முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஜப்பானிய நாடோடிக்கதை: பூனைகளைப் படமாக வரைந்த சிறுவன்

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் தொலை தூர கிராமம் ஒன்றில் வசித்து வந்த சிறுவனொருவன், மதப் போதகராக வேண்டுமெனப் பயிற்சிப் பெற்று

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:


முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் தொலை தூர கிராமம் ஒன்றில் வசித்து வந்த சிறுவனொருவன், மதப் போதகராக வேண்டுமெனப் பயிற்சிப் பெற்று வந்தான். அவனுக்கு பூனைகளைப் படம் வரைவதில் ஆர்வம் அதிகமிருந்தது. கோயில் சுவர், புத்தகங்கள், காகிதங்கள் என எது கிடைக்கிறதோ, எங்கெங்கு இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் பூனைகளைப் படங்களாக வரைவான்.

இந்தச் சிறுவனின் விசித்திரமான பழக்கம் தலைமை மத குருவுக்குப் பிடிக்கவில்லை. கோபமடைந்த அவர் அச்சிறுவனை அங்கிருந்து வெளியேறும்படி கூறினார். ""போவதற்கு முன் கடைசியாக உனக்கொரு அறிவுரை கூற விரும்புகிறேன். இரவு நேரங்களில் பெரிய இடங்களில் தங்காமல் சிறிய இடமாகப் பார்த்து தங்கிக் கொள்'' என்றார்.

தன் உடைமைகளை எடுத்துக்கொண்ட சிறுவன் அங்கிருந்து புறப்பட்டான். அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு மிகப் பெரிய கோயில் ஒன்று இருப்பதைக் கண்டான். அவன் சென்ற நேரம் மிகவும் இருட்டாக இருந்ததோடு, கோயிலின் சுற்றுப்புறத்தில் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. உள்ளே நுழையும் போது கோயிலுக்குள் ஏராளமான காகித திரைச் சீலைகள் இருப்பது தெரிந்தது. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்ததோடு உடனே படம் வரைய வேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது. தன்னிடமிருந்த வண்ணங்களையும், தூரிகைகளையும் எடுத்து காகித திரைச்சீலைகள் மீது தனக்குப் பிடித்தமான பூனை உருவங்களை வரையத் தொடங்கினான்.

அந்தக் கோயிலில் கோப்ளின் என்ற துஷ்ட தேவதை ஒன்று வசிப்பதும், அங்குள்ள மத குருக்களை அச்சுறுத்தி துரத்தியடித்ததும், அந்தத் துஷ்ட தேவதையைக் கொல்ல பல அரசர்கள் முயற்சித்தாலும் அது அவர்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை என்பது அச்சிறுவனுக்குத் தெரிந்திருந்தது.

சிறிது நேரம் கழித்து அச்சிறுவனுக்கு உறக்கம் வந்தது. தன்னுடைய தலைமை மதகுரு கூறியது நினைவுக்கு வரவே அந்தக் கோயிலுக்குள்ளேயே மறைவிடமாக ஒரு சிறிய இடத்தைத் தேடிப்பிடித்து உறங்கத் தொங்கினான்.

அவன் உறங்கத் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் உடலை உலுக்கும் உறுமலுடன் கூடிய பயங்கரமான சப்தம் கேட்டது. விழித்தெழுந்த சிறுவன் மறைவிடத்தை விட்டு வெளியே சென்று பார்க்க முடியாமல் பயத்தில் உறைந்து போனான். விடிந்தவுடன் பார்க்கலாமென்று நினைத்து மீண்டும் உறங்கத் தொடங்கினான். காலையில் வெளிச்சம் பரவிய உடன் எழுந்து வந்து பார்த்த போது, அச்சிறுவனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

கோயிலுக்குள்ளும், வெளிப்புறத்திலும் ஏராளமான ரத்தம் பரவி உறைந்து கிடந்தது. பிரகாரத்தில் நடுவே மிகப்பெரிய ராட்சத எலி ஒன்று இறந்து கிடந்தது. அதுதான் அந்தக் கோயிலுக்குள் மத குருக்களை மிரட்டி வெளியேற்றிய துஷ்ட தேவதை கோப்ளின் என்பது அச்சிறுவனுக்குத் தெரிந்தது. அந்தக் கோயிலுக்குள் இருந்த காகித திரைச்சீலைகளில் அவன் வரைந்த பூனைகளின் வாயில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ராட்சத எலி உருவத்தில் இருந்த துஷ்ட தேவதையை அந்தப் பூனைகள் கடித்துக் குதறிச் சாகடித்திருக்கின்றன என்பது புரிந்தது.

இந்த அதிசய சம்பவம் சிறிது நேரத்திற்குள் கிராமம் முழுக்கப் பரவியது. துஷ்ட தேவதையிடமிருந்து கோயிலை மீட்டெடுத்த அச்சிறுவனை ஊர் மக்கள் ஒன்று கூடி பாராட்டினர். கோயில் மதகுருக்கள் அச்சிறுவனைத் தத்தெடுத்து வளர்த்ததோடு மதபோதனைகள் அளித்து அவனை மிகச்சிறந்த ஒவியனாக உருவாக்கி புகழ் பெறச் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.