ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்!

வரதராஜ   ராமசாமி  என்ற வ.ரா. தஞ்சாவூர்  மாவட்டம்  திருவையாற்றைச் சேர்ந்த  திருப்பழனம் கிராமத்தில்  1881 -ஆம் ஆண்டு  பிறந்தவர்.

DIN

சென்ற வார தொடர்ச்சி...

வ.ரா ( 1881 - 1951)

வரதராஜ   ராமசாமி  என்ற வ.ரா. தஞ்சாவூர்  மாவட்டம்  திருவையாற்றைச் சேர்ந்த  திருப்பழனம் கிராமத்தில்  1881 -ஆம் ஆண்டு  பிறந்தவர்.  வசதியான மிராசுதார் குடும்பம். இளம் வயதிலேயே  பால்ய விவாகம்,  வரதட்சணை ஆகிய  சமூகக் கொடுமைகளைக் கண்டித்து  பேசினார், எழுதினார். 1917 -ஆம் ஆண்டு  "சுந்தரி'  என்ற முதல் நாவலை  எழுதியபோது  அவருக்கு  வயது 36. 1910-இல்  அரவிந்தரை  சந்திக்க புதுச்சேரி  புறப்பட்டார்.  அங்கு பாரதியாரை சந்தித்து  அவருடைய  சீடரானார்.  நிறைய  புத்தகங்களை  வாசித்தார். அதனிடையே  "பாரத தேவி' ,  "மணிக்கொடி'  பத்திரிகைகளின்  தொடர்பு   கிடைக்கிறது.  "இராமானுஜர்'  படத்திற்கு  திரைக்கதை  - வசனம் எழுதியதோடு அதில் நடிக்கவும்  செய்தார்.

வ.ரா.வின் எழுத்துகளில்  "நடைச் சித்திரம்',  "தமிழ்ப் பெரியார்கள்'  மிகவும் பிரபலமானவை.  நாவல்களில்  "கோதைத் தீவு',  "விஜயம்'  புகழ் பெற்றவை. "அக்ரகாரத்து  அதிசய  மனிதர்' என்று அண்ணாதுரையால்  பாராட்டப் பெற்றவர். 

வை.மு.கோதை நாயகி அம்மாள் (1901  - 1960)

சென்னை  திருவல்லிக்கேணியில் வாழ்ந்த  "வைத்த மாநிதி'  என்கிற  குடும்ப பாரம்பரிய  அடைமொழி  கொண்ட வைஷ்ணவ  குடும்பத்தினர்  தங்களது மூன்றாவது  மகன்  சீனிவாச அய்யங்காருக்கு  1907 -இல்  கோதை  நாயகியை திருமணம் செய்து மருமகளாக்கிக்  கொண்டனர்.  பால்ய விவாகம்.  மணப் பெண்ணுக்கு அப்போது  ஐந்தரை வயது.  குடும்ப  பாரம்பரியப் பெயரின் முதலெழுத்து  கோதை நாயகியின்  முன்னால்  சேர்க்கப்பட்டு  வை.மு.கோதை நாயகி அம்மாள் ஆனார்.  வை.மு.கோ.  தானாகவே  தமிழைப்  படிக்கவும், எழுதவும்  பயின்று  அதன்   தொடர்ச்சியாக ஆர்வமுடன்  தமிழில்  புதினங்கள் எழுத ஆரம்பித்தார்.  1924- ஆம் ஆண்டு  வை.மு. கோதை நாயகி அம்மாள் "வைதேகி'  என்ற நாவலை எழுதினார்.  முதல் நாவலை  எழுதியபோது  அவரது வயது 23,  அதைத் தொடர்ந்து  115  நாவல்களை  எழுதினார். 1925 - ஆம்  ஆண்டு "ஜகன் மோகினி'  எனும் பத்திரிகையை  தொடங்கி  35  ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.  வை.மு.கோதை நாயகி  அம்மாளுக்கு  "நாவல் அரசி' ,  "நாவல் ராணி'  என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. 

சி.என். அண்ணாதுரை (1906- 1969)

சின்ன காஞ்சிபுரம்  நடேச முதலியார்  அண்ணாதுரை  என்ற சி.என். அண்ணாதுரை  1906-ஆம் ஆண்டு பிறந்தார்.  சென்னை பச்சையப்பன் கல்லூரியில்  முதுகலைப் பட்டம்  பெற்ற அண்ணாதுரை  தமிழிலும், ஆங்கிலத்திலும்  சரளமாக  எழுதும் - பேசும்  ஆற்றலைப் பெற்றிருந்தார். பெரியாரின்  திராவிட  அரசியலில்  ஈடுபாடு  கொண்டு சமூக முன்னேற்றத்திற்கு  முன்னுரிமை   தந்து பேசவும், எழுதவும்  செய்தார்.   1939-ஆம் ஆண்டு  குடியரசு  பத்திரிகையில்   "கோமளத்தின் கோபம்'  எனும்  அவரது முதல் நாவலை  எழுதியபோது  வயது 33.  அவர்  நாவல்,   சிறுகதை,  கட்டுரை, நாடகம், திரைக்கதை  என பல துறைகளிலும்  தடம் பதித்தவர்.  அவருடைய நாவல்களில்  "வேலைக்காரி',   "ரங்கோன் ராதா'  பிரபலமானவை.  1967-ஆம் ஆண்டு  தமிழக முதலமைச்சராக  பதவியேற்ற பின்  மதராஸ்  மாகாணம்
(MADRAS STATE) என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது குறிப்பிடத் தக்கது.

சி.சு. செல்லப்பா ( 1912 - 1998)

சின்னமனூர்  சுப்பிரமணிய  அய்யர் செல்லப்பா  என்ற சி.சு. செல்லப்பா  1912- ஆம் ஆண்டு  பிறந்தார்.  இளங்கலை பட்டம் பெற்றவர்.  காந்தியத்தில்  ஈடுபாடு ஏற்பட்டு  சுதந்திரப் போராட்டத்தில்  ஈடுபட்டார்.  1941-  ஆம் ஆண்டு  தனி நபர்   சுதந்திரப் போராட்டத்தில் கலந்து  கொண்டவருக்கு  6 மாத சிறை தண்டனையும்,  ஆயிரம் ரூபாய்  அபராதமும்  விதிக்கப்பட்டது.  க.நா.சு. நடத்திய  "சந்திரோதயம்'  பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தபோது  1947 -  ஆம் ஆண்டு  "வாடிவாசல்'  என்ற  தனது முதல் நாவலை சந்திரோதயத்தில் எழுதினார். அப்போது அவரது வயது  35. "வாடிவாசல்',   ஜல்லிக்கட்டு  பற்றி எழுதப்பட்ட  முதல் தமிழ் நாவல். பத்தாண்டுகளுக்குப் பின் அது  புத்தக வடிவில்  வெளிவந்தது.  சில காலம் தினமணி  பத்திரிகையில்  உதவி ஆசிரியராக  பணியாற்றியுள்ளார். அதன்பின் 1959 -ஆம்  ஆண்டு "எழுத்து'   என்ற இலக்கிய   சிற்றேட்டை தொடங்கி  நடத்தினார்.  அவரது  புகழ்பெற்ற நாவல்  "ஜீவனாம்சம்'.  சி.சு. செல்லப்பா  கடைசியாக  எழுதி  பதிப்பித்த   "சுதந்திர தாகம்'   என்ற நாவல் 1000 பக்கங்களைக் கொண்டது. 2001- ஆம் ஆண்டு  சாகித்ய அகாதெமி  விருது "சுதந்திர தாகம்'  நாவலுக்குக் கிடைத்தது.  வாழ்நாள் முழுவதும்  விருது,  பரிசு ஆகியவற்றைப் புறக்கணித்த சி.சு.செல்லப்பாவிற்கு  சாகித்ய  அகாதெமி விருது  இறப்பிற்குப்  பிந்தைய  விருதாக  வழங்கப்பட்டது.

விந்தன் ( 1916 -  1975)

கோவிந்தன் என்ற இயற்பெயர் கொண்ட விந்தன்  செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நாவலூரில்  பிறந்தவர்.  படிப்பு அதிகமில்லை. சென்னை சூளை பட்டாளம்  பகுதிகளில்  பலவிதமான வேலைகளைச் செய்துள்ளார்.  முற்போக்கு அரசியல் கட்டுரைகளை  எழுதி வந்த  அவர் அச்சுக் கோர்ப்பவராக  "கல்கி' பத்திரிகையில்  சேர்ந்தார். விந்தனின்  இலக்கிய ஆர்வத்தையும், திறமையையும் கண்ட  "கல்கி'  கிருஷ்ணமூர்த்தி  அவரை "கல்கி'  பத்திரிகையின் உதவி ஆசிரியராக  நியமித்தார்.  1948-ஆம்  ஆண்டில் "கண்திறக்குமா?'  என்ற அவரது முதல் நாவலை  எழுதினார்.  அப்போது  அவரது வயது32.  விந்தனின்  "பாலும் பாவையும்'   நாவல் மிகவும்  பிரபலமானது. மனிதன்  என்ற பத்திரிகையையும்,  "புத்தகப் பூங்கா'  என்ற பதிப்பகத்தையும் நடத்தினார்.  ஜெயகாந்தனின் "ஒரு பிடி  சோறு' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். விந்தன் "கூண்டுக்கிளி',  "பார்த்திபன் கனவு'  திரைப்
படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 

லா.ச. ராமாமிருதம் ( 1916 - 2007)

திருச்சி  மாவட்டத்தைச் சேர்ந்த லால்குடியை  சொந்த  ஊராகக் கொண்ட லால்குடி  சப்தரிஷி ராமாமிருதம்  லா.ச.ரா  என சுருக்கமாக அழைக்கப்பட்டார்.  1916-ஆம் ஆண்டு பிறந்த லா.ச.ரா. ஒவ்வொரு சிறுகதையையும், நாவலையும் எழுத மாதக் கணக்கில், வருடக்
கணக்கில்  எடுத்துக் கொள்வார்.  "புத்ர'  அவரது முதல்  நாவல்.  இரண்டு ஆண்டுகளில்  எழுதி முடித்த  "புத்ர'   நாவலை  1964  -ஆம் ஆண்டு வாசகர் வட்டம் வெளியிட்டது.   அப்போது  அவரின் வயது  48.  6 நாவல்களும்,  18 சிறுகதைத் தொகுப்புகளும்,  7 கட்டுரை தொகுப்புகளும்  எழுதியுள்ள  லா.ச.ரா வங்கி அதிகாரியாக  பணியாற்றி  ஓய்வு  பெற்றவர்.  "தினமணி  கதிர்'  இதழில் தொடராக   வெளிவந்து பின் புத்தகமாகிய  "சிந்தாநதி' நாவலுக்கு 1989-இல்   சாகித்ய அகாதெமி  விருது கிடைத்தது.  லா.ச.ரா.  தனது  92-ஆவது பிறந்தநாளன்று  (30.10.2007 )  இறந்தார். 

நகுலன் ( 1921 - 2007)

எழுத்தாளர் டி.கே.துரைசாமியின் புனைபெயர் நகுலன்.  1921- ஆம் ஆண்டு கும்பகோணத்தில்  பிறந்த நகுலன்,  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலை  பட்டம் பெற்றார்.  பின் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில்  ஆங்கிலம்  முதுகலை பட்டம் பெற்றார். திருவனந்தபுரம்  கல்லூரி ஒன்றில்  ஆங்கில விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர்.  க.நா.சு.வின் நவீன  இலக்கியம்  பற்றிய எழுத்துகளையும், சி.சு. செல்லப்பாவின்  எழுத்து  பத்திரிகையில்  வெளியான புதுக்கவிதைகளை படித்து தானும்  எழுத வேண்டுமென்ற  உத்வேகத்தைப் பெற்றார்.  1965-  ஆம்  ஆண்டு அவரது  முதல் நாவல்  "நிழல்கள்'  வெளியானது. அப்போது  அவரது  வயது  44.  நாவல் என்பது  குறைந்த  பக்கங்களைக் கொண்டதாக  இருத்தல் கூடாது  என்பதில்  அவருக்கு  உடன்பாடு  கிடையாது. அவருடைய  மற்றொரு  நாவலான  "நினைவுப் பாதை'  மிகவும்  சிறப்பானது. புதுக்கவிதைகள்  பல எழுதியுள்ளார். "கேரள  ஆசான்'  நினைவுப் பரிசு பெற்றவர். 

அகிலன் ( 1922-  1988)

புதுக்கோட்டையைச் சேர்ந்த பெருங்களூர்  வைத்தியலிங்கம் பிள்ளை அகிலாண்டம்  என்ற இயற்பெயரைக் கொண்ட  அகிலன், 1922- ஆம் ஆண்டு பிறந்தவர்.  சுதந்திரப் போராட்டத்தில்  கலந்து கொண்டவர்.   ரயில்வே அஞ்சலகத் துறையிலும், பின் அகில இந்திய  வானொலியில் நாடகத் தயாரிப்பு துறையில்  உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

1944- ஆம் ஆண்டு  புதுக்கோட்டை  "கலைவாணி',  கழக வெளியீடாக  அவரது முதல் நாவல் "மங்கிய நிலவு'   வெளிவந்தது.  அப்போது அவரது வயது 22.  பின்பு நாவலின் பெயர்  "இன்ப நினைவு'  என ஆசிரியராலேயே  மாற்றப்பட்டது.

1945- ஆம் ஆண்டு  "கலைமகள்' பத்திரிகையில்  அகிலனின்  "பெண்'  நாவல் பரிசு பெற்று 1947- இல்  புத்தகமாக  வெளிவந்தது.  "பெண்'   நாவல்தான் தன்னால் எழுதப்பட்ட  முதல் நாவல் என்றும்,  ஆனால்  புத்தகமாக  வெளிவந்த முதல் நாவல்   "மங்கிய நிலவு'    என்றும்  அகிலன்   குறிப்பிட்டுள்ளார்.  22 நாவல்கள், 20 சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை,  சிறுவர்  இலக்கியம், நாடகம் என பல தொகுதிகளும்  வெளிவந்துள்ளன. "கல்கி',  "ஆனந்த விகடன்' ஆகிய பிரபல  பத்திரிகையில்  எழுதி  புகழ் பெற்ற அகிலனுக்கு 1963-இல் "வேங்கையின் மைந்தன்'   நாவலுக்காக  சாகித்ய அகாதெமி  விருது கிடைத்தது.  1977-இல்   "சித்திரப் பாவை'  நாவலுக்காக  ஞானபீட விருது கிடைத்தது.  தமிழ் மொழிக்கு  ஞானபீட  விருது வழங்கப்பட்டது அதுவே  முதல்முறை. 

- அடுத்த இதழில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT