ஞாயிறு கொண்டாட்டம்

குழந்தை குறட்டை விடுகிறதா?

குறட்டை பெரியவர்களின் பிரச்னை என்று நீங்கள் நினைத்தால், அது மிகமிகத் தவறு. ஏனென்றால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 8 இல் 1 குழந்தை குறட்டை விடுகிறது.

ஸ்ரீதேவி குமரேசன

குறட்டை பெரியவர்களின் பிரச்னை என்று நீங்கள் நினைத்தால், அது மிகமிகத் தவறு. ஏனென்றால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 8 இல் 1 குழந்தை குறட்டை விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் இந்தப் பிரச்னைக்கான காரணம், அதிக உடல் எடை, முறையான உடற்பயிற்சி இல்லாமை, சாலையோரம் உள்ள சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வது, நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தல் ஆகியவையே ஆகும். குறட்டை விடுவதால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகள் என்னவென்றால் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு எனக் கூறுகிறார் சென்னை கே.கே.ஆர்.இஎன்டி மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான ரவி ராமலிங்கம்.

""குறட்டை என்பது பரம்பரையாக வருவது என்று ஒருபுறம் கூறினாலும், பொதுவாக வாழ்க்கை முறையே இதற்கான முக்கியமான காரணமாகும். அதிலும் குறிப்பாக உணவு முறை மாற்றங்களும், தூக்கமின்மையும்தான் முக்கிய காரணமாக அமைகின்றன.

அந்த வகையில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறட்டையை நப்ங்ங்ல் அல்ய்ங்ஹ என்று கூறுவோம். அதாவது தூங்கும் போது மூச்சு காற்று நிற்பது. இதற்கு முக்கிய காரணம் மூக்கு எலும்பு தண்டு கோணலாக இருப்பது, சைனஸ் பிரச்னை, தொண்டையில் சதை வளருதல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

இவை ஏற்படுவதற்கான காரணம் பெரும்பாலான குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பது, அதிக அளவில் ஐஸ்கிரீம் உண்பது, இரவில் ஏசியின் அளவை அதிகமாக வைத்துத் தூங்குவதால் மூச்சடைத்துக் கொள்வது. இதனால் மூச்சுக் குழாயின் மேற்பகுதி குறுகி, நுரையீரல் அளவு மற்றும் கொழுப்பு பொருண்மை அதிகரித்து மூச்சடைப்பு ஏற்படுகிறது. சரியாக மூச்சு காற்று செல்ல முடியாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குறட்டைச் சத்தம் வருகிறது. அதிலும் சமீபகாலமாக பெரும்பாலான குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதும் குறட்டை ஏற்பட காரணம்.

மேலும் சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே தைராய்டு பிரச்னை இருக்கும். சில குழந்தைகளுக்கு நாக்கு பெரிதாக இருக்கும், சிலருக்கு தாடை உள் அடங்கியிருக்கும். இதனாலும் தூங்கும்போது மூச்சு குழலில் அடைப்பு ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் சில நேரம் குழந்தையின் உயிருக்கே கூட ஆபத்தாக அமைந்து விடக்கூடும். எப்படி என்றால், சில குழந்தைகள் தூங்கும்போது வாய்வழியாக மூச்சுவிடும். இது தொடர்ந்தால் குழந்தையின் தாடை மாறும், காது கேட்பதில் கோளாறு ஏற்படும், முகத்தோற்றமே கூட பாதிக்கும் அபாயமும் உண்டு. சில குழந்தைகள் இரவில் தூங்கும் போது அதிக மூச்சடைப்பு ஏற்பட்டு எந்தவித அறிகுறியும் இல்லாமல் தூங்கும்போதே இறந்து போகவும் வாய்ப்பு உண்டு.

அதிகமாக சளி பிடித்து அதனால் சில குழந்தைகள் தூங்கும் போது வாய்வழியாக மூச்சுவிடும். அதுபோன்ற நேரங்களில் சில குழந்தைகளுக்கு குறட்டை ஏற்படும். சளி குறைந்ததும் குறட்டை நின்றுவிடும். இதற்கு பயப்படத் தேவையில்லை.

ஆனால், சளி குறைந்த பின்பும் குழந்தை தொடர்ந்து குறட்டை விடுகிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஆனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் குறட்டை குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம். சாதாரண குறட்டைதானே; வளர்ந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு.

அதுபோன்று பெரியவர்களுக்கு ஏற்படும் குறட்டைக்கும் காரணம் அதிக உடல் எடை , அதிக கழுத்துச் சுற்றளவு, அதிக இடுப்புச் சுற்றளவு, புகை பிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்துகள் உட்கொள்வது ஆகியவையும்தான்.

அதிக உடல் எடை கொண்டவர்கள் தூங்கும்போது, மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்படுவது குறட்டைக்கான மறைமுகக் காரணமாகத் திகழ்கிறது.

குறட்டையைக் கட்டுப்படுத்த உடல் எடையைக் குறைத்தல், மூச்சுக் குழாய்கள் ஆஸ்துமாவின் காரணமாகச் சுருங்கி அடைப்புகள் இருப்பின் ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தல், வயிறு பருமனாகி தொப்பையினால் கொழுப்பு பொருண்மையால் நுரையீரலில் அழுத்தம் இருப்பின் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல், மூச்சை இழுப்பது/ விடுவதை ஒழுங்குபடுத்தும் பிரணாயமம் போன்ற பயிற்சிகள் செய்வதினால் குறட்டைக் கட்டுப்பட வாய்ப்பு உண்டு.

இருந்தாலும் அதிக அளவில் குறட்டைச் சத்தம் வருபவர்கள் உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அதுபடி நடப்பது அவசியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT