ஞாயிறு கொண்டாட்டம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 13: புஷ்கர் ஏரியில் புனித ஆரத்தி!

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த உல்லாசப் பயணிகள் சுமாராக ஒரு பதினைந்து பேர் இருப்பார்கள், கைகளில் மண் லோட்டாக்களை ஏந்தி அதிலிருந்த டீயை குடித்துக் கொண்டிருந்தனர்.

DIN

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த உல்லாசப் பயணிகள் சுமாராக ஒரு பதினைந்து பேர் இருப்பார்கள், கைகளில் மண் லோட்டாக்களை ஏந்தி அதிலிருந்த டீயை குடித்துக் கொண்டிருந்தனர். முக்காலி போல இருந்த ஒரு உயரமான இரும்பு ஸ்டூலின் மீது அடுப்பு, அது வெளியே தெரியாதவாறு ஒரு தகர தகடு மூடியிருந்தது. பளபளவென்று துலக்கிய பித்தளை குடத்தில் டீ, ஒரு கரண்டியால் மொண்டு, அடுப்பைச் சுற்றி வரிசையாக அடுக்கப்பட்டிருந்த மண் லோட்டாக்களில் ஊற்றிக் கொடுத்தார் அந்த டீ வியாபாரி. டீ அபாரமாக சுவைத்தது.
மறுநாள் பொழுது விடிந்தது. ராஜஸ்தானின் சுற்றுலாத்துறை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காக பலவிதமான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். எந்தெந்த நேரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை நாள், நேரம் என்று வரிசைப்படுத்தி அச்சிட்டு கொடுத்துவிடுகிறார்கள்.
அன்றைய தினம் மட்காவை (ஙஹற்ந்ஹ) உடைக்கும் போட்டி நடைபெற இருந்தது. உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மண்பானையை உடைப்பவர்களே வெற்றி பெற்றவர்கள் என்றார்கள். உள்நாட்டு மக்களும் வெளிநாட்டினரும் இரண்டு குழுக்களாக பிரிந்தனர். ஒருவர்மீது ஒருவர் ஏறி கையில் இருக்கும் கொம்பைக் கொண்டு பானையை அடிக்க முயன்றனர். கடைசியில் வெற்றி நம்மவர்களுக்கே. வெளிநாட்டினரின் குழு சறுக்கி விழுந்ததால் வெற்றி கிட்டவில்லை. மற்றவர்களோடு சேர்ந்து நானும் கமான் இந்தியா என்று கத்தி ஊக்கப்படுத்தினேன். ராஜஸ்தானின் சுற்றுலா அதிகாரிகள், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
மைதானத்தின் மற்றொரு புறம் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த மல்யுத்த வீரர்கள் மோதிக் கொண்டனர். ஒரு வீரர் மற்றொரு வீரரைத் தூக்கி சுழற்றி எறியும்போது கைதட்டல் காதைப் பிளந்தது. நகரமுடியாமல் இரும்புப்பிடி பிடிப்பது, ஆளை விடப்பா போதும் என்று நீட்டி படுத்துவிடும்படி எதிராளியை வலுவிழக்கச் செய்வது என்று அப்பப்பா கைதட்டி, வாவ், வாவ் என்று கூவி மகிழ்ந்தோம்.
மதிய உணவிற்குப் பிறகு, தமிழ்நாட்டு வீரர்கள் ஆடிய கபடி ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பல மாநிலத்து கபடி வீரர்கள் மோதிக் கொண்டனர். நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்த தமிழ்நாட்டு கபடி வீரர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
மறுநாள், வெளிநாட்டினர் பங்குபெற்ற கயிற்றை இழுத்து பலத்தை நிரூபிக்கும் போட்டியில் வெளிநாட்டினர் குழு வெற்றி பெற்றது. அடுத்தது டர்பன் கட்டும் போட்டி. பாம்மைப்போல நீண்டு இருந்த டர்பன் துணியை, யார் முதலில் உட்கார்ந்திருப்பவரின் தலையில் கட்டுகிறார்கள் என்பதே போட்டி. ராஜஸ்தானிய போட்டியாளர்கள் இலகுவாக டர்பனைக் கட்ட, நீண்டு செல்லும் துணியை ஏனோதானோ என்று சுற்றிய வெளிநாட்டினர் எப்படி டர்பனை கட்டவேண்டும் என்று தெரியாமல் அசடு வழிய நின்றதை இன்று நினைத்தாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. 
""சிவா'' என்றேன்.
""என்ன?'' என்றார் என் கணவர்.
""எனக்கு ஒட்டகங்களையும் பிற கால்நடைகளையும் விற்கும் பகுதிக்குச் சென்று பார்க்க ஆசையாக இருக்கிறது'' என்றேன்.
விசாரித்ததில் அந்த இடம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்றனர். ஒட்டகம் இருக்கும் ஒரு கூண்டு வண்டியில் ஏறி அந்த இடத்தை நோக்கிப் பயணித்தோம். வண்டியை மூடியிருந்த துணியில் பலவிதமான கண்ணாடிகளும், எம்பிராய்டரியும் செய்யப்பட்டிருந்தன. ஒட்டகத்தின் கால்களில் கட்டப்பட்டிருந்த சலங்கைகளும், வண்டியின் ஓரங்களில் தொங்கிய சலங்கைகளும் சல், சல் என்று ஒலியெழுப்ப, அந்த பாலைவனத்தின் மண்ணில் ஒட்டகங்கள் கால்கள் பதியும்பொழுது, எழுந்த அசைவால் நாங்களும் ஆட, சூரிய அஸ்தமனம் தொடங்கி இருந்த அந்த வேளை, கைதேர்ந்த ஓவியனின் சித்திரமாய் மனதை சிலிர்க்க வைத்தது.
அப்பப்பா, இவ்வளவு ஒட்டகங்களை நான் ஒருசேர பார்த்ததே இல்லை. குட்டி ஒட்டகங்கள் அட்டைக்கரியாக இருந்தன. வளரும்போது முடியின் நிறம் மாறும் என்றார்கள். ராஜஸ்தானின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒட்டக வியாபாரிகள் இந்த புஷ்கர் மேளா சந்தைக்காக ஒட்டகங்களை ஓட்டி வந்திருந்தனர். எல்லா நேரத்திலும் பெரிசாக லாபம் கிடைத்துவிடாது என்றனர். ஒட்டகப் பாலில் டீயைப் போட்டு கொடுத்தபோது மறுக்காமல் வாங்கிக் குடித்தோம். அதற்காக பணத்தைக் கொடுத்தபொழுது வாங்க மறுத்ததுடன், "இவ்வளவு தூரம் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு இதுகூட செய்யக்கூடாதா' என்று கேட்டது, ஏழ்மையிலும் அவர்களுடைய விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்தது.
பசுக்கள், காளைகள், குதிரைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் என்று எத்தனை, எத்தனை வகைகள். வெள்ளை, கருப்பு, பழுப்பு, கருப்பில் வெள்ளைத் திட்டு, வெள்ளையில் பழுப்பு, கருப்பு என்று இயற்கையின் அற்புதப் படைப்பை வெளிக்காட்டி நின்ற அந்த கால்நடைகளின் அழகை என் நெஞ்சிலும், நினைவிலும் பதித்துக்கொண்டேன்.
நான்காவது நாள், குதிரைகளுக்கான அழகுப்போட்டி நடந்தேறியது. பிறகு புஷ்கர் மேளாவின் ஹைலைட்டான யாருடைய மீசை நீளமானது என்ற போட்டி நடைபெற்றது. அவ்வளவு நீளமான மீசைகளை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. 
ஒருவர் தன் கன்னங்களின் இரு பக்கங்களிலும் பன்களைப்போல மீசையை சுற்றி வைத்திருந்தார். மற்றொருவர் தன் மீசையை கயிறுபோல சுழற்றி காற்றில் பறக்கவிட்டார். குட்டை மீசை ஆனால் சுருளான மீசை, மார்புவரை, கைவரை தவழும் மீசைகள் என்று மீசைகளில் இவ்வளவு ரகங்களா என்று மலைத்தோம். பன்னிரெண்டு அடி நீளமுள்ள மீசையைக் கொண்டாரே கடைசியில் வென்றார்.
பானைகளைத் தலையில் சுமந்து, பழக்கம் இல்லாத புடவையில் வெளிநாட்டுப் பெண்கள் நடக்க, புடவை தடுக்க தலையில் இருந்த பானை நழுவி கீழே விழுந்து உடைய ஒரே வேடிக்கைதான் போங்க!
கார்த்திக் பெüர்ணமியும் வந்தது. குஜராத்தில் இருந்து வந்திருந்த ராஜஸ்தானிய குடும்பம் புஷ்கர் ஏரியில் சாஸ்திரிகளைக் கொண்டு பூஜை செய்தனர். எங்களையும் அந்த பூஜையில் கலந்துகொள்ள அழைத்தனர். எதிர்பாராதவிதமாக அந்த பூஜையில் கலந்துகொண்டு, புஷ்கர் ஏரிக்கு செய்த புனித ஆரத்தியையும் பார்த்தோம். 
பல்லாயிரக்கணக்கான மக்களோடு நாங்களும் புனித புஷ்கர் ஏரியில் நீராடினோம். பிறகு ஜெகத்பிதா பிரம்மதேவரின் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கினோம். பிரம்மாவின் வலதுபுறம் சாவித்திரி தேவியும், இடதுபுறம் காயத்திரி தேவியும் காட்சி அளித்தனர். கர்ப்பகிரகத்தை நோக்கி ஒரு பெரிய வெள்ளி ஆமை அமர்ந்திருந்தது. அதைச் சுற்றி நிறைய வெள்ளிக் காசுகள். 
இறந்துபோன தங்களுடைய உறவினர்களின் பிறப்பு, இறப்பு தேதிகளை அதில் பதித்து அன்பர்கள் காணிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி புஷ்கரின் மேளா ஆன்மிகத்தையும், கிராமப்புற கலைகளையும், பல விளையாட்டுகளையும், கால்நடைகளின் அருமை, பெருமைகளையும் வெளிப்படுத்தி உள்ளத்தைக் கவர்கிறது. 
(தொடரும்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT