ஞாயிறு கொண்டாட்டம்

எதையோ தேடி ஓடுகிறார்கள்!

வாழ்க்கையை விட சிறந்த சினிமா ஏது? கனவுக்கும், எதார்த்தத்துக்கும் இடையே ஒவ்வொரு காட்சியிலும் மாய மான் போன்று

ஜி. அசோக்

வாழ்க்கையை விட சிறந்த சினிமா ஏது? கனவுக்கும், எதார்த்தத்துக்கும் இடையே ஒவ்வொரு காட்சியிலும் மாய மான் போன்று ஆச்சரியம் கொள்ள வைக்கிறது வாழ்க்கை. இந்த பெருநகர வாழ்க்கையின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை கனவுகள். உணவு, உடை, இருப்பிடம் இன்னும் பிற அடிப்படை வசதிகள் கிடைக்காத போதுதான் இங்கு பிரச்னை. இதோ இந்த சாலையில் கடந்து போகிற எந்த மனித முகத்திலும் புத்துணர்வு இல்லை, பெயருக்குக் கூட சிரிப்பு இல்லை. எல்லோரும் எதைத் தேடி ஓடுகிறார்கள் என்கிற கேள்விக்கு பணம் மட்டுமே பிரதான பதிலாக வந்து நிற்கிறது. சூழ்ச்சியையும், தந்திரமாகப் பிழைப்பதையும் சாமர்த்தியம் என நினைக்கிற எல்லா மனிதர்களின் வாழ்க்கையும்தான் இந்த "சதுரங்க வேட்டை'. அமைதியாகப் பேசுகிறார் இயக்குநர் வினோத். இவர் பார்த்திபன், விஜய்மில்டன், ராஜூமுருகன் ஆகியோரிடம் சினிமா கற்றவர்.

ஒரு நிமிட டீஸர், மூன்று நிமிட டிரெய்லர் எல்லாமும் கவனம் கலைக்கிறது.... ஆனால் எதார்த்த சினிமாக்களுக்கு இப்போது அந்தளவுக்கு....?
 பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், அந்தப் பணத்தை சம்பாதிக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்தால் என்ன? இதுதான் இங்கே பலருக்கும் சிந்தனையாக இருக்கிறது. அப்படிச் சிந்திக்கிற ஒருவன் தனக்கென ஒரு கொள்கையுடன் பயணப்படுகிறான். அவன் அடைந்த நிலை என்ன? என்பதுதான் கதை. கதையும், அதைச்சுற்றி வரும் சூழல்களும் செம சீரியஸôக இருக்கலாம். ஆனால் இது பக்கா காமெடி படம். அன்பு, அழுகை, கொண்டாட்டம், நினைத்துப் பார்க்க முடியாத உறவு முடிச்சுகள், வளர்ச்சிகள், வீழ்ச்சிகள் என கண்ணெதிரே எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விட்டு சிரிக்கிற இந்த வாழ்க்கையை விட காமெடி ஏதாவது இருக்கிறதா என்ன? அனுதினமும் எதார்த்தங்களில் இருந்து விலகிச் செல்வதுதானே வாழ்க்கை. அதிலும் அடித்து முன்னுக்கு நிற்க ஆசைப்படும் இந்த மனிதர்கள் வாழ்க்கையின் விநோதம்தானே? எதையும் சீரியஸôக யோசிக்காதீர்கள். இது முழுக்க முழுக்க காமெடி படம்தான். ஹாலிவுட்டின் "கான் ஜானர்' வகை படங்களை பார்த்த அனுபவம் கிடைக்கும்..

சமூகப் பொறுப்பின்மையுடன் வாழ்வதே நடுத்தர மனிதர்களின் இயல்பு வாழ்க்கை என்பதைப் போல் சித்திரிப்பதுதான் சினிமாக்களின் வழக்கம்..... இதுவும் அந்த பாணி கதைதானா...?
 நாம் ஷங்கர் படங்களில் பார்த்திருப்போம்.... "என்னங்க நாடு இது? எல்லா இடங்களிலும் லஞ்சம், ஊழல், பொய்' என்று மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் கருத்துச் சொல்லுவார். ஆனால் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கிய கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் என்று கூசாமல் பொய் சொல்லி சான்றிதழ் வாங்கிச் சலுகைகளை அனுபவிக்கிறது. இப்படி சூழ்ச்சியும், மாய தந்திரங்களும் நிரம்பிக் கிடக்கிற வாழ்க்கை இந்திய சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது. இப்படி ஆயிரம் சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் அதிகப்பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கிற சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இன்னும் காமெடி. ஆனால் பயங்கர காமெடியன்களாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களை எல்லா நேரங்களிலும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காகத் திருடுபவனை விட, மக்களின் சேவகராகத் தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவன் இங்கே நிறைய. அப்படிப்பட்ட திருடர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இதன் நோக்கம்.

மனோபாலாவின் தயாரிப்பு.... பாலிவுட் நட்டுவின் நடிப்பு.... என படத்துக்கு தனி டோன் இருக்கே...?
 இந்தக் கதையின் மேல் எனக்கு அளப்பறிய நம்பிக்கை இருந்தது. "இதை தயாரிங்க...' என நான் யாரையும் தேடிப் போகவில்லை. எல்லாமும் தானாகவே நடந்தது. என் நண்பன் இயக்குநர் நலன் குமாரசாமியிடம் "படித்து விட்டு கருத்து சொல்' என்று திரைக்கதையைக் கொடுத்தேன். கதை முழுக்கவே அவன் ஏதோ உணர்ந்திருக்கிறான். அப்போதுதான் படம் தயாரிக்கும் முடிவில் மனோபாலா சார் நிறையக் கதைகள் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் நலன் குமராசாமி மனோபாலா சாரிடம் கதை சொல்லுங்கள் என்றான். கதையைக் கேட்ட அவருக்கு அவ்வளவு சந்தோஷம். அப்படித்தான் மனோபாலா இந்த கதைக்குத் தயாரிப்பாளர் ஆனார். பாலிவுட்டின் பரபரப்பு ஒளிப்பதிவாளர் நட்டு இந்தப் படத்துக்குத் தேவையா? என இப்போது நீங்களும் கேட்கிறீர்கள். அனுபங்களைக் கடந்து வந்த ஒரு சராசரி தமிழ் முகம் இந்தக் கதைக்குத் தேவைப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் இப்படியொரு படத்தில் நட்டு சார் நடித்ததில்லை. "ஏன் இந்தப் படங்களில் எல்லாம் நடிக்கிறார்' என்பது போல்தான் அவரைப் பற்றி பேசியிருக்கிறோம். ஆனால் இது அவருக்கு நல்ல படம். சமீபத்திய தமிழ் சினிமாக்களில் கவனம் ஈர்த்த பல நடிகர்கள் துணைக்கு இருக்கிறார்கள்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT