ஞாயிறு கொண்டாட்டம்

தெற்கில் உள்ள விஷ்ணு ஆலயங்களைப் போன்ற புண்ணிய தலம்!

சென்னை, பிராட்வேயில் வரத முத்தியப்பன் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில்

சித்ரா மாதவன்

சென்னை, பிராட்வேயில் வரத முத்தியப்பன் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பல வழிகளில் முக்கியமானதாகும்.

பிரதான விக்ரகத்தின் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் வீற்றிருக்க, கீழ் வலது கரம் பக்தர்களைப் பாதுகாப்பது போலவும் (அபய ஹஸ்தா), கீழ் இடது கரம் தண்டாயுதத்தின் மீதும் (கட ஹஸ்தா) வீற்றிருக்கின்றன. இக்கோயிலில் லட்சுமிதேவி (காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருப்பதைப் போன்றே) பெருந்தேவி தாயார் என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு சில விஷ்ணு கோயில்களில் மட்டும் வழிபடப்படும் ஸ்ரீனிவாசப் பெருமாள் ( திருமலை, ஆந்திரப் பிரதேசம்), ரங்கநாதசுவாமி (ஸ்ரீரங்கம், தமிழ்நாடு), சம்பத் குமாரன் (மேல்கோடு, கர்நாடகம்) ஆகிய கடவுள்களுக்கு இங்கு சந்நிதிகள் இருப்பது, இக்கோயிலின் அரிய சிறப்பம்சமாகும்.

ஸ்ரீரங்கம் கர்ப்பகிரகத்தைப் போன்றே இங்குள்ள ரங்கநாதர் சந்நிதியும் வட்ட வடிவில் அமைந்துள்ளது.

ரங்கநாத சுவாமியின் உற்சவமூர்த்தியாக ஸ்ரீரங்கத்தைப் போன்றே இங்கும் அழகிய மணவாளர் வழிபடப்படுகிறார். இவர் பிரயோக சக்கரத்தைத் (வெளி பார்த்த விளிம்புடன் சக்கரம்) தாங்கியுள்ளார். மேலும் ஸ்ரீரங்கத்தைப் போன்றே இங்கும், அழகிய மணவாளரின் இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர். இந்தக் காட்சியை பெரும்பாலான கோயில்களில் காண முடியாது.

சம்பத் குமாரன் சந்நிதியில் வீற்றிருக்கும் விக்ரகத்தின் காலடியிலும், அவரது உற்சவமூர்த்தியின் காலடியிலும் ஒரு முஸ்லிம் அரசரின் மகளான பிபி நாச்சியாரின் சிலைகள் இருப்பது, இந்தச் சந்நிதியின் சிறப்பாகும். ருக்மிணி, சத்யபாமாவுடன் வீற்றிருக்கும் வேணுகோபால சுவாமி, ராமர், (புகழ்பெற்ற சோளிங்கர் மலைக் கோயிலில் உள்ள விக்ரகத்தைப் போன்றே) யோக நரசிம்மர் ஆகிய கடவுள்களின் சிலைகளும் இங்கு உள்ளன. (சஞ்சீவி மலையைத் தாங்கிய) சஞ்சீவி ஆஞ்சநேயரின் விக்ரகம் இங்குள்ளது. அவரது உற்சவமூர்த்தியும் சஞ்சீவி ஆஞ்சநேயர் தான்.

முக்கியத் திருவிழாக்கள்: இரண்டு தனித்தனி பிரம்மோத்ஸவங்கள் (ஆண்டு திருவிழாக்கள்) கொண்டாடப்படுவது இந்தக் கோயிலின் அரிய சிறப்பம்சமாகும்.

ஸ்ரீரங்கத்தைப் போன்ற வடிவம்: இங்குள்ள ரங்கநாத சுவாமியின் சந்நிதி, ஸ்ரீரங்கம் கர்ப்பகிரகத்தைப் போலவே அமைந்துள்ளது.

தாயாரின் பெயர்: இங்கு லட்சுமிதேவி "பெருந்தேவி தாயார்' என்று வழிபடப்படுகிறார்.

நரசிம்ஹர் விக்ரகம்: சோளிங்கர் மலைக் கோயிலில் உள்ள விக்ரகத்தைப் போன்றே இங்கும் யோக நரசிம்மர் காட்சியளிக்கிறார்.

அமைவிடம்: பிராட்வே, சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியின் வர்த்தகப் பகுதியாகும். இக்கோயில் அமைந்துள்ள சாலையின் தெற்கே சைனா பஜார் சாலையும் வடக்கே இப்ராஹிம் சாஹிப் தெரு (பழைய சிறைச்சாலை தெரு) உள்ளன.

கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் - கோயில் சிற்பங்கள் ஆய்வாளர்
தமிழில்: பிரவீண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

SCROLL FOR NEXT