப்போதும் நம்மவர்களைவிட, அந்நிய நாட்டினர்தாம் அதிகம் இருப்பார்கள். அன்றும் அப்படியே. அவர்கள் தியானம் செய்யும் இடங்கள் அமைதியாக இருந்தன. நம்மவர்கள்தாம் மொபைல் போனை வைத்துக்கொண்டு அங்கேயும் பேசிக்கொண்டிருந்தார்கள். கும்ப மேளா சோகம் நினைவுக்கு வந்தபோது, மேற்படி நினைவுகளும் தொடர்ந்து வந்தன!