முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஜாதிக்காய் மர பொம்மைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை, கந்திகுப்பத்து பகுதியில் இருக்கும் ஆதிரை நஏஎ மகளிர் சுய உதவி குழுவின் பிரதிநிதியாக இருப்பவர் கே.பாரதி.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை, கந்திகுப்பத்து பகுதியில் இருக்கும் ஆதிரை நஏஎ மகளிர் சுய உதவி குழுவின் பிரதிநிதியாக இருப்பவர் கே.பாரதி. வித்தியாசமான ஜாதிக்காய் மரத்திலான விதவிதமான பொம்மைகளைச் செய்வதில் கைத் தேர்ந்தவர். இவரை அன்னை தெரசா மகளிர் வணிக வளாகத்தில் நடந்து வரும் கோடை கண்காட்சியில் சந்தித்தோம்:

""கடந்த ஆறு ஆண்டுகளாக எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த மர பொம்மைகளைச் செய்து வருகிறோம். இது முழுக்க முழுக்க ஜாதிக்காய் மரத்தில் செய்யப்படுவது. இதற்கு எந்த செயற்கை வண்ணமும் ஊட்டாமல் மரத்தினை இழைத்து, செதுக்கி செய்கிறோம். அன்னம், மயில், கார்ட்டூன் வடிவங்கள், இயேசு கிறிஸ்து, மரம், வீடு என பல வடிவங்களில் செய்து வருகிறோம். இதன் விலையும் குறைவு என்பதால் பார்த்தவுடன் மனதைக் கவர்ந்துவிடும் இந்த பொம்மைகள். அதனாலேயே இதற்கு அதிக வரவேற்பும் கிடைக்கிறது.

இது தவிர எங்கள் குழுவுடன் இணைந்து எங்கள் பகுதியில் உள்ள பத்து குழுவைச் சேர்ந்த மகளிர்திட்டப் பெண்களும் ஒன்று கூடி அவரவர் குழுவின் மூலம் கற்றுக் கொண்ட கைத் தொழில்களான கலம்காரி துணியிலான பைகள், பர்ஸ்கள், செல்போன் பவுச்கள், நகைபெட்டிகள், வளையல் ஸ்டாண்டுகள், சுடிதார் மற்றும் சேலைகளில் பூ வேலைகள் செய்வது என மற்ற தயாரிப்புகளையும் செய்து வருகிறோம். எங்களது தயாரிப்புகளை வட இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்குவதால் மகளிர்திட்ட அலுவலர்களின் உதவியோடு ஏற்றுமதியும் செய்கிறோம். இதனால் எங்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டே இருப்பதோடு மாதம் தோறும் கணிசமான வருமானமும் கிடைக்கிறது.

முன்பெல்லாம் வீட்டிற்குள்ளேயே இருந்து பொழுதை வீண்ணடித்துவிட்டோம். அந்த நிலைமாறி இப்போது எங்களாலும் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது. படிப்பில்லாதவர்களும் முன்னேற மகளிர்திட்டம் உதவி வருகிறது. இந்தத் தருணத்தில் மகளிர்திட்ட அலுவலர்களுக்கும், எங்கள் குழு உருவாக காரணமாக இருந்த தாமஸ் வில்லியம் என்ற சமூகசேவகருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.